நீ....ளமான கூந்தல்!
'திருவிளையாடல்' படத்தில், ஒரு சுவாராசியமான காட்சி இடம் பெற்றிருக்கும்...மகாராணியின் கூந்தலுக்கு, இயற்கையிலேயே வாசம் உண்டா இல்லை, மலர்களை சூடிக்கொள்வதால் வாசம் வருகிறதா என்ற விவாதம் நடக்கும்.இந்த விவாதத்தில் சிவபெருமானே புலவர் வேடத்தில் வந்து, நக்கீரனோடு வாத, பிரதிவாதம் செய்வார்.கடைசியில் மலர்களை சூடுவதாலும், வாசனை திரவியங்கள் பூசிக் கொள் வதாலும்தான் வாசம் ஏற்படுகிறது என, தீர்ப்பு கூறப்படும்.இதை, எதற்கு சொல்கிறோம் என்றால், அந்த காலத்தில் கூந்தலிலில் ஏற்படும் வாசம் இயற்கையா, செயற்கையா என்று விவாதம் நடந்தது. இந்தக் காலம் என்றால் கொஞ்சம் நீளமான கூந்தலைப் பார்த்தாலே இந்த கூந்தல் இயற்கையா, செயற்கையா என்ற விவாதம் நடத்தப்படும்.காரணம், அந்த அளவிற்கு அடர்த்தியான, நீளமான கூந்தலை பார்ப்பதே அரிதாகி விட்டது.இந்நிலையில், தரையை தொடுமளவிற்கு அடர்த்தியான, நீளமான கூந்தலுடன் ஒருவர் நடமாடிக் கொண்டு இருக்கிறார் என்றால், ஆச்சரியம் ஏற்படும்தானே!அவர் பெயர் விஜி ரகுநாதன். திருவாரூர் மாவட்டம், வடுகக்குடி கிராமத்தில் பிறந்து, வளர்ந்து அந்த பகுதியிலேயே சித்தா டாக்டராக இருக்கிறார்.இவர், தன், 11வது வயதில் இருந்து கூந்தல் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறார்; தற்போது, 27 வயது.இவரது உயரம், 167 செ.மீட்டர் என்றால், இவரது கூந்தலின் உயரம், 170 செ.மீ., அடர்த்தியும் அதிகம்.கல்லூரியில் படிக்கும் போது இவரை விட இவரது நீளமான கூந்தல் மிகவும் பிரபலமாம். இவரது கூந்தல், தரையில் படர்ந்தபடி செல்லுமாம். பெண்ணின் தலைமுடி தரையில் படக் கூடாது என்று சொன்னதால், அன்று முதல் தன் தலைமுடியின் நீளத்தை அவ்வப்போது வெட்டி குறைத்துக் கொள்கிறாராம். ''நீளமான கூந்தலால் கிடைக்கும் பெருமையோடு ஒப்பிடும் போது, குளித்தவுடன் தலையை துவட்டுதில் ஏற்படும் சின்ன, சின்ன சிரமம் எனக்கு பெரிதாக படுவது இல்லை. செயற்கையான, விலை உயர்ந்த திரவியங்கள் எதையும் கூந்தல் பராமரிப்பிற்கு, பயன்படுத்துவது இல்லை. செம்பருத்தி, மருதாணி, கரிசாலங்கண்ணி போன்ற மருத்துவ குணம் கொண்ட இலைகளின் கரைசலுடன் காய்ச்சி எடுத்த சுத்தமான தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்துகிறேன். யார் கேட்டாலும் சொல்லத் தயாராக இருக்கிறேன்,'' என்கிறார். இவரது மொபைல் எண்: 97889 27753. கலைச்செல்வி