நம்மூரிலும் சாத்தியமாகும் கோக்கனட் ரக மாம்பழம்
'கோக்கனட்' ரக மாம்பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த, கரடிபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி.பிரபு கூறியதாவது:கல் கலந்த சவுடு மண் நிலத்தில், பல்வேறு ரக மா மரங்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், 'கோக்கனட் ' ரக மா மரத்தையும் நட்டுள்ளேன்.இது, ஆந்திரா மாநிலம், நுார்ஜாவடி என்னும் பகுதியில், அதிகமாக சாகுபடி செய்யப்படும் ரகமாகும்.மாங்காய் சீசனில், கொத்து கொத்தாக காய்கள் காய்க்கும். இந்த காய் சாப்பிட்டால், இனிப்பாக இருக்கும். ஒவ்வொரு காயும், 600 கிராம் வரையில் எடை இருக்கும். இதன் பழங்களும் கூடுதல் சுவையுடன் இருக்கிறது.குறிப்பாக, ருமானி, மல்கோவா ரக மாங்காய் புளிப்பாகவும், பழங்கள் இனிப்பாக இருக்கும். ஆனால், 'கோக்கனட்' ரக மாம்பழம் சற்று மாறுதலானது. காயாக இருக்கும்போதும், பழமாக இருக்கும்போதும், இனிப்பு சுவையுடன் இருக்கும். தெலுங்கு மொழியில், 'நுார்ஜாவடி தீ மாவடி' என, அழைக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: ஜி.பிரபு,94442 13413.