உள்ளூர் செய்திகள்

உலகிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி!

மனிதர்கள் வாழ பணம் முக்கியம் என்றால், அவர்கள் வாழ்க்கையில் முன்னேற, கல்வி மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது.அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான், உலக அறிஞர்கள் பலரின் விருப்பம். ஆனால், இன்று வரை அது நிறைவேறவில்லை. அதேசமயம், உலக அளவில், கல்வி, மிகப்பெரிய விற்பனைப் பொருளாக மாறியுள்ளதை, ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.உலகின் விலையுயர்ந்த ஆபரணம், கார், மாளிகை மற்றும் கடிகாரம் வரிசையில், உலகிலேயே அதிகமான கட்டணம் வசூலிக்கும் பள்ளி எது தெரியுமா?நம் நாட்டில், துவக்கப் பள்ளிகளில், லட்சங்களில் கட்டணம் வசூலிப்பதையே அதிர்ச்சியோடு கூறுபவர்கள், கோடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி அறிந்தால், மயக்கம் போட்டு விழுந்து விடுவர்.இந்த தகவலை, பலகட்ட விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, 'த ஸ்பியர்ஸ் லிஸ்ட்' நிறுவனம் வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின், 2024ம் ஆண்டின் ஆய்வின்படி, உலகிலேயே அதிகமான கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக, சுவிட்சர்லாந்து நாட்டில், 1889ல் நிறுவப்பட்ட, 'இன்ஸ்டிட்யூட் ஆப் டெம் ரோசன்பெர்க்' உள்ளது.இக்கல்வி நிறுவனம், பாரம்பரியம் மற்றும் எதிர்கால பார்வை என, இரண்டையும் ஒருங்கிணைத்து, கற்றல் மற்றும் கற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது.தனியார் சர்வதேச உறைவிடப் பள்ளியான இங்கு, கட்டணம், ஆண்டுக்கு, இந்திய மதிப்பில், ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல். அதேசமயம், பள்ளிக் கட்டணம் போக, வேறெந்த கூடுதல் கட்டணம், நன்கொடைகளை, இப்பள்ளி ஏற்பதில்லை.சுவிட்சர்லாந்தின், செயின்ட் கேலன் பகுதியில் உள்ள, கான்ஸ்டன்ஸ் ஏரிக்கு அருகில் இக்கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. 2025ம் ஆண்டு நிலவரப்படி, 60 நாடுகளைச் சேர்ந்த, சுமார் 280 மாணவர்களுடனான, மாணவர் அமைப்பை கொண்டு உள்ளது.பல உலகத் தலைவர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், பல நாட்டுத் துாதுவர்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கு கல்வி கற்பித்து உள்ளது.கான்ஸ்டன்ஸ் ஏரியின் மூலையில், 25 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள, பிரதான வளாகத்திற்கு அருகிலேயே, பள்ளிக் கட்டடங்கள் உள்ளன. மேலும், இப்பள்ளி, அதன், 13 ஆர்ட் நோவியோ குடியிருப்புகளுடன் இணைக்கப்பட்ட, 28 இணை பாடத்திட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.'இன்ஸ்டிட்யூட் ஆப் டெம் ரோசன்பெர்க்' கல்வி நிறுவனம், 2024ல், பிரீமியம் சுவிட்சர்லாந்தால், உலகின் சிறந்த உறைவிடப் பள்ளியாக அறிவிக்கப்பட்டது.உலகின், 150 சிறந்த தனியார் பள்ளிகளின் பட்டியலில் இருப்பதுடன், சுவிட்சர்லாந்தின் முதல் 10 சர்வதேச பள்ளிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. நேர்மை, இரக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்ட, சிறப்பான கொள்கையுடன், ஆளுமைத்திறன் மற்றும் முழுமையான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.சமூக சேவை, தலைமைப் பண்பு மேம்பாடு மற்றும் அனுபவக் கற்றல் வாய்ப்புகள் உள்ளிட்ட, பல்வேறு முயற்சிகள் மூலம், மாணவர்களின் திறமையையும், மதிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.மாணவர்கள், தங்கள் அறிவின் எல்லைகளைத் தாண்டி, புதிய உச்சத்தை தொடும் தனித்துவமான பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவரும், கல்வி, விளையாட்டு மற்றும் கலையில் சிறந்து விளங்கவும், தொழில் முனைவோர் ஆகவும், ஊக்கத்துடன் கூடிய சிறந்த கல்வி வழங்கப்படுகிறது.மாணவரிடம் இருக்கும் அசாத்திய திறமையின் அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்படுவதால், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவு. மேலும், கல்வியாண்டு துவங்கிய பின், புதிதாக மாணவர் சேர்வது என்பதும், இயலாத செயலாகும். -மு.ஆதித்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !