உள்ளூர் செய்திகள்

தென்னையுடன் ஊடுபயிராக திசுவாழை

தென்னந்தோப்புகளில் நட்ட நான்கு ஆண்டுகள் வரை வருமானம் பெற வாழை உதவும். குறிப்பாக நீர் வசதி உடைய தோப்புகளில் நுண்ணீர் பாசனம் செய்திட ஏற்பாடு செய்துள்ள தருணம் களைக்கட்டுப்பாடு மற்றும் இடப் பயன்பாடு மற்றும் வருமான மேம்பாடு, குளிர்ச்சி மேம்பாடு முதலிய காரணங்களால் வாழையை குறிப்பாக திசு வாழையைத் தேர்வு செய்யலாம். ஒரு ஏக்கர் தோப்பில் 2000 வாழைக் கன்றுகள் நட்டால் 2000 வாழை குலைகள் தலா சுமார் ரூ.120க்கு விற்றால் கூட 2.40 லட்சம் வரவு ஆகும். இதற்கு சுமார் ரூ.95000 செலவு செய்தாலும் 3 ஆண்டுகள் தொடர் வருமானம் பெற வாய்ப்புள்ளதால் வளம்உள்ள மண் கொண்ட பகுதியில் உரிய பராமரிப்பு உத்திகள் கடைபிடித்து மண் வளம் பேணலாம். இதன் மூலம் தென்னங்குலைகளில் கூடுதலாக 5 காய்கள் பிடித்து உயர் லாபம் பெறும் வாய்ப்பு உள்ளது. ஊடு பயிராக பயிரிடும் வாழைக்கு இடும் உரத்தை தென்னையும் எடுத்து ஒரு குலைக்கு 5 காய் வீதம் 12 குலைகளில் 75 மரங்களில் ஒரு ஏக்கரில் 4500 தேங்காய் குறைந்தது ரூ.35000 முதல் 45000 வரை விற்பனை ஆகி உபரி வருமானம் பெற உதவும்.நீர் நிர்வாகம், உர நிர்வாகம் மற்றும் பக்கக் கன்றுகளை வளர்த்து வளர்த்து வெட்டி அப்புறப்படுத்தாமல் பேனா முனைபோல சிறியதாக உள்ள ஆரம்ப நிலையிலேயே கடப்பாரையின் பின் பகுதியினை (மண்டைப்பகுதியை) இளம் பக்க கன்று மேல் அழுத்தி விட்டாலே போதும். கிழங்குகள் நன்கு பெருக்க இது உதவும். பக்கக் கன்று ஒன்று மட்டும் ஈட்டி இலைக்கன்றாக விட்டு வைத்து அதனை அங்கேயே வளர்த்து பயன் பெறலாம். நல்ல கன்றுகள் தேர்வு செய்து 1.5 அடி ஆழம் 1.5 அடி அகலம் மற்றும் 1-5 அடி நீளம் உள்ள குழிகளில் நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் 10 கிலோ 50 கிராம் மாலத்தியான் தூள் ஆகியவற்றை இட்டு நட வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் இடவும். ஒரு வாழைக்கு நாள்தோறும் 20 லிட்டர் முதல் 25 லிட்டர் வரை தண்ணீர் சொட்டுநீர் பாசனம் மூலம் தேவை நீரில் கரையும் உரங்கள் பயன்படுத்தி கரையும் உரப்பாசனம் செய்யலாம். பயிரின் வளர்ச்சி பருவம் 3ம் மாதம் மற்றும் 5ம் மாதம் உரம் இடல் அவசியம். ஒரு கன்றுக்கு தொழுஉரம் 500 கிராம் ஜிப்சம், 1/2 கிலோ மட்டும் அடி உரமாக இடவும். நடவு செய்து ஒன்றரை மாதம் கழித்து டிஏபி 50 கிராம் இட்டு விட வேண்டும். நீரில் கரையும் உரங்களை ஒரு வாழைக்கு எவ்வளவு என்பதை கணக்கிட்டு டாங்க் மூலம் செலுத்த வேண்டும்.90ம் நாள் யூரியா 50 கிராம், டிஏபி 100 கிராம் இடவும். 125ம் நாள் யூரியா 100 கிராம், பொட்டாஷ் 250 கிராம் தேவை. 150ம் நாள் மற்றும் 180ம் நாள் இதனையே இடவும். பூ வந்த பின் 25 கிராம் யூரியா, பொட்டாஷ் 250 கிராம் தேவை. பயிரின் வளர்ச்சிக்கேற்ப ஒரு மரத்துக்கு 200 கிராம் தழைச்சத்து, 70 கிராம் மணிச்சத்து, 600 கிராம் சாம்பல் சத்து தேவைப்படும் தருணம் தரவேண்டும்.உரங்களை 1 1/2 அடி தள்ளி கிண்ணம் பறித்து இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்படும் இடத்தில் சவுக்கு அல்லது மூங்கில் கம்புகள் பயன்படுத்தி முட்டுக் கொடுக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரம்பெற 98420 07125ல் தொடர்பு கொள்ளவும்.- டாக்டர் பா.இளங்கோவன்உடுமலை, திருப்பூர் மாவட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !