செய்வதும் கற்பதும்!
பகல் 12:00 மணிக்கு, டவுனுக்குள் நுழைந்தது அந்த பஸ்; எல்லாரும் இறங்கினர். ஊர்க்காரர்களுடன், சோமனும் வந்திருந்தான். அவர்களுக்கு, புற நகரில், வீட்டு மனை ஒன்றை, பார்க்க வேண்டி இருந்தது.'சோமா... நீயும் வாயேன்... சும்மாதானே இருக்கே. வந்து இடத்தைப் பார்த்து, உன் அபிப்ராயத்தையும் சொல்லேன்...' என்று, சோமனை அழைத்திருந்தனர். 'சும்மாதானே இருக்கே' என்ற வார்த்தை, சோமனை சுட்டது. என்றாலும், அதுதானே உண்மை. சோமன் வீட்டில், வறுமை தாண்டவமாடுகிறது.அவனுக்கு, உடல் நிலை நன்றாக இருந்த போது, கூலிக்கு, நெசவுத் தொழிலுக்கு, போய்க் கொண்டிருந்தான்.வாரத்துக்கு, ஆயிரம், ஆயிரத்து நூறு கிடைக்கும். அதைக் கொண்டு, வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு வாங்கிப் போட்டான். குடும்பமும் பெரிது. வயதான அப்பா, அம்மா மற்றும் மனைவி, இரண்டு குழந்தைகள். பெரியவனுக்கு, பதினாறு வயது; இளையவனுக்கு பத்து வயது. வீட்டைத் தவிர, வேற சொத்து இல்லை. இழுத்துக்கோ, புடிச்சுக்கோ என்று தான், குடும்பம் ஓடியது. இந்த நிலையில் தான், வேலை முடிந்து, வீடு திரும்பிய சோமன் மீது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அடித்துப் போட்டு, நிற்காமல் சென்று விட்டது. படுக்கையில் விழுந்தான் சோமன். அவன் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த வீடு, ஸ்தம்பித்து போனது. சிகிச்சை செலவும் சேர்ந்து கொண்டது. போலீசாரால், வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், நஷ்டஈடும் கிடைக்கவில்லை. மனைவி, அம்மா, அப்பா கூலி வேலைக்கு போகத் துவங்கியதில், கொஞ்சம் அடித்து, பிடித்து சமாளித்தனர்.ஒரு வேளை சாப்பாட்டிற்கு, உத்தரவாதம் இருந்தது.சோமனுக்கு, காயங்கள் குறைந்து, நடமாட முடிந்தது என்றாலும், வேலை பார்க்கும் சக்தி போய் விட்டது. பிள்ளைக்கோ சுட்டுப் போட்டாலும், படிப்பு வரவில்லை. மூத்த மகன் பாபுவால், ஒன்பதாம் வகுப்பை தாண்ட முடிய வில்லை. இரண்டு ஆடுகளை, மேய்த்து வருகிறான். சோமனுக்கு வாழ்க்கை இருண்டு தான் கிடக்கிறது. எந்த திசையிலிருந்து, ஒளிக்கீற்று வரும் என்று, புரியாத திகைப்பு.அப்போதுதான், 'எப்படி இருக்க சோமா...' என்று, கேட்டபடி, வந்தான் ரகுநாதன். அதே ஊர்க்காரன் தான். டவுனில், பத்திரப் பதிவு அலுவலகம் எதிரில், கடை போட்டு, பத்திரங்கள், மனுக்கள் எழுதிக் கொடுப்பது, ஸ்டாம்புகள் விற்பது என்று எல்லாம் கலந்து, ஒரு தொழில் செய்கிறான்.மாதம் ஒரு முறை, ஊர்ப்பக்கம் வருவான். இங்கு, ஒரு தென்னந்தோப்பும், வீடும் இருக்கிறது. தோப்பை குத்தகைக்கும், வீட்டை, வாடகைக்கும் விட்டிருந்தான். அதை, மேற்பார்வை பார்த்து விட்டு, அப்படியே, உறவு, நட்புகளுக்கு தரிசனம் கொடுத்து, யார் வீட்டிலாவது, உரிமையுடன் கேட்டு, ஒரு வேளை சாப்பிட்டு விட்டு, போய் விடுவான். அவனும், சோமனும், சிறு வயதில், ஒன்றாக விளையாடியவர்கள். அப்போதும், சோமன் வீட்டில் சிரமம்தான் என்றாலும், வாலிபத்தில், சோமன், பணக்கார வீட்டுப் பிள்ளை போல, வாட்ட சாட்டமாக இருந்தான்.'பார்வைக்கு நல்லா இருக்கேடா சோமா. ஏதாவது, வசதியான இடத்திலிருந்து, பொண்ணு வந்தால், வளைச்சு போட்டு, செட்டிலாயிடு. இந்த அழகும், வசீகரமும் தான் உனக்கு வாய்ப்பு. கோட்டை விட்றாத...' என்று, அறிவுறுத்துவான் ரகுநாதன்.அப்படிதான் வந்தது. வாத்தியார் ஒருவரின், ஒரே மகள், அவன் மீது, மையல் கொண்டாள். வாத்தியாரும் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தார்.சோமன் பிடிவாதமாக மறுத்து, காதல் என்ற பெயரில், பானுவை மணந்தான். அவர்களும் ஏழைகள்.'சரி, குடும்பஸ்தனாயிட்டே. நெசவுக் கூலியை நம்பி, காலம் தள்ள முடியுமா... வாயேன். டவுனில், வேலை பார்த்து வைக்கிறேன். இல்லைனா, சின்னதா, ஏதாவது, வியாபாரம் ஆரம்பிச்சு தர்ரேன்...' என்று, அழைத்தான் ரகுநாதன்.எதனாலோ, ஊரை விட்டுப் போக, மனம் இல்லாமல் இருந்து விட்டான் சோமன்.'சுய புத்தி இருக்கணும் இல்ல, சொல் புத்தி யாவது இருக்கணும். உலகம் எப்படி போய்க் கிட்டிருக்குன்னு பார்க்க மாட்டியா... ஊருக்குள்ளே ஒவ்வொருத்தரும், திரவியம் தேட, திரை கடல் தாண்டி ஓடிக் கிட்டிருக்காங்க. நீயானால், குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக்கிட்டு, உட்கார்ந்துகிட்டி ருக்கியே...' என்று, நொந்து கொள்வான் ரகுநாதன்.விபத்துக்குள்ளான போது, வந்து பார்த்து, அக்கறையுடன் சில மாதங்களுக்கு, பண உதவியும் செய்தான். சோமனுக்கு தோன்றும், 'அவன் அழைத்தபோதே, அவனுடன் போயிருக்கலாமோ, தப்பு பண்ணிவிட்டோமோ' என்று. தான் பயன்படுத்திக் கொள்ளாத ஒரு வாய்ப்பை, தன் மகனுக்காவது, ரகுநாதன் கொடுக்கட்டும். அவன் வாழ்க்கையாவது விடியட்டும், என்று தீர்மானித்திருந்தான்.ரகுநாதன், ஒருமுறை, இவனை பார்க்க வந்த போது, 'அந்த நாள்ல என்னைக் கூப்பிட்டே. 'டவுனுக்கு வா, பிழைக்க வழி சொல்றேன்'னு. நான் தான் பயன்படுத்திக்கலை. இப்போ, என் பிள்ளையை அனுப்பறேன். எனக்கு செய்ய நினைச்ச நல்லதை, அவனுக்கு செய்வியா ரகுநாதா...' என்று கேட்டான்.'என்னடா என் கூட வர்றியா...' என்று ரகுநாதன் கேட்க, பாபு, ஆடுகளைப் பார்த்தான்.'அதுகளை நாங்கள் பார்த்துக்கறோம். நீ இவருடன் கிளம்பு...' என்று, சோமன் சொல்ல, தலையசைத்தான். 'பையனை என் பொறுப்புல விட்டுட்டேல்ல. இதோடு, அவனை மறந்துடணும். ஒரு ரெண்டு வருஷத்துக்காவது, அவனை பார்க்காம, பேசாம இருக்கணும். அவன் வீட்டு சிந்தனையே இல்லாம, நான் சொன்னபடி நடந்தால் தான், அவனுக்கு, வேலையில் கவனம் போகும். என்ன சொல்ற...' என்று கேட்டான் ரகுநாதன். வீட்டில், முணு முணுத்தனர்.'நிபந்தனை போடறாரே... அவன கொஞ்சம் நேரம் காணலைன்னாலும், தவிச்சு போவோமே. புள்ளையை அங்க அனுப்பிட்டு, வாரத்துக்கு ஒரு முறையாவது, பார்க்கலைனா எப்படி... அப்படி என்ன, மிலிட்டரி வேலையிலா சேர்க்கப் போறாரு...' சோமனின் மனைவி, அரற்றினாள்.'பாபு படிச்ச படிப்புக்கு, அங்க ஆபீசர் உத்தியோகமா கிடைக்கப் போகுது. இங்கயே ஆடு, மாடப் பார்த்துக்கட்டும். எல்லார்க்கும் விடியும்போது, அவனுக்கும் விடிஞ் சுட்டு போகுது...' என்று, வீட்டு பெரியவர்கள் கூறினர்.'நான் தான் கெட்டேன். இவனுக்காவது, ஒரு வழி பிறக்கட்டுமே...' என்று கூறி, பிடிவாதமாக, மகனை அனுப்பி வைத்தான் சோமன். அடுத்த சில மாதங்களாகவே, ரகுநாதன் ஊர் பக்கம் வரவில்லை. வீட்டில், ஏதேதோ சமாதானம் சொன்னாலும், உள்ளுக்குள் தவிப்பாக இருந்தது.பையன் என்ன செய்கிறான், எப்படி இருக்கிறான் என்று அறிய சோமனுக்கு ஆவல். அவனை விடவும் பெற்றவளுக்கு. நாமாக போனால், ரகுநாதன் ஏதும் கோபித்துக் கொள்ளப் போகிறான் என்று, மவுனம் காத்துக் கொண்டிருந்தவனுக்கு, அங்கு நிலம் பார்க்க போகிறவர்களின் அழைப்பு, வரப்பிரசாதமாக அமைந்தது. மகனை, எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில், புறப்பட்டு வந்து விட்டான். ரகுநாதனைப் பார்த்தால், 'ஏன் இங்கு வந்தே...' என்று கோபப்பட்டு, 'இந்தா... உன் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு போ...' என்று, சொல்லி விடுவானோ என்று ஒரு பயம். என்ன செய்யலாம் என்று யோசிக்கையில், 'மனை இருக்குமிடம் இங்கிருந்து தொலைவு. ஆட்டோ பிடிச்சு போக வர, ஒரு மணியாகும். பசி வேளையா இருக்கு. சாப்டுட்டு போயிடலாம். லேட்டானாலும், இருந்து பொறுமையா பார்த்துட்டு வர ஏதுவாயிருக்கும்...' என்று, அழைத்து வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.அதுவும் சரியென்று, ஓட்டல் நோக்கி நடந்தனர். நடக்கும்போது ஒருவர் கேட்டார், ''ஏன் சோமா, ரகுநாதன், உன் மகனை, இந்த ஊர்லதானே வேலைக்கு சேர்த்திருக்கான். எந்த இடமுன்னு சொல்லு, அவனையும் ஒரு எட்டு பார்த்திடுவோம்.''''எனக்கும் அந்த எண்ணம் தான். ஆனா, அவன் எந்த வேலையில், எந்த இடத்தில் இருக்கான்னு ரகுநாதன் சொல்லலை. ஒருவேளை, தன் கூடவே உதவிக்கு வச்சிக்கிட்டிருக்கானோ என்னவோ... மனையைப் பார்த்துட்டு வரும்போது, அப்படியே ரெஜிஸ்தாராபீஸ் பக்கம், ஒரு பார்வை பார்த்துட்டு போகலாம்,'' என்று சொல்ல, மற்றவர்களும், 'ஆமாம், மனையை பார்த்ததும், அது பற்றி, ரகுநாதனிடம் விசாரிக்க வேண்டியிருக்கு. நாங்களும் வர்றோம்...' என்றபடி, ஓட்டலை நெருங்கினர். அது கொஞ்சம் பெரிய, உயர்தரமான ஓட்டலாக இருந்தது. கூட்டம் மொய்த்தது. டோக்கன் வாங்கி, உள்ளே சென்றனர்.இடம் பிடிக்க, காத்திருக்க வேண்டியிருந்தது.சோமனுக்கு பிரமிப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய ஓட்டலை, இன்று தான், முதன் முதலாக பார்க்கிறான். கல்யாண பந்தி மாதிரி, கூட்டம். சாப்பாட்டு இலையில், ஆறு வகை உணவு. 'இன்னைக்கு, இங்கு சாப்பிட கொடுத்து வச்சிருக்கு. முடிந்தால், குழந்தைகளுக்குக் கொஞ்சம் கொண்டு போக வேண்டும்...' என்று நினைத்தபோது, ''சோமா, அங்க பாரு... உம் மகன் பாபுல்ல அது,'' என்று பக்கத்திலிருந்தவர் சுட்டிக்காட்ட, ''எங்கே எங்கே,'' என்று, ஆர்வமுடன் பரபரத்தவன், மகனைப் பார்த்ததும், துடித்துப் போனான்.அங்கே பாபு, அரை டவுசரும், தலையில் குல்லாயுமாக பக்கெட்டில், எச்சில் இலைகளை எடுத்துப் போட்டு, டேபிளை, சுத்தம் செய்து கொண்டிருந்தான்.'யே... இங்க வா. இந்த டேபிளைக் சுத்தம் பண்ணு,' 'என்னடா இலை எடுக்கற. எச்சில் சோறு வழியுது' 'ஏ அங்க போ...' என்று, ஆளாளுக்கு விரட்டிக் கொண்டிருந்தனர். அவனும் இங்கும், அங்குமாக ஓடி, இலையை எடுத்துக் கொண்டிருந்தான்.''பாபு...'' அலறினான் சோமன்.அப்பாவைப் பார்த்து, சந்தோஷமானான் பாபு. சோமனோ, மகனிடமிருந்த பக்கெட்டை பாய்ந்து, பிடுங்கி, கீழே எறிந்து விட்டு, கையைப் பற்றி, வெளியில், 'தரதர' வென்று இழுத்துப் போனான்.''எங்கடா இருக்கான் அந்த ரகுநாதன்...''''அப்பா...''''ஒண்ணும் பேசாதே... இடத்தைக் காட்டு,'' என்று கர்ஜித்தவன், ஓட்டமும், நடையுமாக ரகுநாதன் இருந்த இடத்தை அடைந்து, எடுத்த எடுப்பில், ''மனுஷனா நீ... ஒரு நண்பனா இருந்து, எனக்கு, இப்படி ஒரு கேவலத்தை செய்ய, உனக்கு எப்படி மனசு வந்தது? என்னை அசிங்கப்படுத்த, எத்தனை நாள் கங்கணம் கட்டியிருந்தே... சோத்துக்கு வழி இல்லேன்னு, என் பிள்ளையை, உன்னோடு அனுப்பலை. ஒரு கவுரவமான வேலை கத்துக்குடுப்பேன்னு தான் அனுப்பினேன். நீ என்னடான்னா, எச்சியிலை எடுக்க வச்சிருக்கே. பசியோடு இருந்தாலும், மானம், மரியாதையோடு இருக்கிறவன் நான். என் பிள்ளையை... ச்சே... இதுவே, உன் பிள்ளையாய் இருந்தால், இப்படி, எச்சில் இலை எடுக்க விட்டிருப்பியா... ஏழைன்னால் உனக்கு இளக்காரமா போச்சா...'' என்று, குமுறிக் கொட்டினான் சோமன்.''சோமன். கொஞ்சம் பொறு. வா இப்படி உட்கார்...'' என்று, சோமனை சமாதானப்படுத்த, ரகுநாதன் எடுத்த முயற்சி வீணானது. கடும் கோபத்தில் இருந்த சோமன்...''போதும். உன் பேச்சும். உபசாரமும். உன்னையெல்லாம் நம்பி, பிள்ளையை ஒப்படைச்சதுக்கு, எனக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும். கேவலப்படுத்திட்டியே, நம்ம நட்பையே கொச்சைப்படுத்திட்டியே!''''சோமா, முதல்லேயே சொன்னேன். பையனை என்கிட்டே ஒப்படைச்சுட்டே. அவனைப் பத்தி ஏதும் கண்டுகொள்ள வேண்டாம். அவனை ஒரு ஆளாக்கிக் காட்டறேன்று சொன்னேன்,' என்று ரகுநாதன் பேசத் துவங்க, கை காட்டி தடுத்து, ''போதும். நீ எதுவும் சொல்ல வேணாம். அதான் பார்த்தேனே... நீ ஆளாக்கும் லட்சணத்தை. எச்சிலை எடுக்கிறதை... நீ அவனை, பிச்சை எடுக்க விட்டாலும் விடுவே. உன்னை நம்பினதுக்கு நல்ல பலன். வாடா...'' என்று, மகனை இழுத்துக் கொண்டு நடந்தான்.''அவன் தான், எதையோ மனசுல வச்சு, வஞ்சம் தீர்க்க, உன்னை இலை எடுக்க விட்டான்னா, உனக்கு அறிவில்லையா... இந்த வேலையெல்லாம் செய்ய மாட்டேன்னு, ஊருக்கு திரும்ப வேண்டியது தானே... எதுக்கு, அந்த வேலையை செய்தே...'' என்று, மகனை கடிந்து கொண்டான் சோமன்.''அவர் என்னை வேலை செய்யச் சொல்லல அப்பா.''''அப்ப, நீயாவே போய், 'நான் நல்லா இலை எடுப்பேன். எனக்கு வேலை கொடுங்கன்'னு கேட்டியாக்கும்.'' ''அவர் தான், ஓட்டல்ல சேர்த்தார். வேலை பார்க்க இல்லை. வேலை கத்துக்கறதுக்கு,' என்றான் பாபு.நடந்து கொண்டிருந்த சோமன் நின்று, மகனைப் பார்த்தான். ''என்னடா சொல்ற?'''ஆமாம்பா... 'உன்னை வேலை செய்யறதுக்காக சேர்க்கலைடா பாபு. வேலை கத்துக்கணும் நீ. அதுக்காகத்தான் சேர்த்து விடறேன். சின்ன வயசுல தான், எதையும் சட்டுனு புடிச்சுக்க முடியும். ஒரு ரெண்டு வருஷத்துக்கு, வேலையை எவ்வளவு கத்துக்க முடியுமோ, அவ்வளவு கத்துக்க. வெளியில வந்ததும், சாப்பாட்டுக் கடை போட, ஏற்பாடு பண்றேன். அழிவில்லாததும், அத்தியாவசியமானதுமான தொழில் சோற்றுக் கடை தான். இதுக்கு, அதிக படிப்பு வேணாம். தொழிலில் தரமும், சுத்தமும் இருந்தா போதும். பசிக்கு சோறு போடும், அன்னலட்சுமி வேலை. தெருவோரமா கடை போட்டாலும் சரி, மெஸ் நடத்தினாலும் சரி. பிழைச்சுக்கலாம். ஒரு பிடி பிடிச்சால், எங்கயோ கொண்டு போயிடும். உனக்கு இந்த தொழில், ரொம்ப சரியாயிருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆனால், உனக்கு பிடித்திருந்தால் மட்டுமே செய். இல்லைனா, வேற தொழில் பார்க்கலாம்'ன்னு சொன்னார். ''அவர் சொன்னது போல், இது நல்ல தொழிலுப்பா. சேர்ந்த சில நாட்களிலேயே, எனக்கு ஆர்வம் ஏற்பட்டுடுச்சு. இலை எடுக்கறது கேவலமில்ல அப்பா. அது தான், இந்த தொழிலுக்கு பிள்ளையார் சுழி. முதலாளிகிட்டருந்து, சப்ளையர், சமையல்காரர்ன்னு எல்லாரையும் தெரிஞ்சுக்க முடியுது. மூணு வேளையும் சோறு போட்டு, சம்பளமும் கொடுத்து, எதிர்காலத்துக்கு வழியும் காட்டுறாங்கன்னா, இதை விட, வேற எந்த வேலை பெரிசுன்னு சொல்லுங்கப்பா,'' என்று கேட்டான் பாபு.சோமன் அயர்ந்து போனான். மகனின் தெளிவான, தீர்க்கமான பேச்சு, அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தலையில், 'மடேர் மடேர்' என்று, அடித்துக் கொண்டான்.''இதை, முதல்லயே சொல்லித் தொலைக்கக் கூடாதா... நான் தான் கூமுட்டை, அவசரக் குடுக்கை. நீயாவது கொஞ்சம் நிதானிச்சு சொல்லியிருக்கலாமே... வாடா, அவன் கால்ல விழுந்தாவது, உன்னை அவன்கிட்ட ஒப்படைச்சுடறேன்,'' என்று, மகனை மீண்டும், ரகுநாதன் இடத்தை நோக்கி, இழுத்துக் கொண்டு நடந்தான் சோமன்.படுதலம் சுகுமாரன்