உள்ளூர் செய்திகள்

வளமான வான்கோழி வளர்ப்பு

வான்கோழிகள் அனைத்து சுற்றுச்சூழலிலும் வளர்வதால் இறைச்சிக்காக வளர்க்கப்படும் போது அதிக லாபத்தை தருகின்றன.வீடுகளின் கொல்லைப்புறத்தில் இவற்றை எளிதாக வளர்க்கலாம். சரியான சந்தை வாய்ப்புகளை கண்டறிந்தால் விற்பனையும் எளிது. குறிப்பாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் மக்கள் வான்கோழி இறைச்சியை பிரியாணி செய்வதற்காக விரும்பி வாங்குகின்றனர்.கொட்டகை அமைத்தல்நாட்டுக்கோழி வளர்ப்பை போலவே வான்கோழி வளர்ப்பிலும் ஈடுபடலாம். அதிக சிரமமும் இருக்காது. நிலத்தில் இருந்து சற்றுமேடான பகுதியில் காற்றோட்டமான கொட்டகை அமைக்க வேண்டும்.முறையாக பராமரித்தால் பெட்டை வான்கோழிகள் 7 மாதத்தில் முட்டையிட துவங்கும். வான்கோழியின் சேவல்கள் 9 மாதத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும். பெட்டைகள் முதல்நாள் காலையிலும் தொடர்ந்து மாலையிலும் முட்டையிடும். அதாவது 30 முதல் 36 மணி நேரத்திற்கு ஒரு முட்டை என்ற விகிதத்தில் இடும். தொடர்ந்து 10 முதல் 12 முட்டைகளை இட்டபின் அடையில் உட்கார்ந்து விடும். அடைக்கு உட்கார்ந்து விட்டால் அடுத்த 2 முதல் 3 மாதங்கள் கழித்து தான் முட்டையிடும். எனவே கூடுதலாக முட்டை வேண்டுமென விரும்பினால் அவற்றை அடையில் உட்கார விடக்கூடாது. முட்டைகளை அவ்வப்போது சேகரித்து நாட்டுக்கோழிகளிலோ அல்லது செயற்கை இயந்திர பொரிப்பான்களிலோ வைத்து குஞ்சு பொரிக்க செய்ய வேண்டும்.சத்தான தீவனம் தேவைகோழிகளைப் போன்றே அனைத்து சத்துகளும் வான்கோழிகளுக்கு தேவைப்படும். எனவே புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுஉப்புகள் நிரம்பிய தீவனத்தை வழங்கினால் சீரான உடல் வளர்ச்சி பெறும். அதிக முட்டையிடுவதற்கும் வாய்ப்புள்ளது.வருமுன் காக்க வேண்டும்இவற்றுக்கு கருப்பதலை நோய், ராணிக்கட், அம்மை நோய், இரைப்பை வீங்கி தொங்குதல், எரிசிபிலிஸ், நீலக்கொண்டை நோய் தாக்கக்கூடும். எனவே வருமுன் காக்கும் நடவடிக்கையாக குஞ்சு பொரித்த 5 முதல் 7 வது நாளில் ராணிக்கட் நோய் தடுப்பு ஆர்.டி.எப்., மருந்தை கண் அல்லது மூக்கில் இரண்டு சொட்டு விட வேண்டும். 28வது நாளில் ராணிக்கட் நோய்க்கு லசோட்டா மருந்தை கண் அல்லது மூக்கில் இரண்டு சொட்டு விடவேண்டும். 6வது வாரம் இறக்கையில் ஊசி மூலம் கோழி அம்மை தடுப்பூசி செலுத்த வேண்டும். 8 வது வாரம் ராணிக்கட் நோய்க்கு ஆர்.டி.வி.கே. மருந்தை இறக்கையில் ஊசி மூலம் தோலுக்கு அடியில் செலுத்த வேண்டும்.ஆறரை மாதத்தில் 5 முதல் 8 கிலோ எடையளவில் ஆண், பெண் வான்கோழிகள் இறைச்சிக்கு தயாராகி விடும். உயிருடன் கிலோ ரூ.350 முதல் சந்தையில் விற்கலாம்.புதுக்கோட்டையில் உள்ள தனுவாஸ் மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் ஒருநாள் (ரூ.75) முதல் ஒருமாத வயதுடைய (ரூ.125) வான்கோழி குஞ்சுகள் விற்பனைக்குள்ளன. வாரந்தோறும் 100 குஞ்சுகள் பொரிக்கப்படுகின்றன. கொட்டகை அமைப்பதற்கு ஆலோசனை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !