உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: வாமனர் - 1

செப்., 5 - ஓணம் பண்டிகைமகாபலி மன்னனை ஆட்கொள்ள திருமால் எடுத்த, ஐந்தாவது அவதாரமே, வாமனம். இந்த வரலாறை தான், நாம் காலம் காலமாக கேட்டு வருகிறோம். ஆனால், இது, வாமனம்- - 2 தான். திருமால், இதற்கு முன்னதாகவே ஒருமுறை, வாமன அவதாரம் எடுத்திருக்கிறார் என்பது, வித்தியாசமான தகவல். வாமன புராணத்தில், இந்த வரலாறு இருக்கிறது. வாமனர் - 1 அவதாரமும், ஒரு அசுரனை ஆட்கொள்ளத் தான். அவனது பெயர், துந்து. தேவர்கள் மற்றும் அசுரர்களின் தந்தை காஷ்யப முனிவர். இவரது துணைவியரில், தனு என்பவளும் ஒருத்தி. இவர்களுக்கு பிறந்த மகனே, துந்து. துந்து என்றால், பெரும் ஓசை என, பொருள். இவன் பிறந்ததும் அழுத அழுகை, உலகையே கலக்கும் அளவுக்கு பேரோசையாக இருந்தது. இதனால், இவனுக்கு, துந்து என, பெயர் சூட்டப்பட்டது. இவன், பிரம்மாவிடம் பெற்ற வரத்தால், தேவலோகத்தைக் கைப்பற்றினான். பயத்தில், பிரம்ம லோகத்தில் மறைந்து கொண்டனர், தேவர்கள். அங்கும் சென்று தேவர்களை விரட்ட எண்ணினான், துந்து. 'பிரம்ம லோகத்துக்குள் நுழைய வேண்டுமானால், நுாறு அசுவமேத யாகம் செய்ய வேண்டும்...' என, கூறினான், படைத்தலைவன். யாகம் செய்வதற்கான இடத்தை தேடியலைந்தான், துந்து. இதையறிந்து, திருமாலை சரணடைந்தனர், தேவர்கள். அவர்களுக்கு உதவி செய்ய எண்ணினார், திருமால். குள்ள வடிவம் எடுத்து, வாமனர் என்ற பெயரில், துந்து, யாகம் செய்ய தேர்ந்தெடுத்த இடத்திற்கு வந்தார். வாமனம் என்றால், குள்ள வடிவம் என, பொருள். யாககுண்டம் அருகே, ஒரு குளம் இருந்தது. அதில் குதித்த வாமனர், நீரில் தத்தளிப்பது போல நடித்தார். இதை பார்த்து, அவரைக் காப்பாற்றினான், துந்து. 'ஏன் குளத்தில் குதித்தீர்?' என, கேட்டான். 'மன்னா! என் சகோதரர்கள், நீ குள்ள வடிவமாக இருக்கிறாய். உனக்கென்ன கல்யாணம் காட்சியா நடக்கப் போகிறது என, சொல்லி, சொத்து தர மறுத்து விட்டனர். பொருளின்றி நான் எப்படி வாழ்வேன். அதனால், சாக முடிவெடுத்து குதித்தேன்...' என்றார். 'இவ்வளவு தானா விஷயம்! நீர் கேட்கும் பொருளை, நான் தருகிறேன். எவ்வளவு வேண்டும் உமக்கு?' என்ற துந்துவிடம், 'அரசே! 3 அடி நிலம் மட்டும் கொடுங்கள், இந்த குள்ளன் வசிக்க அது போதும்...' என்றார், வாமனர். துந்துவும் சம்மதித்தான். உடனே, திரிவிக்கிரமனாக உயர்ந்த வடிவத்தில் எழுந்து நின்றார், வாமனர். 2 அடிகளால் பூமியையும், வானத்தையும் அளந்து விட்டு, 3வது அடிக்கு, துந்துவிடம் இடம் கேட்டார். வந்தவர், திருமால் என்பதை அறிந்து மகிழ்ந்த துந்து, 'உம் திருவடியால் நான் முக்தி பெற, என் தலையைத் தருகிறேன். அதை தவிர, இப்போது என்னிடம் ஏதுமில்லை...' என்றான். வாமனரும் அவனை ஆட்கொண்டார். ஓண நன்னாளில், இப்படி ஒரு விசேஷ தகவலை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி தானே!தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !