உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பாவம் பார்க்காதீர்; பதம் பார்த்து விடுவர்!நானும், மனைவியும், கல்லுாரியில் விரிவுரையாளர்களாக உள்ளோம். எங்கள் வீடு, மதுரை புறநகர் பகுதியில் உள்ளது. நாங்கள் வேலைக்கு சென்று விட்டால், என் அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார்.ஒருநாள், எங்கள் பகுதியில் நல்ல மழை. ஒரு பெண், கையில் குழந்தையுடன் மரத்தடியில் நிற்பதை, ஜன்னல் வழியாக பார்த்த அம்மா, கேட்டை திறந்து, போர்டிகோவில் இருக்கச் சொல்லி, சமையலறைக்கு சென்று விட்டார். ஒரு மணி நேரம் சென்றதும், வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்க திறந்துள்ளார், அம்மா. அந்த பெண்ணுடன் ஒரு ஆண் நிற்பதை பார்த்து, 'என்னம்மா, மழை நின்று விட்டது. கிளம்புறியா...' என்று, கேட்கும் முன், அந்த ஆண், சட்டென என் அம்மாவின் வாயை பொத்தியுள்ளான்.அந்த பெண், கை குழந்தையை கீழே விட்டு விட்டு, கால் இரண்டையும் பிடித்து, வீட்டின் உள்பக்கம் வந்து, அம்மாவின் கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர். நகை மற்றும் டேபிள் மீது இருந்த மணிப்பர்சை எடுத்து சென்றுள்ளனர்.மாலை வீடு திரும்பிய நாங்கள், விஷயம் அறிந்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் வெளியே உள்ள, சி.சி.டி.வி., பதிவை, என் அம்மாவிடம் காட்டி, அவர்களை அடையாளம் காட்ட கூறினர், போலீசார்.அவர்கள் ஹிந்தி பேசியதாக என் அம்மா கூறியதை வைத்து, ஊருக்கு வெளியில் பொம்மைகள் செய்து விற்கும் அவர்களை நோட்டம்விட்டு, பிடித்து, பறிகொடுத்த நகை மற்றும் பணத்தை மீட்டு கொடுத்தனர், போலீசார்.பெண்கள் தனியாக இருக்கும்போது, வீட்டின் முன் கேட் மற்றும் முன் கதவை உள் பக்கமாக பூட்ட வேண்டும். யார் கதவை தட்டினாலும், பாவம் பார்த்து, கதவை திறக்காதீர்கள். நகை பறித்ததால் மீட்டாயிற்று, கழுத்தை அறுத்திருந்தால்... நாம் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.— எ. வேல்முருகன், மதுரை.ஆசிரியர்களின் துணை நமக்கு தேவை!அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறான், நண்பன். 'உனக்கென்னப்பா, நீ வாத்தியார். நல்ல வேலை, நல்ல சம்பளம்...' என்று, எப்போதும் கிண்டல் செய்வேன். இப்போதெல்லாம் அப்படி சொன்னால், கோபத்தில், 'வாத்தியார் வேலை பார்க்கறதுக்கு, கூலி வேலைக்கு போகலாம்; செய்யிற வேலைக்கு சம்பளம் வாங்கிய திருப்தியாவது இருக்கும்.'பாடம் எடுக்கவும் விடமாட்டேன்றானுங்க, படிக்கிற பிள்ளைங்களையும் கவனிக்க விடமாட்டேன்றானுங்க... போர்டுல எழுத திரும்பினாலே, நரி மாதிரி ஊளை இடறானுங்க... திட்டினா, முறைக்கிறானுங்க.'தலைமை ஆசிரியரிடம் புகாரளித்தால், 'நான் மட்டும் என்னப்பா பண்ண முடியும், பெற்றோர்களை கூப்பிட்டு பேசியும் பலனில்லை. வகுப்புக்கு போய், நீங்க பாட்டுக்கு பாடம் எடுங்க, முடியலையா வந்துடுங்க...'ன்னு சொல்றாரு. 'நாங்க உட்காரும் நாற்காலியில், பாக்கு போட்டு துப்புவது, எங்க வண்டிகளை அடிச்சு உடைக்கிறது, எங்க வீடு முன், பட்டாசு வெடிக்கிறதுன்னு இருக்கிறாங்க. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். 'மிகவும் ஆசைப்பட்டு, கஷ்டப்பட்டு படிச்சு வாங்கிய வேலை இது. பாடம் எடுக்காமலேயே சம்பளம் வாங்கி, அதில் சாப்பிடும்போது, மனசு வலிக்கிறது. மாணவர்களை சொல்லி என்ன பிரயோஜனம், பெற்றோர் தான், பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்று கண்காணிக்க வேண்டும்.'நங்கள் கண்டித்தால், எங்களிடம் சண்டைக்கு வருகின்றனர். பிள்ளைகள் எப்படி வாத்தியார்களை மதிப்பர்...' என்றான்.மாணவ செல்வங்களே... ஆசிரியரை கிண்டல் செய்வது, பெருமை என்று நினைக்காதீர்கள். வாழ்க்கையில் முன்னேற, அவர்களின் துணை நமக்கு தேவை என்பதை உணர்ந்து படியுங்கள்!சதீஷ்குமார், சென்னை.புத்தாண்டில் பகை முறிப்போம்!ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று, ஒரு வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார், நண்பர்.அதாவது, சந்தர்ப்ப சூழ்நிலையால், மனக்கசப்பு ஏற்பட்டு, பேசாமல் ஒதுங்கி விடுகின்றனர், உறவுக்காரர்கள், நண்பர்கள். இவர்கள் அனைவருக்கும், தொலைபேசியிலும், முடிந்த அளவுக்கு நேரிலும் சென்று, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, சிறிது நேரம் மனம் விட்டுப் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.இதனால், மனக்கசப்பு மற்றும் பகை முறிவதுடன், நிம்மதியாக வாழவும் முடிவதாக கூறினார். இப்போது அவருக்கு எதிரிகளே இல்லை எனும் அளவுக்கு அத்தனை பேரையும், அன்பால் வீழ்த்தி விட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், முன்பு பகையாளியாக இருந்தவர்கள் தான், இப்போது முதல் ஆளாக அவருக்கு, புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.அன்பு ஒருபோதும் தோற்பதில்லை தானே. நாமும் இந்த வழக்கத்தை பின்பற்றலாமே!பி. சரவணன், ராஜபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !