உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: பகைவனும் நண்பனே!

நவ., 26 - சம்பா சஷ்டிநமக்கு நண்பர்களும் உண்டு, பகைவர்களும் உண்டு. நண்பர்களிடம் அன்பை பொழிகிறோம்; பகைவர்களை வெறுத்து ஒதுக்குகிறோம். பகைவராகவே இருந்தாலும் அவர்கள் மீதும் அன்பை பொழிய வேண்டும் என்பதற்காகவே, ஒரு விழாவை உருவாக்கியுள்ளனர், நம் முன்னோர். இந்த விழா தான், சம்பா சஷ்டி. தமிழகத்தில், ஐப்பசி மாதம் தீபாவளியை அடுத்து, கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விரதத்தின் இறுதி நாள், பத்மாசுரனை, முருகப்பெருமான் ஆட்கொண்ட நாள். இதே போல கார்த்திகை அல்லது மார்கழி வளர்பிறை சஷ்டி திதியில் கொண்டாடப்படும் விழா, சம்பா சஷ்டி. கந்தசஷ்டி முருகனுக்குரியது. சம்பா சஷ்டி சிவனுக்குரியது. பத்மாசுரனை, முருகன் கொல்லாமல், மயிலாக ஆட்கொண்டார். இதே போல, தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பமிழைத்த அசுரர்களைக் கொல்லாமல், அவர்கள், மனம் திருந்தியதால் அருள்பாலித்தார், சிவன். மல்லன், மணி என்ற அரக்கர்கள், பிரம்மாவிடம், தங்களை யாரும் வெல்லக்கூடாது என்ற வரம் பெற்றனர். இதைப் பயன்படுத்தி சப்தரிஷிகள் உள்ளிட்ட அனைவருக்கும் துன்பமிழைத்தனர். யாகங்களைத் தடுத்தனர். இதுகுறித்து சிவனிடம், ரிஷிகளும், தேவர்களும் முறையிட்டனர். அவர், கண்டோபா என்னும் அவதாரம் எடுத்தார். இவரை, மார்த்தாண்ட பைரவர் என்றும் அழைப்பர். தன் தலை முடியிலிருந்து, கிருதமாரி என்ற குரூர பெண் சக்தியை உருவாக்கினார், சிவன். மேலும், தன் சக்தியான பார்வதியை, மல்ஷா என்ற பெயரில் தன்னுடன் அழைத்துச் சென்றார். மல்ஷா என்றால் மீட்டுத் தருபவள் என, பொருள். கஷ்டங்களில் இருந்து பக்தர்களைக் காப்பவள் என்பதால் இப்பெயர் உண்டாயிற்று. இவர்கள் மல்லன், மணியுடன் ஆறு நாட்கள் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தனர். போர் முடிவில், இருவரும் மனம் திருந்தி, சிவபார்வதியிடம் மன்னிப்பு கேட்டனர். தன் வெள்ளைக்குதிரையை அவர்களுக்கு காணிக்கையாக அளித்தான், மணி. முக்தி வேண்டுமென கேட்டதால், மோட்சத்தை அடைந்தான், மல்லன். அப்போது, சிவபார்வதி மீது, சம்பக மலர்கள் பொழிந்தன. இவை, கொன்றை மலர் போல, தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால், இந்த தினத்தை, சம்பக சஷ்டி என, கொண்டாடுகின்றனர். மஹாராஷ்டிர கிராம மக்களின் குல தெய்வமாக விளங்குகிறார், கண்டோபா என்னும், பைரவர். சம்பக சஷ்டியன்று, சிவ-பார்வதி இருவரும் வெள்ளைக்குதிரையில் பவனி வருவர். சம்பக சஷ்டியின் நோக்கம் எதிரிகளிடமும் அன்பு காட்டுவது. நாமும், பகைவர்களையும் நண்பராகக் கருதும் மனப்பக்குவத்தை பெற, சிவனிடம் வேண்டுவோம். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !