ஆடுகளுக்கு மருந்து குளியல்
ஆடுகளில் புற ஒட்டுண்ணி நீக்குவது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய கால்நடை துறை உதவி பேராசிரியர் ஆர்.கோபி கூறியதாவது:பனிக்காலத்தில், வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் ஒட்டுண்ணிகள் தொந்தரவு அதிகமாக இருக்கும்.ஒட்டுண்ணிகள், உடலில் ரத்தத்தை உறிஞ்சி, ரத்தசோகை நோய் ஏற்படுத்தும். சில சமயம், காய்ச்சல் ஏற்பட்டு, ஆடுகள் இறக்க நேரிடலாம்.இவற்றை பாதுகாக்க, மருந்து குளியல் அவசியம். 3 அடி நீளம்; 2 அடி அகலம்; 2.5 அடி உயரமுடைய சிமென்ட் தொட்டியில் பியூடாக்ஸ், அமிட்ராஸ், சுமத்தயான் போன்ற மருந்துகளை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி தண்ணீரில் கலக்க வேண்டும். இதில், ஆடுகளை குளிக்க வைக்க வேண்டும். காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை செய்து முடிக்க வேண்டும். நோய் தாக்கிய ஆட்டுக்குட்டிகள், சினை ஆடுகளுக்கு, மருந்து குளியலை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 7530052315