குருபார்வை
ஐ.டி. துறையில் பணி புரிந்து வருகிறேன். தற்போது இந்தத் துறை குறித்து பலவிதமான தகவல்கள் வருவது என்னை பயமடையச் செய்துஉள்ளது. போட்டித் தேர்வு எழுதி அரசாங்க வேலைக்கு செல்ல விரும்புகிறேன். சரியான முடிவுதானா? நந்தினி, திருப்பூர்உங்களைப் போல எண்ணற்ற இளைஞர்களின் குழப்பம் இது தான். உங்களது கடிதத்தில் இருந்து நாங்கள் தெரிந்து கொண்ட வரையில் நீங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஐ.டி. துறையில் வேலை பார்த்து வருகிறீர்கள். போட்டித் தேர்வு எழுத இன்னும் வயது உள்ளது. நல்ல சம்பளம் பெற்றாலும் துறையில் நிலைஇல்லாத சூழல் நிலவுவதாக கருதுகிறீர்கள். எனவே உங்களது கவலை தற்போதைய சூழல்களில் இயல்பானதுதான். ஒருபுறம் துறை குறித்து இரண்டு விதமான தகவல்கள் உலவுகின்றன. எதிர்மறையான தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்படுகின்றன என்பது துறை குறித்த ஆரோக்கியமான செய்தி. எனவே தற்போதைய நிறுவனம் உங்களுக்கு பொருத்தமானது தான் என்றால் அதிகமாக கவலைப்பட வேண்டாம். எனினும் எதிர்காலத்தில் நிரந்தரமான பாதுகாப்பை தரக்கூடியதாக நமது வேலை இருக்க வேண்டும் என்று விரும்பினால் போட்டித் தேர்வு எழுதிட இதுவே சரியான நேரம். மிக நன்றாக அறியப்படும் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து உங்களை தயார்படுத்திட துவங்கலாம். ஒரு ஆண்டு காலத்திற்குள் போட்டித் தேர்வுகள் உங்களுக்கு வெற்றியை கொண்டு வந்து விடும். இன்ஜினியரிங் முடித்து விட்டு நிர்வாகப் பணிக்கு செல்ல வேண்டுமா என்று நீங்கள் நினைத்தால் உங்களது துறை தொடர்பான கூடுதல் திறன்களை சிறப்பான பயிற்சி நிறுவனத்தில் பெற முயற்சிக்கவும். என்ன கூடுதல் திறன்களை பெற்றாலும் உங்களது துறையைப் பொறுத்தவரை ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிவது அரிது. உங்களது அடிப்படை சுபாவம் என்பது இதற்கு பொருந்துவதாக இருந்தால் நீங்கள் ஐ.டி துறையில் தொடரலாம். அல்லது ஒரே நிரந்தர நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என விரும்பினால் போட்டித் தேர்வுகள் மூலம் அரசு நிறுவனம் அல்லது துறையில் நுழைந்து உங்களது புதிய எதிர்காலப் பாதையை தேர்வு செய்யலாம்.