உள்ளூர் செய்திகள்

பொறியியல் பட்டதாரியின் கனவுத்தோட்டம்

கோவை அன்னுார் சரவணம்பட்டியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரி சிவா. வருமானத்திற்காக சாப்ட்வேர் வேலை பார்த்தாலும் மனநிறைவுக்காக மாடித்தோட்டம் அமைத்ததோடு அரை ஏக்கரில் நிலம் வாங்கி தனது கனவுத்தோட்டத்தை அமைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.அமெரிக்காவில் ஐந்தாண்டுகள் வேலை பார்த்து அதன்பின் சென்னை சென்று பின் கோவைக்கு புலம்பெயர்ந்து தனது கனவை நனவாக்கிய விதத்தை விளக்கினார் சிவா. சாப்ட்வேர் இன்ஜினியராக அமெரிக்காவில் ஐந்தாண்டுகள் வேலை பார்த்தேன். அடுத்து சென்னை வந்து அங்கிருந்து கோவைக்கு இடம்பெயர்ந்தேன். 2010ல் மாடித்தோட்டம் ஆரம்பித்தேன். மாடியில் செடி வளர்ப்பது, மண் கலவை தயாரிப்பது, பூச்சி விரட்டி தயாரிப்பது என சுயமாக செய்து பார்த்து கற்றுக் கொண்டேன். அதை அப்படியே வீடியோவாக சமூகவலை தளங்களில் வெளியிட்ட போது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து வீட்டுக்கு சற்று தொலைவில் 2015ல் அரை ஏக்கர் நிலம் வாங்கினேன். வீட்டுக்குத் தேவையான காய்கறி, பழங்களை உற்பத்தி செய்வது தான் இலக்காக இருந்தது. தோட்டத்தை சுற்றி வேலியிட்டு போர்வெல் அமைத்து ஒவ்வொரு பணியையும் நானே செய்தேன். சீத்தா, கொய்யா, மா, பலா, தென்னை, பெரிய நெல்லி, வாழை என நாட்டு மரங்களுடன் அவகோடா, ஸ்டார் ப்ரூட், வாட்டர் ஆப்பிள் போன்ற பழ மரங்களும் வளர்க்கிறேன். அனைத்து மரங்களிலும் இப்போது அறுவடை கிடைக்கிறது. கொஞ்சம் இடத்தில் கல் கால் பந்தல் அமைத்து பாகல், பீர்க்கன், சுரைக்காய் போன்ற நாட்டுவகை கொடி ரகங்களை வளர்க்கிறேன். குடுவை சுரைக்காய் தான் பிரபலம். அதை வளர்த்து அறுவடை செய்து விதைகளை சேகரித்து மற்றவர்களுக்கு தருகிறேன். விவசாயத் திருவிழா, விதைத் திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் கலந்து கொண்டு நாட்டுரக விதைகளை வாங்கி வந்து இங்கு நடுகிறேன். என்னைப் போன்று புதிதாக சிறியளவில் பண்ணை நிலம் வாங்குபவர்களுக்கு வழிகாட்டுகிறேன் என்றார். இவரிடம் பேச: 80982 32857.-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !