அச்சம் நீங்க வேண்டுமா?
தெய்வ அருள் பெற்றோர், எவருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டார்கள் என்பதை விளக்கும் கதை இது: துாத்துக்குடியில், வீரபாண்டியப் புலவர் என்பவர் இருந்தார். சிறு வயதில் இருந்தே, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய அவர், மகான் ஒருவரிடம், ஆறெழுத்து மந்திரத்தை முறைப்படி உபதேசம் பெற்று, உருவேற்றி வந்தார். இதன் காரணமாக, அவர் நாவில் அருந்தமிழ் பாக்களும், முருகப்பெருமானின் அருளும் வெளிப்படத் துவங்க, அவர் என்ன சொன்னாலும், அப்படியே பலித்தது. அக்காலத்தில், துாத்துக்குடியில், தலைமை அதிகாரியாக இருந்தார், துருக்கியர் ஒருவர். தற்பெருமையும், ஆணவமும் கொண்ட இவரைக் கண்டாலே நடுங்குவர், மக்கள். ஒருசமயம் இவர், ஆற்றுார் எனும் ஊருக்கு வந்து, அங்கிருந்த புளிய மரம் ஒன்றின் கீழ், கூடாரம் இட்டுத் தங்கியிருந்தார்.அச்சமயம், அவ்வழியே போன, வீரபாண்டியப் புலவருக்கு, என்ன தோன்றியதோ, திடீரென, அதிகாரியின் கூடாரத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். இதனால், கோபமடைந்த அதிகாரி, 'யார் நீங்கள்...' என்று கேட்டார்.'யான், முருகப் பெருமானின் அருளைப் பெற்றவன்; இந்தப் பக்கமாக வந்தபோது, உம் கூடாரத்தைப் பார்த்தேன். ஏதோ தோன்றியது; உள்ளே நுழைந்து விட்டேன்...' என்றார்.அதிகாரியின் முகம் கோபத்தில் சிவந்தது; 'நீர் தெய்வத்தின் அருளைப் பெற்றவர் என்பது உண்மையானால், இதோ இங்கிருக்கும் இந்தப் புளிய மரத்தில் உள்ள கிளைகளில் ஒன்று முறிந்து விழும்படி பாடுங்கள் பார்க்கலாம்... நீர் அப்படிச் செய்தால், நான் உம்மைப் பணிந்து வணங்கி, விலை உயர்ந்த என் ஆபரணங்களை உமக்கு பரிசளிப்பேன். இல்லாவிட்டால், நான் தரும் தண்டனையிலிருந்து நீர் தப்ப முடியாது...' என்று கர்ஜித்தார். இதைக் கேட்டு, அங்கிருந்த அனைவரும் நடுங்கினர்.பன்னிருகையன் பேரருளைப் பெற்ற புலவரோ, கம்பீரமாக, 'நீர் சொன்னபடி செய்கிறேன்; ஆனால், அதற்கு முன், நீர் விரும்பும் இடத்தில், புளியங்கிளையில், சுண்ணாம்பால் ஒரு குறி இட்டு வையும்; சரியாக அந்த இடத்தில் கிளை முறியும்படியாகப் பாடுகிறேன். இல்லாவிட்டால், நான் ஏதாவது சூழ்ச்சி செய்து விட்டதாக நீர் சொல்வீர்...' என்றார்.அதன்படி, தன் பணியாளை வைத்து, புளிய மரக்கிளையில் குறியிடச் செய்தார், அதிகாரி. முருகப் பெருமானை துதித்து, புலவர் ஒரு வெண்பா பாட, குறியிட்ட இடத்தில் அப்படியே முறிந்து விழுந்தது, புளியங்கிளை. இதைக் கண்டு, பயந்து நடுங்கி, புலவரின் கால்களில் விழுந்து, 'சுவாமி... எனக்கு எந்தத் தீங்கும் செய்து விடாதீர்கள்...' என, வேண்டினார், அதிகாரி.'எம்மால் ஒரு தீங்கும் விளையாது...' என்றதும், விலைமதிப்பற்ற தன் ஆபரணங்களை, புலவருக்கு அன்போடு வழங்கிய அதிகாரி, 'சுவாமி... மேலும் ஏதாவது ஆக வேண்டுமானாலும் செய்கிறேன். தெரிவியுங்கள்...' என்றார். புலவரோ, 'எனக்கு வேண்டியதைச் செய்ய, செவ்வேள் முருகன் இருக்கிறார்; நீர், ஆணவத்தை நீக்கினாலே போதும்...' என்று கூறி, அதிகாரியை மன்னித்து, தம் இருப்பிடம் திரும்பினார்.இறையருளை வேண்டுவோம்; அச்சம் தானே விலகிப் போகும்! பி.என்.பரசுராமன்தெரிந்ததும் தெரியாததும்துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன?பெருமாளுக்கு பிடித்தது துளசி; காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணி, துளசி கஷாயம். செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதில், துளசி இலைகளை போட்டு, ஒரு இரவு வைத்திருந்து, அந்நீரை குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி தொந்தரவு வராது; வீட்டில், துளசி செடி இருந்தால் இடி மற்றும் மின்னல் தாக்காது என்பர். ஒவ்வொரு வீட்டிலும், துளசி மாடம் இருப்பது நல்லது.