உள்ளூர் செய்திகள்

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்! (8)

அந்தக் காலத்தில், திருவையாறு தியாகராஜ ஆராதனைக்குச் செல்லும் பிரபல சங்கீத வித்வான்கள் சிலர், திருச்சியில் உள்ள பாகவதர் வீட்டில், காலை ஆகாரத்தை முடித்து, அதன்பிறகே அங்கு செல்வர். அதை, சம்பிரதாயம் போலவே செய்வாராம்.சில வித்வான்கள் வேடிக்கையாக, 'காலம்பற பாகவதர் ஆத்துல ஆகாரம், மதியானம், திருவையாறுல போஜனம்...' என்பர்.விருந்தினர்களை, பாகவதர் உபசரிக்கும் அழகே அழகு. திருமண வீட்டில் வரவேற்பது போல், வாசலில் நின்று, விருந்தினர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து வரவேற்பார், பாகவதர். அதன் பிறகே, சிற்றுண்டி, காபி எல்லாம்.பாகவதர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர், எஸ்.எஸ்.ராஜேந்திரன்.'பாகவதரைப் போல் யாராலும் பாட முடியாது. அவரைக் காப்பி அடிக்க வேண்டும் என்று யாராவது நினைத்தால், ஏளனப்பட்டுத்தான் போவர்...' என்பார். பாகவதரின் கந்தர்வக் குரலில் மயங்கிய பிரபலங்களில் இவரும் ஒருவர்.'நான் ஐந்தாவது படிக்கும் போது, 1938ல், பாகவதரின், சிந்தாமணி படம் ஏற்படுத்திய தாக்கத்தால், மாணவர்கள் ஒன்றிணைந்து, பள்ளியில், அதை நாடகமாகப் போட்டோம்.'நான் தான், அதில் பாகவதர் வேஷம் போட்டேன். பிற்காலத்தில், நான் திரையுலகில் நுழைந்து, நடிகன் ஆனதற்கு முக்கியக் காரணம், பாகவதர் படங்கள் தான்...' என்று கூறியுள்ளார், எஸ்.எஸ்.ராஜேந்திரன்.மன்னவன் போல் வாழ்ந்த பாகவதருக்கு, சின்ன அளவிலாவது உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார், எஸ்.எஸ்.ஆர்.,'ஐயா, உங்களுக்கு கனகாபிஷேகம் செய்து பார்க்க வேண்டும் என்று திரையுலகம் விரும்புகிறது. விழா நடத்த, எங்களுக்கு, நீங்கள் அனுமதி தர வேண்டும்...' என்று, பவ்யமாக கேட்டார்.சிரித்தபடியே, 'ராஜேந்திரா, நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குப் புரிகிறது. நான் பார்க்காத தங்கம், வைரமா. எனக்கு எந்த விழாவும் வேண்டாம்; உன் அன்பு மட்டுமே போதும்...' என்று, சொல்லி விட்டார், பாகவதர்.இதை கேள்விப்பட்ட நடிகவேள் எம்.ஆர்.ராதா, பாகவதரை சந்தித்தார். பாகவதரை விட வயதில் மூத்தவர் என்பதால், தனக்கே உரிய பாணியில் கேள்விக் கணைகளைத் தொடுத்தார், எம்.ஆர்.ராதா.'நான் பணத்தை மதிப்பவன். அதற்காக, என் கொள்கைக்கு விரோதமாக நான் என்றைக்குமே நடந்து கொண்டதில்லை என்பது தான், உங்களுக்கு நன்றாகத் தெரியுமே. இதில் எனக்கு ஆர்வம் இல்லை.'அதுமட்டுமல்ல, அதற்கான அவசியமும் இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா...' என்று உறுதிபடச் சொல்லி விட்டார், பாகவதர்.பாகவதரைப் பற்றி நன்கு அறிந்திருந்த ராதா, மேற்கொண்டு வற்புறுத்தாமல், திரும்பி விட்டார். காந்திஜி ஒருமுறை, பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக, சேலம் வந்தார். எங்கெங்கு நோக்கினும், மக்கள் கூட்டம். 'அதன் பிறகு, ஒரு கச்சேரிக்காக, சேலத்திற்கு சென்றார், பாகவதர். போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம். வீதிகளில் இடம் இல்லாமல், வீட்டுக் கூரையிலும் மக்கள் தொற்றிக் கொண்டு பாகவதரைப் பார்க்க, தவம் கிடந்தனர்.பாகவதரும் வந்தார். தாளமுடியாத அளவிற்கு நெரிசல். காவலர்களோடு, தன்னார்வலர்களும் சேர்ந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்த ஒருவர், 'சென்ற முறை காந்திஜி வந்திருந்தபோது இருந்த கூட்டத்தைக் காட்டிலும், இப்போது பெரும் கூட்டம் கூடியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காந்திஜியை காட்டிலும், பாகவதருக்கு தான் செல்வாக்கு ஜாஸ்தி என்பதே உண்மை...' என்று, உணர்ச்சி பொங்கக் கூறினார்.சட்டென்று எழுந்த பாகவதர், 'காந்திஜி எங்கே, நான் எங்கே. அவர் தேசப்பிதா, நான் வெறும் காட்சிப் பொருள். 'என்னைப் பார்க்க கூட்டம் வருவது இயற்கை தான். அதற்காக, அவரை விட நான் உயர்ந்து விட்டேன் என்று சொல்லாதீர்கள்...'என்றார். அந்த அடக்கமான குணமும், பெருந்தன்மையும் தான் பாகவதரின் தனி அடையாளம்.புரட்சி கவிஞர் பாரதிதாசனின் சீடர், சுரதா. பாரதிக்கு எப்படி அவர் தாசனாக மாறி, தன் பெயரையே பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டாரோ, அவ்வண்ணமே பாரதிதாசனின் தாசனாய், தன் பெயரை, சுப்பு ரத்தின தாசன் - சுரதா என, வைத்துக் கொண்டார்.பாகவதருக்கு எப்போதும் பாபநாசம் சிவன் தான் பாட்டு எழுதுவார். 1952ல், பாகவதரின் 11வது படமான, அமரகவி படத்தின், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எப்.நாகூர். உதவி இயக்குனர், எஸ்.எம்.உமர்.பாகவதருக்காக, சுரதா பாடல்கள் எழுத வேண்டும் என்று விரும்பினார், தயாரிப்பாளர். பாபநாசம் சிவன், ஜாம்பவான். பல்துறை வித்தகர். அவர் தான் தனக்கு பாடல்கள் எழுத வேண்டும் என்று அடம் பிடிப்பார், பாகவதர்.அப்படி இருக்கும்போது, சுரதாவுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்?இது குறித்து சுரதா கூறியது என்ன?— தொடரும்பாகவதர் பற்றி நினைவுகூர்ந்து, ஒரு சம்பவத்தை கூறுகிறார், கே.பி சுந்தராம்மாள்: ஒரு முறை, நான் கொடுமுடி ரயிலைப் பிடிப்பதற்காக, திருச்சி ஸ்டேஷனில், பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தேன். 'என்ன அம்மா, இப்படி தரையில் உட்கார்ந்திருக்கீங்க. சொல்லி அனுப்பியிருந்தால், என் வீட்டிற்கு அழைத்துச் சென்று, ரயில் வரும் நேரத்திற்குள் திருப்பிக் கொண்டு வந்து விட்டிருப்பேனே...' என்று அன்போடு சொன்ன குரல் கேட்டுத் திரும்ப, ஜவ்வாது கமகமக்க நின்று கொண்டிருந்தார், பாகவதர்.அவர் என் முன், உட்கார மாட்டார். நான் வற்புறுத்திச் சொன்ன பிறகு தான் உட்காருவார். அன்றும் அவ்வாறே, நான் வற்புறுத்திச் சொன்ன பிறகுதான், பிளாட்பாரத்தில் உட்கார்ந்தார். ரயில் வரும் வரை உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இதைச் சொல்லும்போது, கே.பி.எஸ்., குரல் தழுதழுத்துப் போய்விட்டதாம்.  - கார்முகிலோன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !