உள்ளூர் செய்திகள்

சிறகுகள் நீளூதே!

நிசப்தத்தைக் கலைத்தது, வீட்டுத் தோட்டத்திலிருந்து வந்த தேன் சிட்டின் குரலால், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கீர்த்திவாணி புரண்டு எழுந்தாள். மகன் நிர்மலின் கால், இவள் தொடை மேல் அழுத்தியிருக்க, மெல்ல எடுத்து நகர்த்தினாள்.ஜன்னலில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சத்தைப் பார்த்து, 'அடடே... நேரமாகி விட்டதே...' என, நினைத்தவளுக்கு, அடுத்த கணமே, சுறுசுறுப்பு ஒட்டிக் கொள்ள, அடுத்தடுத்த வேலைகளில் பரபரவென ஈடுபட்டாள்.பற்களை துலக்கி முடித்து, ஹாலுக்கு வந்தவளின் கண்களில், சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தின் ஓரத்தில், சிலந்தி கூடு கட்டியிருந்தது தெரிந்தது. வேகமாக துணியை எடுத்து துடைத்தவளுக்கு மனம் கனத்தது. அது, அவள் கணவருடன் இருக்கும் புகைப்படம்!மணி, 10:30 அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் இருந்தவள், மொபைல்போனின் அழைப்பு கேட்டு எடுத்துப் பார்த்தாள்; நிர்மலின் வகுப்பாசிரியை!மனம் பதற்றமாக, 'நிர்மலால் யாருக்கேனும் பிரச்னையோ...' என யோசித்தவளாக, ''ஹலோ... வணக்கம் மேடம்,'' என்றாள்.''வணக்கம்; உங்க கிட்ட பலமுறை புகார் செய்துட்டேன்; நிர்மல், 'போர்டை' பாத்து எழுதறதே இல்ல. எங்களால முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு, 'சப்போர்ட்' செய்துக்கிட்டு தான் இருக்கோம். அவனோடே, க்ளாஸ் வொர்க்கை, மத்த பிள்ளைங்க தான் எழுதி தர்றாங்க. ஆறாவது படிக்கிற பையனுக்கு, இன்னும் எத்தனை வருஷம் எழுதிக் கொடுத்துட்டுருக்க முடியும்?''''புரியுது மேடம்... வீட்ல நானும் சொல்லி குடுத்துட்டு தான் இருக்கேன். தெரபி மிஸ்கிட்டே பேசறேன்; கொஞ்சம்...'' என்று அவள் முடிக்கும் முன், ''எங்க கஷ்டத்தையும் புரிஞ்சுக்கங்க; கரஸ்பாண்டட் நாளைக்கு உங்கள வந்து பாக்க சொன்னார்.''''நிச்சயமா மேடம்... நான் நாளைக்கு வரேன்,'' என்றாள்.'கடவுளே... எப்போது தான் கண் திறப்பாய்... அவன் படும் கஷ்டங்கள திரும்பப் பெற, உனக்கு எப்போது தான் மனசு வரும்...' என நினைத்தவாறே, வீட்டைப் பூட்டி, தெருவில் இறங்கினாள் கீர்த்தி.அவளின் கல்லூரித் தோழியின் கம்பெனியில், மார்க்கெட்டிங் ஆபிசராக பணிபுரிகிறாள்; பெரிதாய் வருமானமில்லை. ஆனாலும், பத்துக்குள் அடங்கி விடுகிற அந்த சம்பளத்தை விட, பல பிரச்னைகளில் அயர்ந்து போகும் மனதிற்கு, அந்த சில மணித்துணிகள், எல்லாவற்றையும் மறக்க வைத்து, சாமரம் வீசி விடுகிறது.பெங்களூரு —காரை வேகமாய் ஓட்டிக்கொண்டிருந்த கோகுல், மனைவியிடமிருந்து போன் வர, சாலையோரம் நிறுத்தி, ''சொல்லு டார்லிங்...'' என்றான்.அடுத்த கணம், எதிர்முனையிலிருந்து வந்த தகவல் கேட்டு, துள்ளாத குறையாய், 'வாவ்' என்று கையை உயர்த்தி சந்தோஷித்தான்.''கங்க்ராட்ஸ் டியர்... எவ்ளோ பெரிய விஷயம் சொல்லியிருக்கே... இன்னைக்கு இரவு, மெரிடியென் ஓட்டல்ல டின்னர். பசங்கள தயார் செய்திடு; சீக்கிரமாக வந்துடறேன்,'' என்றான் உற்சாகத்துடன்!இதுநாள் வரை கல்லூரி பேராசிரியையாக இருந்த மனைவி, இப்போது புரபஸர்! அதற்கு தான் இவ்வளவு சந்தோஷம்!ரயில்வேயில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறான் கோகுல். நான்காவது மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் இருபிள்ளைகளும், அழகான, புத்திசாலியான தேவதை போன்ற மனைவியும் அமைந்திருப்பதை எண்ணி, மனதுக்குள் அடிக்கடி பெருமிதமடைவான்.சந்தோஷ மிகுதியில், காரை வேகமாய் ஓட்டியவனுக்கு, கீர்த்தியின் நினைவு வந்தது. உடனே, அவன் சந்தோஷமெல்லாம் சடுதியில் வெறியாய் மாற, 'சின்ன விஷயத்துக்காக, உன்னதமான மூணு வருஷ காதலையே தூக்கி எறிஞ்சியே... என் மனைவி எப்படிப்பட்டவள்ன்னு உனக்கு தெரிய வேணாமா... உன்னை சீக்கிரமே பாக்க வர்றேன். 'ஐய்யோ... மிஸ் பண்ணிட்டோமே'ன்னு, உன்னை தவிக்க வைக்கிறேன்...' என்று மனதில் கறுவிக் கொண்டான்.இரண்டு நாட்களுக்கு முன், அவளின் கல்லூரி தோழியிடமிருந்து கீர்த்திவாணியின் மொபைல் எண்ணை வாங்கியிருந்தான். இப்போது, அந்த எண்ணிற்கு அழைத்தான்.தெரபி கிளாசிற்கு செல்ல, தேவையான பொருட்களை பிளாஸ்டிக் பையில் எடுத்து வைத்து கொண்டிருந்த கீர்த்தி, மொபைல் சத்தம் கேட்டு, எடுத்துப் பார்த்தாள். புது எண்ணாக இருந்ததால், யாராகயிருக்கும் என நினைத்தபடி, போனை எடுத்து, ''ஹலோ,'' என்றாள்.பல ஆண்டுகளுக்கு பின், அவள் குரலைக் கேட்டதில், கோபத்தை மீறி, கோகுலின் மனது சிலிர்த்தது.''ஹலோ... கீர்த்தி!''''ஆமா... நீங்க...''''கோகுல்!''''எந்த கோகுல்?''''இந்த பேர்ல உனக்கு எத்தனை பேரை தெரிஞ்சுருந்தாலும், உன் வாழ்க்கையிலே தவிர்க்க முடியாத, ஆனா, மறந்தே ஆகணும்ன்னு தவிர்த்த வகையிலே, ஒரே ஒரு கோகுல் தானே இருப்பான்...''யாரென்று புரிய, அதிர்ந்து போனவள், ''கோ...குல்...'' என்றாள் எழும்பாத குரலில்!''ஆமா... ரீசன்ட்டா தான் உன் நம்பர் கிடைச்சது; எப்படியிருக்கே?''''நல்லாயிருக்கேன்...''''பதிலுக்கு நீ கேக்க மாட்டியா... பரவாயில்ல, நானே சொல்லிடுறேன்; எக்கச்சக்க சந்தோஷமா இருக்கேன். சரி... நான், உன்ன பாக்கணுமே... அடுத்த வாரம் சென்னை வர்றேன்; பாக்கலாமா?''''அது... அது எதுக்கு; வேணாமே!''''ஏன்... உன் கணவர் சந்தேகப்படுவாரா...''''சீச்சீ...''''இல்ல... என்னை பாக்க சங்கடமாயிருக்கா...''''நத்திங்! எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க,'' என்றாள் காட்டமாய்!''வெல்,'' என்று சிரித்தான் கோகுல்.கோகுல் போன் செய்த அதிர்விலிருந்து விடுபட முடியாமல் திணறி கொண்டிருந்த வேளையில், நிர்மல் ஆட்டோவிலிருந்து இறங்கி வந்தது கூட அறியாமல் எங்கோ வெறித்தபடி இருந்தாள் கீர்த்தி.அம்மாவை அடிக் கண்ணால் முறைத்து, பட்டென அவள் தோளில் அடித்தான் நிர்மல்.''ம்மா...'' என்று அலறி, வலியில் சுருண்டு போனாள் கீர்த்தி.''உன்னை யாரு மதியத்துக்கு லெமன் ரைஸ் தரச் சொன்னது; வெஜ் பிரியாணி தானே கேட்டேன்,'' என்றான்.''அதுக்கேன்டா இப்படி அடிக்கிற...'' என்று கூறியவாறே, அடித்த இடத்தை கையால் அழுத்திக் கொண்டாள்.''சொன்னதை செய்யலேன்னா இப்படி தான் அடிப்பேன்; உன்னை, எனக்கு பிடிக்கல; எனக்கு அப்பா வேணும். போனைப் போட்டு வரச் சொல்லு!''அவனிடம் அடிக்கடி வந்து விழுகிற வார்த்தை தான். ஆனால், சலிப்பு காட்டி, அலட்சியம் செய்துவிட முடியாது; பொறுப்பான பதில் வரும் வரை விட மாட்டான். அதுதான் நிர்மலின் பிரச்னையே!ஆட்டிசத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறான்; முழுக் கவனம் செலுத்தினால், பெரிய பாதிப்பில்லை. எல்லாரையும் போல் முழுதாய் மாற்றி விடலாம். கிட்டத்தட்ட முக்கால் கிணறு தாண்டியாகி விட்டது. சிற்சில விஷயங்கள் தான், அவனை மற்ற பிள்ளைகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. எப்போதும் பரபரப்பாய் இருப்பான்; பிடிக்கிற விஷயங்களை மட்டும் செய்வான்; சுற்றி இருப்போரைப் பற்றி யோசிக்காமல், தன்னிச்சையாய் செயல்படுவான்; ஆனால், புத்திசாலி!மூன்று வயதில் தான், அவனோட பிரச்னையே தெரிய வந்தது. உடனடியாக, அதற்கான சிறப்பு வகுப்பில் சேர்த்ததுமில்லாமல், அதை, தானும் தெரிந்து கொண்டு, வீட்டிலும், பயிற்சி அளித்தாள். அதனால் தான், இந்த வேகமான முன்னேற்றம்.கணவன் துவாரகேஷ், பிரபல தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. அவள் மீதும், மகன் மீதும் பிரியமாகத் தான் இருந்தான். ஆனால், அவனை தேடி யாராவது வீட்டிற்கு வந்துகொண்டே இருப்பர். அப்படி வருவோர், நிர்மலின் செயல்களில் காணப்பட்ட சிறு வித்தியாசத்தை உணர்ந்து, 'என்ன சார்... பையனுக்கு பிரச்னையா... எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்கார்...' என, ஆளாளுக்கு யோசனை சொல்ல ஆரம்பிக்க, துவாரகேஷின் தவிப்பு, கோபமாய் மாற ஆரம்பித்தது; பையனை வெளியுலகில் காட்டவே தயங்கினான்.'என் பக்கத்துல எந்த குறையும் இல்லாத போது, குழந்தைக்கு எப்படி இந்த பிரச்னை வந்தது...' என, விசாரித்து பார்த்ததில், கீர்த்தியின் கொள்ளுப் பாட்டி, இடையில் மனநலம் பாதிக்கப்பட்டு இறந்து போன தகவல் கிடைத்ததும், முடிவே செய்து விட்டான். கீர்த்தியின் ஜீனில் இருக்கும் குறைபாடு தான், நிர்மலை இப்படி ஜனிக்க வைத்தது என்று!மன உளைச்சலுக்கு ஆளான துவாரகேஷ் கொடுத்த டார்ச்சரினால், கீர்த்தி மனநலம் பாதிக்கப்படாதது தான் குறை. எங்கே அவளோடு தாம்பத்யம் கொண்டால், மறுபடி கர்ப்பமாகி, நிர்மலை போல் ஒரு குழந்தையை பெற்று விடுவாளோ என்ற பயத்தால், அவளை மனதளவிலும், உடலளவிலும் ஒதுக்கி வைத்தான்.கீர்த்திக்கு இதெல்லாம் பெரிய பிரச்னையாய் தெரியவில்லை. நேர் பார்வையாய், பாய்ந்தோடும் பந்தய குதிரையை போலானாள். அவள் இலக்கெல்லாம், நிர்மலை சரி செய்வது மட்டும் தான். சரியாய் இருந்த கணவன், திசை மாறி போனதை நினைத்து அழ நேரமில்லை; அதற்காக அழாமலும் இருந்ததில்லை.பெங்களூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டான் துவாரகேஷ். மாதம் ஒருமுறை பையனை பார்க்க வருவான். அவன் அன்பில் கலப்படமில்லை; பயம் தான். ஆனால், கீர்த்தியிடம் ஓரிரு வார்த்தைகளோடு சரி! அப்பா வரும் நாட்களில், நிர்மலிடம் தென்படும் சந்தோஷத்தை காண, கண் கோடி வேண்டும். ஆயிற்று... ஆறு ஆண்டுகள் ஓடோடி விட்டது. இந்த, 34 வயதில், 50 வயதுக்குரிய சுமையும், அனுபவமும் கிடைத்து விட்டது.கடவுள் எல்லாருக்கும் இது போல் குழந்தைகளை கொடுப்பதில்லை. இவள் உயிருக்குயிராய் பார்த்து கொள்வாள், மீட்டெடுப்பாள் என்று நம்பி தான், இவளிடம், நிர்மலை ஒப்படைத்திருக்கிறார். கணவன் தெரிந்தே செய்கிற தவறை மன்னிப்பவளுக்கு, தெரியாமல் அவளை கஷ்டப்படுத்தும் மகனின் மீது மட்டும் எப்படி கோபம் வரும்!அவளின் சொந்த பந்தங்கள், நிர்மலைப் பற்றி தவறான கருத்துகளையும், ஆலோசனைகளையும் கூறியதால், அவர்களையும் தவிர்த்தாள்.அவனுக்காக ஒதுக்கிய நேரம் போக, தனக்காக பயன்படுத்தி கொண்டது, தோட்ட பராமரிப்பிற்கும், பகுதி நேர வேலைக்காகவும் மட்டும் தான்!துவாரகேஷை, யாரோ ஒரு பெண்ணுடன் பெங்களூரில் பார்த்ததாய், பலபேர் அவளிடம் கூறியதுண்டு.இதயத்தை ரம்பமாய் கூறு போட்ட தகவல் தான்! இருப்பினும், 'அவனாவது சந்தோஷமாக இருக்கட்டும்...' என்று வலுக்கட்டாயமாய், அவனை நினைப்பதை தவிர்த்தாள்.காய்ந்த சருகுகள் மண்டிக் கிடக்கும் பொத்தல் காடாய் அவள் மனம் மாறியிருந்தாலும், அதில், அவ்வப்போது நீரூற்றுவது, நிர்மலின் அரவணைப்பும், அவன் தரும் முத்தங்களும் தான். அதுவும், அவனுக்கு பிடித்ததாய் சமைத்து போட்டால், இவை இரட்டிப்பாய் கிடைக்கும்!ஞாயிற்று கிழமை காலை வீட்டின் முன், இடப்புறமாய் தான் வளர்க்கும் தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சி கொண்டிருந்தாள் கீர்த்தி. இலைகளின் நுனியிலும், பூவிதழ்களிலும் அமர்ந்திருந்த பனித்துளிகளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், கேட் கிறீச்சிடும் சப்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள்.சற்றே சதைப்பற்றுடன் சாட்சாத் கோகுலே தான்!''வா... வாங்க,'' முகத்தில் வலிய சிரிப்பை ஒட்டி கொண்டு வரவேற்றாள்.அவளை பின்தொடர்ந்து வீட்டினுள் வந்தவனுக்கு ஆச்சர்யம்.'இவளா கீர்த்தி... சிறகு முளைத்த ரோஜாவாய் பளபளத்த அவள் எங்கே... வாடிய முல்லைச் சரமாய், களையிழந்து ஒளியிழந்திருக்கும் இவள் எங்கே... ஸோ... கீர்த்தி சந்தோஷமாய் இல்ல...' மனசோரம் சின்ன வில்லத்தனம் குதூகலித்தது.''எப்படியிருக்கே கீர்த்தி...'' வாங்கி வந்த இனிப்புகள் அடங்கிய கவரை நீட்டினான்.பிகு செய்யாமல் வாங்கி கொண்டவள், மெல்ல முறுவலித்து, ''ரொம்ப நல்லாயிருக்கேன்; உங்க வீட்ல...''''வெரி பைன்!''''எத்தனை குழந்தைங்க?''''ரெண்டு பிள்ளைங்க,'' என்றவன், ''உன் கணவர் எங்கே கீர்த்தி?'' என்றான்.''வெ... வெளியே, நண்பரை பாக்க போயிருக்கார்,'' என்று அவள் சொல்லும் போதே, அவன் கண்கள் உள்ளறைகளில் பரவின.''எத்தனை குழந்தைங்க?'' என்று கேட்டு வாயை மூடுமுன், ''ஹாய் அங்கிள்... யாரு நீங்க... இதென்ன கவர்... ஸ்வீட்டா; வெரிகுட்!'' என்றபடி பதில் எதிர்பார்க்காமல், அம்மா கையில் இருந்த கவரை, கிட்டத்தட்ட பறித்து கொண்டு ஓடினான் நிர்மல். அவன் ஓடிய விதமும், பாடி லாங்வேஜும் புரிய, கேள்வியுடன் கீர்த்தியை பார்த்தான்; வேறு வழியில்லை. எல்லா உண்மையும் சொல்வதற்கில்லை என்றாலும், அவன் பெரிதாய் கற்பனை வளர்த்து கொள்ள கூடாதே என்று, சிறு சங்கடத்துடன் சுருக்கமாய் சொன்னாள்.''ஓ... சாரி,'' என்றான் ஆதங்கத்துடன்!''எதற்கு சாரி... மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தற அளவிற்கு, என் பையனுக்கு ஏதுமில்ல,'' நோக்கமற்ற பார்வையுடன், அவள் கூறிய வார்த்தைகள் சுருக்கென்றிருந்தன.அதன்பின், வேலை, நண்பர்கள் என்று பேச்சு சுழல, ''உங்க மனைவிய பத்தி எதுவும் சொல்லலே,'' என்றாள்.''அவளுக்கென்ன...'' என்று ஆரம்பித்தவன், அப்போது தான் அந்த புகைப்படத்தை பார்த்தான்.கீர்த்தியுடன் துவாரகேஷ்!அதிர்ச்சியின் விளிம்பிற்கே சென்றான்.''இ... இது!''''என் கணவர்.''''துவாரகேஷ் தானே?''''உ... உங்களுக்கு எப்படி தெரியும்...''''ரொம்ப நல்லாவே தெரியும்,'' என்றான் அழுத்தமாய்!''நீ நல்லா இருக்கியா கீர்த்தி,'' குரல் இளக்காரமாய் வந்தது.''ம்... எனக்கென்ன...''''உன் கணவர் பத்தி தெரியும் தானே...''''என்ன... எதைப்பத்தி...'' தடுமாறினாள்.''அவர் வாழ்ந்து கொண்டிருப்பது, என் நண்பனின் தங்கையுடன்! சிலமுறை, அவனுடன் அங்கே சாப்பிட சென்றிருக்கிறேன். பொய் பேசினால் உனக்கு பிடிக்காதே...''கண்கள் சுரக்க, அதை மறைக்க படாதபாடு பட்டாள் கீர்த்தி.''சில உண்மைகளை சொல்லியே ஆகணும்ங்கற கட்டாயம் இல்லயே...''''ம்,'' என்று தலையாட்டியவன், ''இப்போ அவள் ரெண்டாவது குழந்தை பிரசவத்துக்காக காத்திருக்கிறாள்,'' என்றான்.இது அவளுக்கு புது தகவல்!''குழந்தையெல்லாம் இருக்குதா...'' தன்னை மீறி கேட்டு விட, அவளை பரிதாபமாய் பார்த்தான் கோகுல்.''அப்ப... உனக்கு எதுவுமே தெரியாதா...''''அந்தக் குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லயே!''''இல்ல,'' என தலையாட்டியவன், ''உன்னை ஒண்ணு கேக்கவா... நாம காதலிச்ச காலத்தில விளையாட்டாய் வேற பொண்ணுக்கிட்ட பேசினத, பெரிய குற்றமாய் நினைச்சு, என்னை தூக்கி எறிஞ்சியே... இப்ப உன் புருஷன், உனக்கே தெரியாம, இவ்வளவு பெரிய தப்பை செய்றாரே... இப்ப என்ன செய்யப் போற...'' கண்கள் சுருக்கி, காட்டமாக கேட்டான்.மெல்ல சிரித்தபடி,'' நான் ஒண்ணும் ஆராயாம கோகுலை தூக்கி எறியலையே... அந்த பெண் மீது நட்பை தாண்டி, சிறு சலனம். ஆண்கள் என்ன செய்தாலும் நியாயமாகிடுமா...'' என்றாள்.''படிக்கிற காலத்திலே புரட்சி பெண்ணா, எல்லாருக்கும் முன்மாதிரியா இருந்தியே... அந்த தீப்பொறி இப்ப எங்கே போச்சு...''''காதலன் சரியில்லன்னா மாத்தறதுல தப்பு இல்ல; ஆனா, என் குழந்தையோட அப்பாவ மாத்த முடியாது இல்லயா... எல்லாருக்கும் வாழ்க்கைய தேர்ந்தெடுக்க உரிமையிருக்கு; ஏன், நானில்லாம, நீங்களும் வாழ்ந்துட்டு தானே இருக்கீங்க. எனக்கு யாரும் தேவை இல்ல: ஆனா, என் பிள்ளைக்கு அவங்க அப்பா வேணும். ''எல்லா தவறுகளுக்கும் ஒரு காரணம் தேவைப்படுது; அவருக்கு காரணம் கோழைத்தனம். என் பிள்ளைகிட்ட எனக்கு கிடைக்கிற அத்தனை சந்தோஷத்தையும் அவர் இழக்கிறாரே... இதை விட அவருக்கு என்ன தண்டனை வேணும்... அழுது, ஆர்ப்பாட்டம் செய்து என்ன சாதித்து விட முடியும்?''என் பிள்ளைய சரியாக்கி, தப்பா பேசினவங்களை எல்லாம் புழுவை மாதிரி ஒரு பார்வை பார்க்கணும். அந்த நாள் வராமலா போகும்... இதிலே அவரையும் சேர்த்து தான் சொல்றேன்,'' படபடவென கொட்டும் மழையாய் பேசினாள்.பழைய கீர்த்தி புலப்பட ஆரம்பித்தாள்.அவளை பெருமிதமாய் பார்த்து புன்னகைத்தான்.பூக்கள் உதிர்ந்தாலும், வாசம் உண்டு; மேகங்கள் கடந்து போனாலும் வானம் உண்டு; வாழ்க்கையும் அதைப் போன்று தான்!இப்போது, அவளை நட்புடன், வாத்சல்யத்துடன் பார்த்தான் கோகுல். கீர்த்தியின் வைராக்கியம், அர்ப்பணிப்பால், அவள் மகனை முழுதாய் மீட்டெடுப்பாள்!கோகுலின் உள்ளத்தில், நம்பிகை சூரியன் உதித்தது.எஸ்.சரித்ராகல்வித் தகுதி: பி.பி.ஏ.,பணி: தனியார் நிறுவனத்தில் மேலாளர்; டி.வி.ஆர்., சிறுகதை போட்டியில், ஆறுதல் பரிசு பெற்றது, மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதல் பரிசு பெறுவதே தன் லட்சியம் என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !