குருபார்வை
ஆனந்த், விழுப்புரம்: 10ம் வகுப்பு முடிக்கவிருக்கும் நான் இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டுமா?நிச்சயம் இல்லை. பல்வேறு தகுதிகளுக்கான பணிவாய்ப்புகளை நமது ராணுவத்தின் முப்படைகளும் கொண்டுள்ளன. நமது தகுதிக்கு ஏற்ற பணியை நாம் தேடலாம். இந்திய தரைப் படையின் கிளார்க் பணியிடங்கள், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் (தொழில் நுட்பம்), நர்சிங் உதவியாளர் போன்றவற்றிலும், கப்பல் படையின் டாக் யார்டு அப்ரெண்டிஸ் பணியிலும், சி.ஆர்.பி.எப்., என்னும் துணை ராணுவப் பிரிவில் கான்ஸ்டபிள் பணியிலும் சேர 10 ம் வகுப்பு தகுதி போதும். ராணுவ பணியில் சேர்ந்த பின்பு உங்களது கல்வித் தகுதியை அதிகப்படுத்திக்கொண்டால் பதவி உயர்வு பெற உதவும்.அபிநயா, மதுரை: உணவு தொழில்நுட்பம் பட்ட மேற்படிப்பு முடிக்கவுள்ள எனது மகளுக்கான வாய்ப்புகள் எங்குள்ளன? இந்தத் துறை வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று. அரசு மற்றும் தனியார் இரு துறைகளிலும் இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், உணவு ஆய்வு கூடங்கள், பெரிய உணவு விடுதிகள், மென்பான தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள், டிஸ்டில்லரி எனப்படும் வடி ஆலைகள் ஆகியவற்றில் இப் படிப்பு முடிப்பவருக்கான வாய்ப்புகள் உள்ளன. அரசுத் துறையிலும் வாய்ப்புகள் உள்ளன. சிறந்த எதிர் காலம் கொண்ட இத்துறையில் வேலை பெற உங்களது பாடத்தில் சிறப்புப் புலமை பெறுவதும் மிக முக்கியம். சிறப்பான தகவல் தொடர்பு திறன் பெற்றிருப்பதும் முக்கியம். சங்கர், நாகமலை: விரைவில் பட்ட படிப்பு முடிக்கவுள்ளேன். மத்திய அரசில் உளவுத் துறையில் சி. ஐ. டி., ஆக பணி புரிய ஆசைப்படுகிறேன். இந்தத் தேர்வு எழுத வேண்டும்?மத்திய அரசின் புலனாய்வு பிரிவுகளில் உதவி காவல் ஆய்வாளராக முதலில் சேரலாம். இதற்கான தகுதி பிளஸ் 2 தான். எனினும் உதவி ஆய்வாளராக சேர அடிப்படை தகுதி பட்ட படிப்பு தான். கிரிமினாலஜி எனப்படும் குற்றவியலில் பட்டப் படிப்பு முடித்திருப்பவருக்கு இதில் முன்னுரிமை தரப்படும். இந்தப் பணிக்கான தேர்வை யு.பி.எஸ்.சி. தான் நடத்துகிறது. அதன் இணையதளத்தை பார்க்கவும்.