உள்ளூர் செய்திகள்

பார்வைகள் புதிது

''என்னால், இதற்கு மேல் ஈடு கொடுத்து இருக்க முடியாது. இதற்கு, ஒரு வழி செய்து தான் ஆக வேண்டும்,” என, புலம்பினாள் மைதிலி.''நீயே, இவ்வளவு சலித்துக் கொண்டால், என்ன செய்வது மைதிலி. உன்னுடைய பொறுமையால் தான், நான் இவ்வளவு நாள் ஓட்டினேன்,” என்றான் சிவராம். அவனின் இதமான பதில், மைதிலியின் ஆற்றாமையை தணித்தது. ''சாரிங்க... நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். செங்கல்பட்டு தாண்டி, மய்யூரில், ஒரு சாமியார் இருக்கிறாராம். நாம் அவரைப் பார்த்த பின், நம் சித்துவைப் பற்றி, ஒரு முடிவுக்கு வரலாம்,” என்றாள் மைதிலி.''சரி. அக்காவுக்கு போன் செய்து, சித்துவை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறேன். சனிக்கிழமை, குழந்தை களுக்கு லீவு. மாமாவுக்கும் அரைநாள் தான் ஆபீஸ். அவர்கிட்ட சொன்னா, 'அட்ஜஸ்ட்' செய்துப்பார். வெள்ளிக்கிழமை மாலை, ஆபீசிலிருந்து வரும் போது, அக்காவை அழைத்து வந்துவிடுகிறேன். நாம், சனிக்கிழமை காலை போய், மாலைக்குள் வந்துவிடலாம். இப்ப நான் ஆபிசுக்கு போய்ட்டு வரேன். நீ, சஞ்சலப்படாமல் இரு.” சிவராமனை வழியனுப்ப, வாசலுக்கு வந்த மைதிலியை, 'மா... மா' என்ற சித்துவின் குரல் தடுத்தது.''சரி நீ போய், அவனை கவனி,”என்று கூறிவிட்டு, புறப்பட்டுச் சென்றான் சிவராமன்.மைதிலி உள்ளே பார்த்தாள். மர ஈஸி சேரில் கிடந்தான் சித்து.''மா... மா,” கையை உயர்த்த முயற்சித்தான். ''இதோ சாப்பாடு கொண்டு வர்றேன்,” என்று சமையலறைக்குள் சென்றவள், மணியைப் பார்த்தாள். மணி 10:30ஐ தாண்டி இருந்தது. அவளுக்கே, பசித்தது. பாவம் சித்து, வாயிருந்தால் கேட்டிருப்பான்.'அம்மா பசிக்குது'ன்னு 9:30 மணிக்கு, சிவராமன் ஆபிசுக்கு கிளம்பியவுடன், 9:35க்கு சித்துவிற்கு சாப்பாடு கொடுத்து விடுவாள். இன்று கணவர் ஏதோ வேலை விஷயமாக போக வேண்டியிருந்ததால், ஒரு மணி நேரம், லேட்டாகி விட்டது.'சிந்து இருக்கப் போவது இன்னும், இரண்டு நாளோ, மூன்று நாளோ...' அவளையறியாமல், அவள் மனம் வேதனைப்பட்டது. சித்துவிற்கு உணவு ஊட்டிக் கொண்டே, அவனுக்கு நடக்கப் போவதை நினைத்த போது, கண்களில் நீர் முட்டியது. சித்து, பசி தீர்ந்தது என்பதற்கு அடையாளமாய், கை அசைந்தான். அவனுக்கு தண்ணீர் கொடுத்த மைதிலிக்கு,'தன் வாழ்க்கையில் மட்டும் ஏன் இத்தனை சோதனை' என்று, ஆற்றாமையாய் இருந்தது.மைதிலி கல்லூரியில் படிக்கும் போதே, வேலைக்குச் சென்று சம்பாதித்து, ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழ, திட்டமிட்டிருந்தாள். ஆனால், அத்தை மகன் சிவராமனை காதலித்ததால், படிப்பு முடிந்ததுமே திருமணம், கர்ப்பம் என்று, வேலைக்கு போவது நின்று போனது. குழந்தை பிறந்து, சித்து என்று பெயரிட்டு, தாலாட்டி, சீராட்டினாலும், குழந்தைக்கு வளர்ச்சி சரியில்லையென்று, டாக்டர்கள் சொன்னதால், வேலை பார்க்கும் ஆசை கனவாய் போனது.சித்துவுக்கு மூன்று வயதாகியும், பேச்சு வரவில்லை. சில குழந்தைகளுக்கு பேச்சு, தாமதமாகத்தான் வரும் என்று சொன்னாலும், எல்லாருக்கும், குழந்தையைப் பற்றி கவலை, உள்ளூர இருந்து கொண்டு தான் இருந்தது. ஐந்து வயதாகியும், பேச்சு வரவில்லை என்றானதும், டாக்டர்கள், கோவில்கள், பிராத்தனைகள் என்று, நாட்கள் கரைந்தன. 'சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால், மருத்துவ ரீதியாக குழந்தைகளுக்கு சிக்கல் தோன்றும்...' என்று, ஒரு பத்திரிக்கையில் போட்டிருந்ததைப் படித்ததிலிருந்து, கணவனிடம் வெறுப்பை காட்டத் தொடங்கினாள்..இன்னொரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று, எல்லாரும் அபிப்பிராயப்பட்டனர். ஆனால், அவள் மட்டும், 'இன்னொரு குழந்தையும் இப்படி பிறந்து விட்டால், நான் அவரையும் கொலை செய்து, நானும், தற்கொலை செய்து கொள்வேன்...' என்று கூறவும், சிவராமன் பயந்து போனான்.நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. கனிவான பேச்சுகளாலும், அன்பாலும், அவளை, ஒரு மாதிரி சமாளித்து வந்தான் சிவராமன். சித்துவுக்கு, ஒன்பது வயது ஆகும் போது, கை, கால்கள் வலுவிழந்து படுக்கையில் விழுந்தான்.அதுவே, மைதிலிக்கு, நிரந்தர சோகம் ஆயிற்று. ஆனால், பழகிக் கொண்டாள். தாய்மை மேலிட்டால், அருகில் நின்று அழுவாள். ஆனாலும், நாட்கள் செல்ல செல்ல, சித்துவின் மேல், வெறுப்பு உணர்ச்சி மேலோங்கியது. அவனுக்கு வேளைக்கு உணவு கொடுப்பதை தவிர, வேறு ஒன்றும் பொறுப்பில்லை என்று, அவளே தீர்மானித்து விட்டாள். சித்துவிற்கென்றே விசேஷமாக ஒரு மர ஈஸி சேர் வடிவமைக்கப்பட்டு, அதில் மேலே குழாய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு வால்வை திறந்தால், குளியல்; மல, ஜலங்கள் போவதற்கு, ஒரு பெரிய குழாய் இணைப்பு; நேரே, பாத்ரூமுக்கு செல்லும். உடம்பில் வாடை வராமலிருக்க, அவ்வப்போது பவுடர் தூவுதல், உடைமாற்றுதல் என்று, தன் வேலைகளை சுருக்கிக் கொண்டாள் மைதிலி.சிவராமனால், ஒன்றும் சொல்ல முடியவில்லை. தாயன்புக்கு மட்டுமே குழந்தைகளின் குறைகளை பொறுத்துக் கொள்ளும் தன்மை உண்டு. இங்கு பெற்ற தாய்க்கே அன்பு இல்லையென்றால், வேதனையை பழகிக் கொள்வதை தவிர, வேறு வழி தெரியவில்லை. இதுகுறித்து அவளிடம் பேசுவதற்கு அனைவரும் பயந்தனர். ஏதாவது சொன்னால்,'நீங்கள் ஒரு நான்கு நாட்கள் பார்த்துக் கொள்ளுங்கள்; அதற்கு பின் பேசுங்க. ஒரு சினிமா, டிராமா இல்லை; கல்யாணம், கார்த்திகை இல்லை. பத்து வருஷம் ஆச்சு. இன்னும் எத்தனை வருஷமோ...' என, கொட்டி தீர்த்து விடுவாள்.சித்து மன வளர்ச்சி, மூளை வளர்ச்சிகளை ஈடு கட்டும் வகையில், உடல் வளர்ச்சி பெற்றிருந்தான். அசாத்திய கனம்.அவனை தூக்குவதோ, சமாளிப்பதோ ரொம்ப கஷ்டம். ஆனால், எது எப்படி போனாலும், காலம் நிற்பதில்லை. அவனுக்கு இப்போது, 20 வயது. நாளாக நாளாக, மைதிலி அவனுக்கு எதிரியானாள். 'வாழ்க்கையின் சந்தோஷங்களை ஒட்டு மொத்தமாக குலைப்பதற்கு பிறந்தவன்' என்று நினைத்தாள்.சென்ற வாரம், அவள் கல்லூரி தோழி, கமலா வந்த போது தான், பிரச்னையும் வந்தது. தோழி கமலாவின் வருகை, அவளுக்கு பெருமையாக இருந்தது. அவள் கணவன், அமெரிக்காவில், ஒரு கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறான்; கை நிறைய சம்பளம். செல்வத்தின் செழுமை, அவர்கள் நடை, உடைகளில் பிரதிபலித்தது. சமீபத்தில் தான், ஏதோ பிரார்த்தனைகள் உள்ளது என்று, அமெரிக்காவிலிருந்து வந்திருக்கின்றனர்.மைதிலி அதுவரை, தன் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை கமலாவிடம் கொட்டி அழுதாள்; குமுறினாள். சித்துவை காட்டினாள். சித்து தியானத்திலிருப்பது போல் இருந்தான். அவன் தூங்குகிறானா, விழித்திருக்கிறானா என்பது யாருக்கும் தெரியாது.'ஏன்டி, இதுக்கு போய் இத்தனை கவலைப்படுற. அமெரிக்காவிலே இதெல்லாம் ஒரு பிராப்ளமே இல்ல. 'மெர்ஸி கில்லிங்'னு சொல்லி, ஒரே ஒரு ஊசியை போட்டு விடுவர். இதனால, நமக்கும் சரி, சித்துவ மாதிரி இருக்குறவங்களுக்கும் சரி பிராப்ளம் இல்ல. நீ ஏன், இவனை வச்சிக்கிட்டு, இத்தனை வருஷம் போராடிக்கிட்டு இருந்தன்னு தெரியலே...' என்றாள் கமலா.சிவராமன் வந்தவுடன்,தோழி கூறிய விஷயத்தை சொல்லி, 'மெர்ஸி கில்லிங்' செய்ய, பிடிவாதம் பிடித்தாள். சிவராமனால் ஒன்றும் சொல்ல முடியாமல், 'எனக்கு ஒண்ணும் புரியல்ல. யாராவது சாமியார் அல்லது பெரியவர்களிடம் கலந்து பேசி, முடிவு செய்வோம்...' என, தற்காலிகமாக, அந்தப் பேச்சிற்கு, ஒரு முற்றுப் புள்ளி வைத்தான்.சிவராமன் வந்து, காலிங்பெல் அடித்த போது தான், கண் விழித்தாள்.'ஐயோ! ஏதேதோ நினைத்துக் கொண்டு, நேரம் போனது தெரியாமல் அசந்து விட்டோமே...' பதறிப்போய் வாசலுக்கு ஓடினாள்.''என்ன மைதிலி, பதறிப்போய் வர்றே நான், சும்மா அரை நாள் லீவு போட்டு, வந்திருக்கேன்.”மைதிலி சுய நினைவுக்கு வந்து, ''ஓ...அப்படியா! நான் ஏதோ ரொம்ப நேரம் அசந்துட்டேனோ என்று நினைச்சுட்டேன்.”சுதாரித்து, உள்ளே சென்ற மைதிலி, காபி போட்டு சித்துவுக்கு கொடுத்துவிட்டு, சிவராமனுக்கும், தனக்கும் காபி எடுத்து வந்தாள்.''எல்லாம் தயார் செய்துட்டீங்களா... நாளைக்கு நாம கிளம்பறோம் தானே?” என்று கேட்டாள்.''ம்... கிளம்பறோம்.”வண்டி செங்கல்பட்டு தாண்டி, மாமண்டூரில் நின்றது. அங்கிருந்து, 3 கி.மீ., நடந்து, வரப்பு வழியாகத்தான் போக வேண்டும். ஜனங்கள், நெரிசலாக போய் கொண்டிருந்தனர். சிவராமனும், மைதிலியும் ஜன நெரிசலில் கலந்தனர். முக்கால் மணி நேரம் நடந்தனர்.அந்த வயல்வெளிகள், சுற்றுப்புறசூழல், ஜனநடமாட்டம், நீண்ட நடை அவர்களை ஓரளவு சாந்தப்படுத்தியது.இருபதுக்கு, ஐம்பது அடி உள்ள கோரை புற்கள் வேய்ந்த குடிலில், கடவுள்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. தாங்கி நிற்கும் மரக்கால்களில், திருநீருக் கொப்பறைகள். மயான அமைதியுமில்லை, அதிக சத்தமுமில்லை. இரண்டு டியூப்லைட் மற்றும் ஒரு பேன், தொங்கிக் கொண்டு இருந்தன.யாரோ சிலர் பக்தி பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். பத்து, இருபது பேர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. வந்து ஒரு மணி நேரம் ஆயிற்று. சாமியாரையும் காணவில்லை, கூட்டமும் அவ்வளவாக இல்லை. திடீரென அமர்ந்திருந்த அனைவரிட மும் சுறுசுறுப்பு, 'சாமி வர்றார்... சாமி வர்றார்...' என்றனர். இங்குமங்கும் உட்கார்ந்திருந்த, நின்றிருந்த மக்கள், திண்ணையை நோக்கி வந்தனர்.சாமியார் இளவயதாக இருந்தாலும், அவர் முகத்தில் ஒரு அமைதி தெரிந்தது. இடுப்பில், சாதாரண நான்கு முழ காவித்துண்டு; மார்பை சுற்றி, இன்னொரு காவித்துண்டு; பராமரிப்பே இல்லாத தலை முடி, கரு கரு வென்ற தாடி, நெற்றி முழுவதும் விபூதி.சாமியாரைப் பார்த்ததும், சிவராமனின் மனதிலும், ஒரு அலாதி அமைதி தோன்றியது.சாமியார் திண்ணையில் உட்கார்ந்தார். ஒரு சீடர், பக்கத்திலுள்ள மின்விசிறியை ஓட விட்டார். யாரோ ஒருவர், சாமியார் அருகில் வந்து ஏதோ சொன்னார். சாமியார், 'கலகல'வென்று சிரித்தது மட்டும் கேட்டது.''சரியாகவே கேட்க மாட்டேங்கிறது. சற்று முன்னால் போய் உட்காரலாம்,'' என்று கூறினாள் மைதிலி.சிவராமனும், மைதிலியும் சற்று முன்தள்ளி, சாமியாரின் பக்கமாக முன்னேறி உட்கார்ந்தனர்.அப்போது, ஒரு தம்பதி, மனநலம் குன்றிய ஆறு வயது குழந்தையை கொண்டு வந்தனர். ''ஏங்க அங்க பாருங்கள், நம்ம சித்து மாதிரி,'' என்றாள் மைதிலி.அந்த குழந்தை ஒன்றும் புரியாமல், சாமியார் அருகில் போய் நின்றது. சாமியார் திடீரென இறங்கி வந்து, குழந்தையை வணங்கி, அதற்கு, ஒரு ஆப்பிள் பழத்தை கொடுத்தார். பழத்தை வாங்கிக் கொண்டு, ரயில் மாதிரி ஊதிக் கொண்டு சென்றது.''கடவுளைப் பார்த்து இருக்கிறீர்களா,” சாமியார் கூடியிருந்த மக்களை பார்த்து கேள்வி கேட்டார். பதிலில்லை. ''கடவுள் என்றால் யார், அவருடைய குணம் என்ன?” மறுபடியும் கேட்டார்.இப்போதும் மவுனம். சாமியாரே தொடர்ந்தார்...''கடவுள் என்பவர் எல்லாவற்றையும் கடந்தவர்; விருப்பு வெறுப்பு அற்றவர். இப்போ வந்தானே ஒரு பையன், அவன் கடவுள் மாதிரி. அவனுக்கு, விருப்பு வெறுப்போ, நல்லது, கெட்டதோ ஆண், பெண் வித்தியாசமோ தெரியாது. அவன் செய்யும் செயல்களுக்கு, பாவம், புண்ணியமோ, மறுபிறவியோ கிடையாது. அவர்கள், கடந்த ஜென்மங்களில் செய்த பேருதவிகளுக்கு, உதவி பெற்றவர்களிடமிருந்து திரும்ப பெறுவதற்கு, இந்த பிறவி எடுத்துள்ளனர். அவர்கள், நமக்கு குழந்தையாய் பிறந்தால், அதுவும் ஒரு வித கருணை தான். அவனை, நமக்கு கிடைத்த தண்டனையாக பார்க்கக் கூடாது. தெய்வம் போல் பாவித்து, பணிவிடை செய்ய வேண்டும். அதில் கிடைக்கும், ஆத்ம சுகம் அளவிட முடியாது.”குழந்தையின் பெற்றோர் ஓடிச்சென்று, அவனை மிகுந்த பரிவுடன் அணைத்துக் கொண்டனர்.''சாமி... ஒரு கேள்வி. அயல்நாடுகளில் எல்லாம், இம்மாதிரி உள்ளவர்களை, கருணைக் கொலை செய்யலாம் எனச் சொல்லி கொலை செய்வதாக சொல்கிறனரே,” என்று கேட்டாள் மைதிலி. எல்லார் பார்வையும் அவள் மேல் பட, ஒரு வினாடி கூசிப் போனாள். மைதிலியை உற்றுப் பார்த்த சாமியார், பின், அவளது பிரச்னையை புரிந்து கொண்டவராக, தொடர்ந்தார்...''எல்லாவற்றிற்கும் அயல்நாட்டுக்காரர்களை உதாரணம் காட்டக் கூடாது. அவர்கள், எதையும், மேலோட்டமாக ஆராய்ந்து பார்த்து, தங்கள் சவுகர்யம் கருதி வாழ்பவர்கள். அவர்கள் நம்மைப் பார்த்து தான் திருந்த வேண்டுமேயன்றி, நாம், அவர்களைப் பார்த்து, தவறான பாதையில் போகக் கூடாது.''விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது, ஆண், பெண் பேதமின்றி இருப்பது தான் தெய்வ குணம். அது நம் குழந்தைகளிடம் இருக்கும் போது, அதை ஏன் தெய்வக் குழந்தையாக நினைக்கக் கூடாது?'' என்று கேட்டார் சாமியார்.கூட்டத்தை விலக்கி, மைதிலி, சாமியாரின் அருகில் சென்று, நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாள்.கண்கள், கண்ணீரைக் கொட்டின; வார்த்தைகள் வரவில்லை. சாமியார் கை உயர்த்தி, ஆசீர்வதித்தார். ஆப்பிள் பழமொன்றை கொடுத்து, ''கவலைப்படாதே, இறைவன் அருள் உனக்குண்டு,'' என்று ஆசி வழங்கினார்.மைதிலி பேச முயற்சித்தாள், பேச்சு வரவில்லை, நேரே சிவராமன் அருகில் சென்று அமர்ந்தாள். அவள் தோள் பற்றி, வெளியே கூட்டி வந்தான்.மைதிலியின் முகம் தெளிவாகவும், பிரகாசமாகவும் இருந்தது. அதைக் கண்டு, சிவராமன் முகமும் மலர்ந்தது.பஸ்சில் ஏகப்பட்ட கூட்டம். பேசக்கூட முடியவில்லை. ஆதனால், மைதிலியிடம் ஏதும் கேட்கவில்லை.நேரே பஸ் பிடித்து, சென்னை வரும் போது, மணி 9:30ஐ தாண்டி இருந்தது.மறுநாள் காலை.சித்துவை சுற்றி போட்டிருந்த குழாய்கள் எல்லாம் எடுக்கப்பட்டிருந்தன.டேப்பில் ருத்ரம் சி.டி., ஓடிக் கொண்டிருந்தது. சித்துவுக்கு பிளாஸ்டிக் மக்கினால், தண்ணீர் ஊற்றி, உடலை தேய்த்து குளிப்பாட்டி, பின், பவுடர் போட்டு, அவனை அலங்கரித் தாள். அவள் முகத்தில் தெரிந்த முழு ஈடுபாட்டை பார்த்த சிவராமனுக்கு சந்தோஷம். ''மைதிலி நான் ஆபிஸ் போகட்டுமா,” என்றான்.''வேண்டாம். இன்று லீவு போடுங்கள். எல்லாரும், தெய்வத்தையும், நிம்மதியையும் தேடி, எங்கோ ஓடிக் கொண்டு இருக்கின்றனர். அதெல்லாம், இவ்வளவு எளிதில், நம் வீட்டுக்குள்ளேயே கிடைக்கிற அருமையை, இன்று தான் தெரிந்து கொண்டேன், நீங்களும் உணர்வீர்கள்,” என்றாள். அங்கு தெய்வமும், தெய்வீகமும் நிறைந்திருந்ததுஎஸ்.வெங்கட்ராமன் வயது: 70, நெய்வேலியில் இன்ஜினியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். தற்சமயம், சுய தொழில் செய்து வருகிறார். அடுக்குமாடி தானியங்கி கார் நிறுத்துவதற்கான, புதுமுறையை கண்டுபிடித்து, காப்புரிமை பெற்றுள்ளார். இவர் எழுதிய, முதல் சிறுகதை இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !