குருபார்வை
எனது மகள் பிளஸ் 2 வில் 990 மதிப்பெண் எடுத்திருக்கிறார். 'நீட்' தேர்வு சுமாராக எழுதியுள்ளார். இன்ஜினியரிங் 'கட்-ஆப்' குறைவாகவே உள்ளது. கணிதத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். இன்ஜினியரிங்கில் சேர்க்க வேண்டும் என மனைவி விரும்புகிறார். எந்த படிப்பில் சேர்க்கலாம்? - ரஜினி கணேஷ், மதுரைபிளஸ் 2 என்பது நம் குழந்தைகளின் மிக முக்கியமான படிப்பாக உள்ளது. ஏனெனில் பிளஸ் 2 மதிப்பெண் தான் அவர்களது எதிர்கால படிப்பை தீர்மானிப்பதாக இருக்கிறது. 680 மதிப்பெண் எடுத்து இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் பணம் கொடுத்து சீட் வாங்கி அதை நன்றாக முடித்து கை நிறைய சம்பளம் வாங்குபவரும் உள்ளனர். 1000 க்கு மேல் மதிப்பெண் பெற்று இன்ஜினியரிங் சேர்ந்து சுமாராக படித்து நிறைய அரியர்ஸ் வைத்து படிப்பையே முடிக்காதவரும் உள்ளனர். பிளஸ் 2 வை தாண்டி ஒரு மாணவர் எதிர்கால படிப்பை தேர்வு செய்யும் போது அவரது அடிப்படை பலம் மற்றும் பலவீனங்கள் அடிப்படையில் அந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும். இன்று சாப்ட்வேர் துறையில் வேலையிழப்புகள் பற்றி செய்திகள் வருகின்றன. மேலும் இன்ஜினியரிங் படிப்பில் உள்ள முக்கிய பிரச்னை இன்ஜினியரிங் மேக்ஸ் எனப்படும் கணிதம் தான். ஏற்கனவே கணிதத்தில் விருப்பம் இல்லாத உங்கள் மகள் அதில் சிரமப்படலாம். எனவே பி.எஸ்.சி., பி.சி.ஏ., போன்ற படிப்புகளில் ஒன்றில் அவரை சேர்க்கலாம். மேலும் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், நர்சிங் போன்ற பிற படிப்புகளையும் நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். இன்ஜினியரிங் தான் வேலை கொடுக்கும் என்று நினைக்காமல் பிற படிப்பில் சேரும் போது போட்டித் தேர்வு எழுதி வேலை பெறுவதும் சாத்தியம். இவற்றின் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்யலாம். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளேன். பட்டப்படிப்பு முடித்துள்ள நான் தேர்வுக்கு தயாராவது தவிர என்ன திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்? - ரவி, திண்டுக்கல்பொதுவாக அரசுத் துறையில் நிர்வாக பணியிடங்களுக்கு தயாராகும்போது உங்களுக்கு தட்டச்சுத் திறன் முக்கியம். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் சிறப்பான திறன் பெறுவதுடன் அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற வேண்டும். அடுத்ததாக எம்.எஸ்.ஆபீஸ் கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் வெர்ட், எக்ஸெல் போன்ற அடிப்படை திறன் பெற்று சிறப்பாக அதில் வேலை செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இவற்றில் முதலில் திறனும் தேர்ச்சியும் பெற முயற்சிக்கவும். பிளஸ் 2 முடித்துள்ள எனது மகன் சி.ஏ., படிக்க விரும்புகிறான். சேர முடியுமா? - உமா, விருதுநகர்பிளஸ் 2 முடிப்பவர்கள் சி.பி.டி., எனப்படும் COMMON PROFICIENCY TEST எழுதி தகுதி பெற்றால் தான் சி.ஏ., வை துவங்க முடியும். பட்டப்படிப்பு முடித்தால் இந்தத் தேர்வு தேவை இல்லை.