உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

கல்லுாரி மாணவரின் புது முயற்சி!கல்லுாரிகள் மூடிக்கிடந்த, 'கொரோனா' காலத்தில், வீட்டில் வெறுமனே இருந்து நேரத்தை போக்கிடாமல், வருமானம் தேடும் வழியை தேர்ந்தெடுத்து, குடும்ப தேவைகளை சமாளித்தார், மாணவர் ஒருவர்.கோவை அருகே உள்ள பொள்ளாச்சியில், இளநீர் அதிகம் விளையும். அங்கிருந்து டெம்போவில் எடுத்து வந்து இறக்கும், மொத்த இளநீர் வியாபாரியிடம், 1,000 இளநீரை வாங்கி வைத்து, கிராம ஊழியர் ஒருவர் மூலம் காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை விற்பனை செய்கிறார்.ஊழியரின் சம்பளம் போக, கணிசமான தொகை மாணவருக்கு கிடைக்கிறது.'கல்லுாரி மாணவரான நீங்க, இளநீர் வியாபாரம் எப்படி...' என்றேன்.'இந்த வெயில் காலத்தில், இளநீருக்கு அதிக தேவை இருக்கிறது. தேடி வந்து வாங்கி அருந்துகின்றனர். படித்து முடித்து, ஆபீஸ் வேலை செய்வதை விட, இது, அதிக வருவாயை தருகிறது. ஆகவே, இன்னும் சில இடங்களில், கிளைகளை அமைக்க எண்ணியுள்ளேன். 'அதுமட்டுமல்லாமல், இப்போது, இளநீர் சீவ, மிஷின் வந்துள்ளது. மட்டையை சீவி, இளநீரை ஒரு குவளையில் நிரப்பி கொடுத்து விடும்; கைப்படாமல் சுகாதாரமாக செய்யலாம். அதையும் வாங்கி, முழு நேர தொழிலாக செய்யப் போகிறேன்...' என்றார்.வேலையில்லை என்போர், இப்படிப்பட்ட குறைந்த முதலீட்டில், அதிக வருவாய் தரும் தொழிலை செய்யலாமே!- வெற்றிச்செல்வன், கோவை.நாங்களும் செய்வோமே!சென்ற சில மாதங்களாக எங்கள் குடியிருப்பு வளாகத்தினுள், டி.வி.எஸ்., 50 வாகனத்தில், நான்கு சிலிண்டர்களை மாட்டியபடி, வீடுகளுக்கு சமையல் கேஸ் வினியோகம் செய்து வருகிறார், 30 வயது மதிக்கத்தக்க ஒரு திருநங்கை.ஒருநாள் எங்கள் வீட்டுக்கு, சிலிண்டர் கொண்டு வரும்போது, 'கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்வது கடினமான வேலை அல்லவா... நீங்க எப்படி இந்த வேலையில்...' என்றேன்.'வேலைன்னு வந்துட்டா, கடினமான வேலை என்ன, இலகுவான வேலை என்ன... சமையல் கேஸ் கம்பெனியில் வேலை கேட்டேன். வீடுகளுக்கு சிலிண்டர், 'டோர் டெலிவரி' பண்ணுற வேலை கொடுத்தாங்க; போதுமான சம்பளமும் தர்றாங்க. சந்தோஷமா வேலை பார்க்கிறேன்...' என்றார், திருநங்கை.'உழைப்பே உயர்வு தரும்...' என, அவரை வாழ்த்தினேன்.- டி.ஜெயசிங், கோவை.நுாலகத்துக்கும் இடம் ஒதுக்கலாமே!அடுக்கு மாடி குடியிருப்பான, 'கேட்டட் கம்யூனிட்டி'யில், நண்பர் வாங்கியிருந்த புதிய இல்லத்திற்கு சென்றிருந்தேன். நண்பர் வீடு இருந்த பிளாக்கில், சுமார், 150 வீடுகள் இருந்தன. அதைப்போல அந்த வளாகத்தில், ஏழெட்டு பிளாக்குகள்.'நீச்சல் குளம், சமூக நலக்கூடம், குழந்தைகள் பூங்கா, பெரியவர் பூங்கா, முதியோர் நடை பயிற்சிக்காக தனி நடை பாதை, தடையில்லா மின்சாரம், லிப்ட் வசதி, குழாய் வழி எரிவாயு, மொட்டை மாடியில் காய்கறி தோட்டம், 'ஜிம்' என்று எல்லாமே உள்ளது. 'இவ்வளவு வசதிகளை செய்து கொடுத்தவர்கள், சுமார், 150 வீடுகள் உள்ள ஒவ்வொரு பிளாக்கிற்கும், நுாலகத்திற்கென பொது இடம் ஒன்றை ஒதுக்கியிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்குமான நாளிதழ், வார, மாத இதழ்களையும் வாங்கிப்போட்டு, அவரவர்களின் வசதிப்படி படித்துக் கொள்ள முடியும்.'அதோடு, அறிவியல், பொது அறிவு, இலக்கிய புத்தகங்களையும் மாதா மாதம் வாங்கிச் சேர்த்து, ஒரு நல்ல நுாலகத்தை உருவாக்கி விடலாம். அவ்வப்போது, கலந்துரையாடல் நிகழ்ச்சி, குழந்தைகளுக்கு, இந்தியாவின் பல மொழி பயிற்சி, கற்பனை திறன் போட்டிகள் என, வைத்து அசத்தலாம் இல்லையா...' என்றார், உற்சாகத்துடன்.'நியாயம் தான்... முன்பெல்லாம் சிறிய வீடுகளில் கூட புத்தகங்கள் வைப்பதற்கென தனி மர பீரோ கட்டாயம் இருக்கும். இப்போது, அனேக வீடுகளில் புத்தகங்கள் நீங்கலாக மற்ற எல்லா எலெக்ட்ரானிக் பொருட்களும் நிரம்பி வழிகின்றன. வாசிப்பு பழக்கமும் குறைந்து வருகிறது. 'இம்மாதிரியான பிரமாண்ட குடியிருப்புகளை உருவாக்குவோர், நுாலகத்திற்கென தனி இடத்தை ஒதுக்கி தந்தால், குறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை படிப்படியாக மீட்டெடுக்கலாம்...' என, என்னுடைய ஆதங்கத்தையும் நண்பரோடு பகிர்ந்து, விடைபெற்றேன்.தமிழகமெங்கும், அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்குபவர்கள், நுாலகத்திற்கென தனி இடத்தை ஒதுக்க முன் வருவரா!- என். கிருஷ்ணமூர்த்தி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !