இருவரில் யார்?
காஞ்சி மஹா சுவாமிகளுக்கு மிகவும் பிடித்தமானவை, -ஸ்தல புராணங்கள். அந்தந்த ஊர்க்காரர்களும், முக்கியஸ்தர்களும், ஸ்தல புராணங்களை அறிந்திருக்க வேண்டும் என்பது, மஹா சுவாமிகளின் எண்ணம். ஒவ்வொரு ஸ்தல புராணமும், பாடங்களை புகட்டி, 'கவலைப்படாதே... நான் இருக்கிறேன்...' என்று, தெய்வ அருளை, அழுத்தமாக மனதில் பதிய வைக்கும்.அப்பர் சுவாமிகள், கயிலாயக் காட்சி கண்ட திருத்தலம்; தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீராம தரிசன அனுபவம் பெற்று, முக்தி அடைந்த திருத்தலம்; வலிப்பு முதலான நோய்களை தீர்த்தருளும், ஆட்கொண்டார் சன்னிதி கொண்ட திருத்தலம் என, பல விதங்களிலும் புகழ்பெற்று விளங்கும், திருவையாறில் நடந்த, வரலாறு இது:திருவையாறில் சுவாமி, ஐயாறப்பர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கிறார். அங்கே, சுவாமியை தொட்டு பூஜை செய்யும் உரிமை பெற்ற அடியார் ஒருவர், தினமும் பூஜை செய்து கொண்டிருந்தார். நாளாக நாளாக, அந்த அர்ச்சகருக்கு, காசி செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகரிக்க, அங்கு சென்றார். நீண்ட நாட்களாகியும் திரும்பவில்லை. இதுதான் நேரம் என்று, கோவிலில், அவருடன் வேலை செய்த சிலர், அர்ச்சகரின் நிலம் முதலான சொத்துகளை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.அதைக்கண்டு அர்ச்சகரின் மனைவியும், மகனும் வருந்தி, அழுதனர். கோவிலுக்கு சென்று, 'ஐயாறப்பா... அல்லலைத் தீர்த்து, அருள் செய்யப்பா...' என்று வாய்விட்டு புலம்பினர். அப்போது, காசிக்கு சென்ற அர்ச்சகர் வடிவில், சிவபெருமான் வந்தார். அவரை பார்த்ததும், 'காசிக்குப் போனவர், திரும்பி வர மாட்டார் என்று நினைத்தோம்; வந்து விட்டாரே...' என்று, அர்ச்சகரின் சொத்துகளை பங்கிட்டுக் கொண்டவர்கள், புலம்பினர்; வேறு வழியின்றி, அவரின் சொத்துகளை ஒப்படைத்தனர். அர்ச்சகராக வந்தவர், ஐயாறப்பருக்கு, கங்கை நீரால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தார்; பிறகு வீட்டிற்குப் போய் தங்கியிருக்கலானார். இந்நிலையில், காசிக்கு போயிருந்த உண்மையான அர்ச்சகர் திரும்பி வந்தார்; பார்த்த அனைவரும் வியந்தனர்.'என்ன இது புதுமை... இருவரும் ஒன்று போல இருக்கின்றனரே... இவர்களில், யார் உண்மையான அர்ச்சகர்...' என்று குழம்பினர்.இரு அர்ச்சகர்களும், 'நான் தான் உண்மையான அர்ச்சகர்...' என, வாதிட்டதுடன், 'நான் தான் உரிமையுள்ள அர்ச்சகர்...' என்று, முறி ஓலையை காட்டினர். முறி ஓலை என்பது, உரிமைப் பத்திரம் போன்றது.அனைவரும் செய்வதறியாது திகைத்த வேளையில், அர்ச்சகர் வடிவில் வந்திருந்த, சிவபெருமான், 'பளிச்'சென்று அங்கிருந்து மறைந்தார். 'மனித வடிவில், அர்ச்சகராக வந்தது, ஐயாறப்பரான சிவபெருமானே...' என்று, அனைவருக்கும் அப்போது தான் புரிந்தது.அர்ச்சகரோ, 'ஐயாறப்பா... அடியவனான எனக்காக, அடியேன் வடிவிலே வந்து அருள் புரிந்தாயே...' என்று கண்களில் கண்ணீர் வழிய வழிபட்டார்.அடியார்களை காக்க, ஆண்டவன் ஒருபோதும் மறப்பதில்லை; மறுப்பதும் இல்லை எனும் இவ்வரலாறு, திருவையாறு ஸ்தல புராணத்தில் உள்ளது. பி.என். பரசுராமன்