விசேஷம் இது வித்தியாசம்: கண்ணைக் குத்திய சாமி!
'தப்பு பண்ணினா சாமி கண்ணைக் குத்திடும்...' என, பெரியவர்கள், குழந்தைகளைப் பயமுறுத்தி வைப்பது வழக்கம்.இது, விளையாட்டான சொல் அல்ல. சிவனின் நண்பரான சுந்தரருக்கு நிஜத்திலேயே இப்படி நடந்தது. தன் தவறுக்கு வருந்திய அவர், திருவாரூர் துாவாய்நாதர் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்ட பிறகே, மீண்டும் பார்வை பெற்றார். ஒருசமயம், கடல் பொங்கி எழுந்தது. உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர்.துர்வாச முனிவரிடம், 'நீ பூலோகத்திலுள்ள திருவாரூர் சென்று, அக்னி மூலையில் குளம் அமைத்து என்னை வழிபட்டால், உயிர்கள் காப்பாற்றப்படும்...' என்றார், சிவபெருமான். துர்வாசர் தலைமையில் முனிவர்கள், இங்கு ஒன்று கூடி, குளம் வெட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து அபிஷேகம், பூஜை செய்தனர். பூஜையை ஏற்ற சிவன், பொங்கி வந்த கடலை, அக்னி மூலையில் இருந்த குளத்திற்குள் ஈர்த்துக் கொண்டார். துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தால், இத்தல சிவனுக்கு, 'துர்வாச நயினார்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் துாவாய்நாதர் என, மாறிவிட்டது. துாய அன்பைத் தருபவர் என, இதற்கு பொருள்.அம்பாளுக்கு பஞ்சை விட மெல்லிய திருவடிகள் உள்ளதால், 'பஞ்சின் மென்னடியாள்' என்ற அழகிய பெயருடன் திகழ்கிறாள். திருவடியைப் போல, அவளது மனமும் மென்மையானது. இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெற, பக்தர்கள், இவளிடம் வேண்டினால், தாயாய் இருந்து பாதுகாப்பாள். இந்த கோவிலில், இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு வேண்டி யாகம் செய்வதுடன், அன்னதானமும் செய்கின்றனர்.ஒருமுறை, தன் இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம், 'நான் எப்போதும் உன்னை விட்டு பிரிய மாட்டேன்...' என, உறுதிமொழி அளித்தார், சுந்தரமூர்த்தி நாயனார். ஆனால், அதற்கு மாறாக ஒருமுறை, அவருக்கு முதல் மனைவியான, பரவை நாச்சியாரின் நினைவு வந்தது. இதையடுத்து அவர் முதல் மனைவியைக் காணச் சென்றார். உறுதி மொழியை மீறிய தவறுக்காக, சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கி, ஒவ்வொரு சிவத்தலமாக சென்று, பார்வை தந்தருள வேண்டினார், சுந்தரர்.காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது, சுந்தரருக்கு இடது கண் பார்வை கிடைத்தது. திருவாரூர் துாவாய்நாதர் கோவிலுக்கு வந்து, மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார்.இவரது வேண்டுதலை ஏற்ற சிவன், 'அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி, தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்...' என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து, வலது கண் பார்வை பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் பார்வை கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது, லிங்கத்தில் கண் தடம் தெரிவதைக் காணலாம். திருவாரூர் தியாகராஜர் கோவில் கீழரத வீதி, தேர் எதிரில் கோவில் உள்ளது.தி. செல்லப்பா