ஆண்டவனின் அருளை பெற...
எண்ணத்திலும், செய்யும் செயலிலும் உறுதியான பிடிப்பு இருந்தால், எண்ணியதை அடையலாம். காவல்துறையில் சாதாரண காவலராக பணிபுரிந்தார், ராமகிருஷ்ண தாஸ். ராம பக்தியில், தலை சிறந்தவர்; ராமாயண சொற்பொழிவு எங்கு நடந்தாலும், அதைக் கேட்க போய் விடுவார். அவரின் ராம பக்தியை ஊரே புகழ்ந்தது. ஒருநாள்... வீட்டின் அருகில், ராமாயணக் கதாகாலட்சேபம் நடப்பதை அறிந்து, கேட்கப் போய் விட்டார்.நிகழ்ச்சி முடிந்தது. அப்போது தான், 'அடாடா... இன்று, நமக்கு காவல் நிலையத்தில், வேலை போட்டிருக்கின்றனர். அதை மறந்து, இங்கு ராமாயணம் கேட்க வந்து விட்டேனே...' என்று, ராமகிருஷ்ண தாஸுக்கு நினைவு வந்தது.அவசர அவசரமாக வீடு திரும்பி, சீருடையை அணிந்து, காவல் நிலையத்திற்கு விரைந்தார். இவர் போன நேரம், நிலைய உயர் அதிகாரி ஆங்கிலேயர், தன் அறையில் இருந்தார். அதிகாரியிடம் போய், 'தயவுசெய்து, என்னை மன்னிக்க வேண்டும். இன்று, நான் வேலை பார்க்கத் தவறி விட்டேன். வேலையை மறந்து, ராமாயண கதாகாலட்சேபம் கேட்கப் போய் விட்டேன். தயவுசெய்து, மன்னியுங்கள் ஐயா...' என, பணிவோடு வேண்டினார், ராமகிருஷ்ண தாஸ்.'என்னய்யா இது... இத்தனை நேரமா, நீ இங்குதானே வேலை பார்த்துக் கொண்டு இருந்தாய்... இப்போது வந்து, ஏதோ சொல்லி விளையாடுகிறாயே...' என்றார், அதிகாரி.'இல்லவே, இல்லை ஐயா... இன்று, நான் வேலைக்கு வரவேயில்லை...' என்று, அழுத்தமாக மறுத்தார்.'என்ன உளறுகிறாய்... இன்று, நீ வேலைக்கு வந்து, அதற்கான நோட்டில் கையெழுத்தும் போட்டிருக்கிறாயே...' என்றபடியே, மேஜை மேல் இருந்த அழைப்பு மணியை அடித்தார்.அதிகாரியின் உதவியாளர் உள்ளே வந்தார்.'நீ போய் வருகை பதிவேட்டை எடுத்து வா...' என, உத்தரவிட்டார். அன்றைய பதிவேட்டை காட்டி, 'இதோ பார்... வருகைப் பதிவேட்டில், நீயே கையெழுத்து போட்டிருக்கிறாய்... இது, உன் கையெழுத்து தானே...' என்றார்.'இல்லை ஐயா... இது, என் கையெழுத்து தான். ஆனால், நான் வரவும் இல்லை; கையெழுத்து போடவும் இல்லை...' என்றார்.'அப்படியா... ராமன் வந்து, கையெழுத்து போட்டு, உனக்காக வேலையும் பார்த்தாரா...' என கேட்டார், அதிகாரி.ஒரு பெரும் உண்மையைப் புரிந்து கொண்டார், ராமகிருஷ்ண தாஸ்.'நான் கும்பிடும் ராமரே வந்து, எனக்காக வேலை செய்திருக்கிறாரே...' என்று நினைக்க, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் துவங்கியது. அதைப் பார்த்த அதிகாரி, 'ஏனய்யா அழுகிறாய்...' என, கேட்டார்.வழிந்த கண்ணீரை துடைத்து, 'ஐயா... என்னை மன்னித்து விடுங்கள்... எனக்காக, ராமரே வந்து, இங்கு வேலை செய்திருக்கிறார்... இனிமேல், அவர் வேலையை, நான் பார்க்க வேண்டும்... என் வேலையை ராஜினாமா செய்கிறேன்... தயவுசெய்து, மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்...' என்றவர், தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்தார்.அது மட்டுமல்ல, ராமர் அவதரித்த அயோத்திக்கு சென்று, தவ வாழ்க்கை வாழத் துவங்கினார். உத்தரப்பிரதேசத்தில் இருக்கும், ஷாஜஹான்பூர் எனும் ஊரில், 80 ஆண்டுகளுக்கு முன், நடந்த நிகழ்வு இது.அந்த உத்தமரின் சமாதியை, இன்றும், ஷாஜஹான்பூரில் தரிசிக்கலாம். அழுத்தமான பக்தி, ஆண்டவன் அருளை அளிக்கும்.பி.என். பரசுராமன்