மனைவியின் நண்பன்!
இரவின் ஆழ்ந்த அமைதியில், 'டிங்'கென, ஒலித்த, 'வாட்ஸ் -அப்' சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள், நீரஜா. படுக்கையருகில் இருந்த மேஜையிலிருந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது, இரண்டு, 'மெசேஜ்கள்' பச்சை வட்டத்தில் ஒளிர்ந்தது. 'வாட்ஸ் - அப்' மீது விரலை அழுத்தினாள்; விக்ரம் தான் அனுப்பியிருந்தான். 'இவன் எதற்கு இந்த இரவு நேரத்தில், 'மெசேஜ்' அனுப்புகிறான்...' என்று நினைத்தபடி, 'மெசேஜை' பார்த்தாள்.'ஹாய்... துாங்கிட்டயா; பேசலாமா...' என்று அனுப்பியிருந்தான்.துபாயிலிருந்து பேசுகிறான்; இங்கு இரவு, 10:30 மணி என்றால், அங்கு, இரவு, ௯:00 தான்.'ஓகே...' என்று பதில் அனுப்பினாள்.உடனே, 'வாட்ஸ் - அப்' கால் வந்தது.''ஹாய் நீரஜா... ஹவ் ஆர் யு?'' என்றான், விக்ரம். எப்போதும் போலவே, மயக்கும் குரலில்!''குட்,'' என்றாள் மய்யமாக!மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடின. இவன் குரலைக் கேட்டாலே அப்படித் தான். இரண்டு நாட்களுக்கு முன், நீரஜாவுக்கு அவனை அழைக்க வேண்டும் போல் இருந்தது; கட்டுப்படுத்திக் கொண்டாள். முன்னாள் காதலன்... அவனோடு பேசும் நேரங்கள் எப்போதுமே கிளர்ச்சியுடன் இருந்தாலும், அதில் எந்த அர்த்தமும் இல்லை. காரணம், இன்று, நீரஜா, வேறொருவரின் மனைவி; ஐந்து வயது குழந்தையின் தாய்.இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்றவில்லை. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், ஜாதியும் தான் அவர்கள் காதலைக் கத்தரித்தன.கல்யாணம் என்ற பேச்சு எழுந்ததும், இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. விக்ரமின் அம்மா தற்கொலை செய்து கொள்வேன் என்றாள்; நீரஜாவின் பெற்றோர் அவளை வேலையை விடச் செய்து, ஊரை விட்டே கடத்திச் சென்றனர். இந்தப் புயலில் சிக்கி அலைக்கழிக்கப் பட்டதில், 'நண்பர்களாக இருப்போம்...' என்று முடிவு எடுத்து பிரிந்தனர். பெண் என்பதால், நீரஜாவின் திருமணம் அடுத்த ஆண்டே நடந்தது; வேலை மாறி துபாய் சென்று விட்டான், விக்ரம். ஆனால், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.இது குறித்து, ஒருநாள் நீரஜா, 'நான் தான் உனக்கில்லன்னு ஆகிடுச்சுல்ல... இன்னும் ஏன் கல்யாணத்த தள்ளிப் போடுறே...' என்று கேட்ட போது, அசட்டையாக, 'என்னவோ எதுவும் சரியா அமையல...' என்றான்.'உன் வீட்டில் எப்படி சும்மா இருக்காங்க...' என்றாள்.சிரித்தபடி, 'என்ன இருந்தாலும் நான் ஆம்பளை; அதுவும், வெளிநாட்டில் இருக்கேன்; இழுத்துப் போய் தாலி கட்ட வைக்க முடியாது இல்ல...' என்றான்.'ஒருவேளை, நீ இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறாயோ...' என்றாள், அவன் பதிலை தெரிந்து கொள்ளும் ஆவலுடன்! 'தெரியல... எப்போதாவது, உன் நினைவு வரும்; கொஞ்சம் வருத்தமாக இருக்கும். ஆனால், நீ சந்தோஷமா இருக்கிறதால, அதைப் பெரிசா எடுத்துக்க மாட்டேன்...' என்றான்.இந்த விட்டேற்றியான பதில், நீரஜாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவளும், அவன் நிலையில் தான் இருந்தாள். கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், அவன் நல்ல வேலையில், மகிழ்ச்சியாய், இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்பது, ஒரு சின்ன சந்தோஷத்தை தந்தது.அவள் நினைவுகளை கலைக்கும் விதமாக, ''நீரஜா... நான் உனக்கு ஒரு செய்தி சொல்லணும்...'' என்றான், விக்ரம்.''என்ன செய்தி...'' என்று கேட்டாள்.''விக்ரம் திருமணம் செய்துக்கப் போகிறார்,'' என்றான். அவன் குரலில் லேசான சிரிப்பும், மகிழ்ச்சியும் தெரிந்தது.நீரஜாவுக்கு, அடிவயிற்றிலிருந்து சிறு பொறி கிளம்பி, இதயத்தையும், தொண்டையையும் அடைத்தது போல் இருந்தது.அவளை அறியாமலேயே, அனிச்சையாக தொடர்பை துண்டித்தாள்.ஒரு நொடிக்குப் பின், மொபைல் மீண்டும் ஒலித்தது; நீரஜா எடுக்கவில்லை. நான்கு, ஐந்து சுற்றுகளுக்குப் பின், தானே நின்று விட்டது.'விக்ரம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துட்டான்...' என்ற செய்தி, அவளுக்கு சொல்ல இயலாத சோகத்தையும், பொறாமையையும் ஏற்படுத்தியது.துாக்கம் முற்றிலுமாக கலைந்து விட்டது.நல்லவேளையாக, அவள் கணவன் ஆபீஸ் டூர் போயிருந்தான். குழந்தை துாங்கிக் கொண்டிருந்தாள்.புரண்டு புரண்டு படுத்தாள், நீரஜா. எழுந்து பெட்ரூம் கதவைத் திறந்து, பால்கனியில் வந்து நின்றாள். அவள் இருந்த பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்த கட்டடத்தின் பத்தாவது மாடியிலிருந்து பார்த்தபோது, மின் விளக்குகளின் ஒளியில், அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருந்தது, சென்னை.'அவன் திருமணம் செய்யப் போவது, என்னை ஏன் சலனப்படுத்தணும்... பெண்களுக்கே உள்ள பொறாமைக் குணமோ... ஏன் இத்தனை கேவலமாக நடந்து கொண்டேன்...' என நினைத்த நீரஜாவுக்கு, தன் செயல் குறித்து, வெட்கம் ஏற்பட்டது.'நான் அவனை காதலித்ததும், இன்றும், அந்த காதலை, அவன் மீது அக்கறை அல்லது அன்பு என்ற உணர்வில் காட்டுவதும் நிஜமானால், நான் அப்படி நடந்திருக்கக் கூடாது...' என்று எண்ணியவள், திரும்ப உள்ளே சென்று போனை எடுத்து, விக்ரமுக்குப் போன் செய்தாள்.மூன்று, 'ரிங்'கிற்கு பின்னர் எடுத்தான்.''நீ போனை, 'கட்' செய்வன்னு நினைச்சேன்; அதேபோல் செய்தாய்,'' என்றான், லேசான கேலிக் குரலில்!''சாரி விக்ரம்...''''இட்ஸ் ஓகே., நீ என்னை வாழ்த்தணும் அல்லவா... 'சாரி'ங்கிறே,'' என்றான் சிரித்தபடி!'இது தான் அவன் குணம்; எதையும் எளிதாக எடுத்துக் கொள்வான். மனதில் எதையும் ஒளிக்கத் தெரியாது...' என்று எண்ணி, ''நான் சாரி கேட்டது, நான் நடந்து கொண்ட விதத்திற்கு. இனிமேலும், நான், உன் மீது, 'பொசசிவ்'வாக இருப்பது தப்பு. நாம் எல்லாருமே அவரவர் பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம். போனை, 'கட்' செய்ததற்கு மறுபடியும் சாரி,''என்றாள்.''ஹேய் இட்ஸ் ஓகே... அடுத்த வாரம் சென்னை வர்றேன். பெண் பெயர் திவ்யா; அவளும் சென்னையில் தான் இருக்கிறா. தனியார் நிறுவனத்தில், ஹெச்.ஆர்., ஆக வேலை செய்றா...'' என்றான்.''துபாய் போகணும்ன்னா...''''வேலைய விட்டு, இங்கு வந்து வேறு வேலை தேடிக்கொள்வதாக சொல்லியிருக்கா...''''கேட்டால் தப்பாக நினைக்க மாட்டியே...''''இல்ல; கேள்...'' என்றவன், ''நீ என்ன கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியும்,'' என்றான்.''என்ன...''''இத்தனை நாளா, கல்யாணம் வேணாம்ன்னு தட்டிக் கழித்தவன், இப்போ எப்படி சம்மதிச்சன்னு தானே...''''அதே தான்...''''எனக்கு தெளிவாகச் சொல்லத் தெரியல. இவளுடன், 'சாட்' செய்தது... போட்டோவில் பாத்தது, பின், நேரில் பாத்துப் பேசியது எல்லாமே, ஒரு வகையில் எனக்கு திருப்தியாக இருந்தது. பாக்கப் போனா, நான் எதிர்பார்த்ததற்கு மேலாகவே, அவ, என்னை காதலிப்பது போல் தோன்றியது,'' என்றான் சிரித்தபடி!''அப்ப செம, 'ரொமான்ஸ்' தான்,'' என்றாள் கிண்டலாக!''அப்படித் தான் வைச்சுக்கோயேன்,'' என்றான்.மீண்டும் மனதில், பொறாமை, 'ஜிவ்'வென்று கிளம்பி, சோகமாகக் கீழே இறங்கியது.பத்து நிமிட உரையாடலுக்குப் பின், 'பை...' என்று பேச்சை முடித்தனர்.விக்ரமும், திவ்யாவும் அடையாறில் இருந்த, 'காபி டே'யில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இது, அவர்களின் இரண்டாவது சந்திப்பு.வழக்கமான சில விளையாட்டுத்தனமான காதல் உரையாடல்களுக்குப் பின், ''திவ்யா... இப்ப, நான் உன்னை ஒரு முக்கியமான நண்பரின் வீட்டுக்கு அழைத்துச்சுட்டுப் போகப் போறேன்,'' என்றான், விக்ரம்.''யார் அது?''''போனதும் தெரியும்; வருவாய் தானே...'' ''நீங்க என்னை எங்க அழைத்துச்சுட்டுப் போனாலும் உடன் வரத் தயாரா இருக்கேன்,'' என்றாள், சிரித்தபடி!உடனே, தன் மொபைலில், நீரஜாவிடம் பேசினான், விக்ரம்.''நாங்க உன் வீட்டிற்கு வந்துட்டு இருக்கோம்,'' என்று சொல்லி, போனை வைத்து விட்டான்.அடுத்த அரை மணியில், நீரஜாவின் வீட்டை அடைந்தனர்.கதவைத் திறந்த நீரஜா, இருவரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த அவளது கணவன் எழுந்து வந்து, விக்ரமுடன் கை குலுக்கினான்.''வாழ்த்துகள்...'' என்ற நீரஜா, திவ்யாவைப் பார்த்து, ''ஹாய், திவ்யா...'' என்றாள் சகஜமாக! இன்னொரு சோபாவில் அமர்ந்திருந்த, நீரஜாவின் மூன்று வயது குழந்தையிடம் சாக்லெட்டை நீட்டினான், விக்ரம். அது, தயக்கத்துடன் தாயின் முகத்தைப் பார்க்க, ''வாங்கிக்கிட்டு தாங்க்ஸ் சொல்,'' என்றாள் நீரஜா.பரஸ்பர அறிமுகத்திற்கு பின், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின், ''எக்ஸ்க்யூஸ் மீ...'' என்று எழுந்து, சமையலறைக்குச் சென்றாள், நீரஜா. ஒரு வினாடிக்கு பின் திவ்யாவும் எழுந்து அவள் பின் சென்றாள்.''நான் உங்களுக்கு உதவலாமா...'' என்று கேட்டபடி, சமையலறைக்குள் வந்த திவ்யாவை, புன்னகையுடன் பார்த்தாள், நீரஜா.''ஸ்பெஷலாக எதுவுமில்ல; காபியும், பிஸ்கட்டும் தான்,'' என்று கூறி, காபியைக் கலந்தபடியே, ''விக்ரம் என்ன சொல்றான்...'' என்று கேட்டாள், நீரஜா.ஒரு நொடி தயங்கி, ''விசேஷமாக எதுவும் சொல்லல; ஏன்?'' என்று கேட்டாள்.''நீ ரொம்ப லக்கி; விக்ரம் ரொம்ப நல்ல பிள்ளை,''என்றாள், நீரஜா.''தாங்க்யூ... அது எனக்கே புரிந்து விட்டது. முதலிலிருந்தே...'' என்றாள்.''அப்படியா...'' என்ற நீரஜா, ''உனக்கு தெரியுமா... ஒரு காலத்தில நாங்க காதலர்கள்...'' என்றாள்.திகைப்பா, அதிர்ச்சியா என்று சொல்ல முடியாத உணர்ச்சி, மின்னல் போல், திவ்யாவின் முகத்தில் தோன்றி, மறைந்தது.''உன்னிடம் சொன்னானா...'' காபியை கோப்பைகளில் ஊற்றியபடி கேட்டாள், நீரஜா.''இல்ல; ஆனா, உங்களப் பாத்த பின், அவர் என்னிடம் எதுவும் சொல்லாததிலிருந்தும், என்னால் ஊகிக்க முடிந்தது.''''அப்படியா...'' என்றாள், வியப்புடன்!''நீங்கள் இவ்வளவு அழகாக இருக்கிறீர்களே... அதுவே காட்டிக் கொடுத்துட்டது,'' என்றாள், திவ்யா புன்னகையுடன்!''அவன் உன்னிடம் சொல்லியிருப்பான்னு நினைச்சேன்; ஐ'ம் ஸாரி... நான் உன்னைக் காயப்படுத்திட்டேனா...'' ''இல்ல,'' என்றவள், ''ஏன்னா, விக்ரம் என்னை காதலிக்கிறத விட, நான் அவரை அதிகமாகக் காதலிக்கிறேன். அதனால், எனக்கு அவரிடம் உள்ள எந்தக் குறையும் பெரிதாகத் தெரியாது,'' என்றாள்.வியப்புடன், திவ்யாவைப் பார்த்த நீரஜா, ''நீ சொல்றது நிஜம் தான்,'' என்றாள் மென்மையான குரலில்!பின், காபி அருந்தியபடி எல்லாரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். விக்ரமும், திவ்யாவும் கிளம்பினர்.''இன்னொரு நாள், கல்யாணப் பத்திரிகை கொடுக்க வர்றோம்,'' என்று கூறி கிளம்பிய போது, திவ்யா, நீரஜாவின் அருகில் சென்று, அவளை அணைத்து, மெல்லிய குரலில், ''நீங்களும் அதிர்ஷ்டசாலி தான், விக்ரமின் நண்பராக இருப்பதற்கு,'' என்றாள்.திவ்யாவை வியப்புடன் பார்த்து, புன்னகை செய்து, ''ஆமாம்,'' என்றாள், நீரஜா.காரில் திரும்பும்போது, இருவருமே சிறிது நேரம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. விக்ரம் குரலைக் கனைத்து, ''அப்புறம்...'' என்றான், புன்னகையுடன்!பதிலுக்கு புன்னகைத்து,''அப்புறம்... நாளைக்கு நாம் அண்ணா நகர் போறோம்,'' என்றாள், திவ்யா.''அங்கே யாரை பாக்கணும்...'' ''உங்க மனைவியின் நண்பனை,'' என்றாள், புன்னகை மாறாமல்!ஒரு நிமிஷம் திகைத்த விக்ரம், புன்முறுவலுடன், திவ்யாவைப் பார்த்துச் சொன்னான்...''கட்டாயம்!''- ஜி.சுவாமிநாதன்