உள்ளூர் செய்திகள்

வழக்கறிஞர் விவசாயியாக மாறிய கதை

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த கே.ஆர். லஷ்மண் விவசாயத்தின் மீதுள்ள காதலால் விவசாயியாக மாறியுள்ளார்.இரண்டு தலைமுறைகளாக விவசாயத்தை மறந்த நிலையில் தனது காலத்தில் விவசாயத்தை தொடங்க வேண்டும் என்று ஆர்வம் டிராகன் பழக்கன்று சாகுபடியின் மூலம் சாத்தியமான கதையை விவரிக்கிறார்.கே.ஆர். லஷ்மண் கூறியதாவது:அப்பா ராமமூர்த்தி வழக்கறிஞர். தாத்தா கிருஷ்ணசாமி மெக்கானிக் என்பதால் இரண்டு தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் யாருமே விவசாயம் செய்யவில்லை. நிலம் வாங்குவதைப் பற்றி யோசிக்கவும் இல்லை. எனவே நிலம் வாங்கி விவசாயம் செய்ய நினைத்தேன். மதுரை ஒத்தகடை நரசிங்கம் பிட் 4 புதுக்குளம் கன்னிக்குளத்தில் ஒரு ஏக்கர் 64 சென்ட் நிலம் வாங்கினேன்.கன்னி முயற்சியாக 1400 பப்பாளி கன்று, 400 டிராகன் பழக்கன்றுகள் தோட்டக்கலைத்துறை அறிவுரைப்படி நடவு செய்தேன். டிராகனுக்கு கல் ஊன்றி, மானியத்தில் சொட்டுநீர் பாசனம் செய்தேன். எங்கள் நிலம் செம்மண் கலந்த களிமண் பூமி. பப்பாளிக்கு இன்சூரன்ஸ் செய்ய சென்ற போது அடங்கலில் பதிவு செய்யச் சொன்னார்கள். ஆனால் அந்த பகுதியில் வாழையும் நெல்லும் தான் பிரதான பயிர் என்பதால் பப்பாளிக்கு இன்சூரன்ஸ் செய்ய மறுத்துவிட்டனர். கடந்த மே மாதம் தொடர்ந்து பெய்த மழையால் பப்பாளி கன்றுகள் நட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி வேரழுகல் நோயால் பாதிக்கும் மேல் கன்றுகள் இறந்து விட்டது. புதிய விவசாயியாக இந்த இழப்பை தாங்க முடியாமல் திணறி விட்டேன்.டிராகன் பழக்கன்றுகளை பொறுத்தவரை கல்லுக்கு கல் ஏழடி இடைவெளி, வரிசைக்கு வரிசை 9 அடி இடைவெளி விட்டுள்ளேன். கல்லில் நான்கு பக்கமும் கன்றுகள் நட்டு அது வளரும் போது நைலான் கயிறு மூலம் கட்டி இரும்புக்கம்பி வைத்து டயர் வைத்தேன். மண்புழு உரம், மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்களையிட்டு பராமரித்தேன். களைக்கொல்லி மருந்தை பயன்படுத்தாமல் ஆட்கள் மூலம் களைகளை அகற்றிவருகிறேன்.பிப்ரவரியில் நட்டதில் தற்போது டயர் மேல் கொடி படர ஆரம்பித்துள்ளது. ஆறு மாதத்தில் காய்ப்புக்கு வந்து விட்டது. தொடர்ந்து 20 ஆண்டுகள் பலன் தரும் என்கின்றனர். ஆண்டுக்கு 3 - 4 மாதங்கள் வீதம் வளர்ந்த செடியில் அதிகபட்சம் 7 - 10 பழங்கள் கிடைக்கும். பழத்தின் எடை 350 கிராம் இருக்கும்.400 கன்றுகளில் 200 பிங்க் நிறத்திலும் 100 வெள்ளை நிறத்திலும் 100 வயலட் நிறத்திலும் கன்றுகள் வாங்கி நட்டதில் பிங்க் மற்றும் வெள்ளை நிறக் கன்றுகளில் பழங்கள் உற்பத்தியாகி உள்ளது.எங்கள் மண்ணுக்கு பப்பாளி கைகொடுக்கவில்லை. மண் பரிசோதனை செய்யாமல் பப்பாளி கன்று நட்டது தவறு என்பதை உணர்ந்து மண் பரிசோதனை செய்தேன். இந்த சாகுபடி தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். பப்பாளிக்கு பதிலாக பிங்க் கொய்யா மற்றும் சவுக்கு சாகுபடிக்கு முயற்சிக்கிறேன். மதுரை கிழக்கில் ஒத்தகடை பகுதியில் முதன்முதலாக டிராகன் பழக்கன்று சாகுபடி செய்தது நாங்கள் தான் என்ற பெருமை கிடைத்தது.வழக்கறிஞராக இருந்து விவசாயியாக மாறிய பின் அரசு திட்டங்களில் 'அன்புடையீர் விவசாயி' எனும் அலைபேசியில் குறுஞ்செய்தி வரும் போது சந்தோஷமாக உள்ளது. நிலம் வாங்கும் போது விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வாங்கியபின் சுற்றியுள்ளோர் விவசாயம் செய்தபோது நாம் மட்டும் தரிசு நிலமாக விடலாமா என்ற குற்றஉணர்வு ஏற்பட்டது. டிராகனுக்கு நடுவில் ஊடுபயிராக கத்தரிக்காய் சாகுபடி செய்தபோது 50 கிலோவுக்கு மேல் அறுவடையானது. வரப்போரத்தில் அகத்தி மரக்கன்றுகளை வளர்க்கிறேன். அக்கம்பக்கத்தில் கால்நடை வளர்ப்போர் அகத்தி குலைகளை இலவசமாக வாங்கிச் செல்கின்றனர்.மண்ணைத்தொடும் போது மனதுக்கு மகிழ்வாக விவசாயி என்பதில் பெருமையாக இருக்கிறது என்றார்.-- எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !