உள்ளூர் செய்திகள்

வெண்டையில் மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்த கரைசல்

வெண்டை சாகுபடியில், மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:வெண்டை சாகுபடியில், 35 நாட்களில் இருந்து, 50 நாள் வரையில் வரும் இளஞ்செடிகளில், மஞ்சள் தேமல் நோய் தாக்கும். 30 டிகிரி செல்ஷியஸுக்கும் குறைந்த வெயில் வரும் போது, வெள்ளை ஈக்களால் மஞ்சள் தேமல் நோய் உருவாகிறது.வெள்ளை ஈக்கள் சாறு உறிஞ்சி, அதன் நச்சுத் தன்மை கொண்ட உமிழ்நீரை பிற செடிகள் மீது பரப்பும் போது, மஞ்சள் தேமல் நோய் எளிதாக பரவுகிறது.நோய் தாக்கிய வெண்டைச் செடியில், இலைகளின் நரம்பு ஓரங்களில் இருந்து, வெளிர் மஞ்சள் நிறத்தில் மாறும். மஞ்சள் தேமல் நோய் தாக்கிய செடிகள் மற்றும் வெள்ளை ஈக்களை தக்கும் களைச் செடிகளை அழிக்க வேண்டும்.ஒரு கிலோ விதைக்கு, 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். வெண்டை தோட்டத்தில், மக்காச்சோளம், சாமந்தி ஆகியவற்றை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு, ஒரு விளக்கு பொறி, 15 மஞ்சள் ஒட்டு அட்டை அமைக்கலாம்.இரண்டு மில்லி வேப்பம் எண்ணெய், இரண்டு கிராம் தயாமீத்தாக்சோம் கலவையை, 2 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.ஐந்து கிராம் அசாடிராக்டின், 1.6 மில்லி மெத்தில்டெமட்டான், 25 கிராம் தயாமீத்தோக்சாம் மருந்துகளை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.இதுபோல செய்யும்போது, வெண்டை சாகுபடியில் வரும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:- -முனைவர் செ.சுதாஷா,97910 15355.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !