திருநெல்வேலி அல்வாவிற்கு சமமான வெள்ளைக்கத்தரி
நெல்லையில் அமரர் எஸ்.ஜி.முத்துசாமி பிள்ளை என்று சொன்னால் விவசாயிகள், கத்தரி சாகுபடியில் அவர் ஒரு ஜாம்பவான் என்பார்கள். கத்தரி சாகுபடிக்கு கோடை பட்டத்தை தேர்ந்தெடுப்பார். கத்தரி செடி வயலை சுற்றி ஆமணக்கு செடி விதையை ஊன்றுவார். ஆமணக்கு செடி மிக செழிப்பாக வளர்ந்து கத்தரி செடியை தரிசு வெக்கையிலிருந்து காப்பாற்றும். ஆமணக்கு விவசாயிக்கு வருவாயை உண்டாக்கித் தருகின்றது. பிண்ணாக்கு செக்குகள் வைத்து எண்ணெய் எடுக்கும் இடங்களில்தான் முத்துசாமி சாகுபடிக்கு பிண்ணாக்கு வாங்குவார். சாகுபடிக்கு அஞ்சாமல் அதிக பணம் செலவு செய்வார். அதாவது ஏக்கருக்கு செலவு ரூ.17,000 (இங்கு குறிப்பிட்டுள்ள சாகுபடி செலவுகள் எல்லாம் முத்துசாமி உயிரோடு செயல்பட்டுக்கொண்டிருந்தபோதுதான். தற்போது சாகுபடிசெலவு பல மடங்கு அதிகமாக இருக்கும்.)கத்தரி சாகுபடியில் நட்ட இரண்டாவது மாதத்திலிருந்து வருமானம் கிடைக்கும். கத்தரியை விற்பனை காலத்தில் மூடைக்கு (65 கிலோ) ரூ.400ம் குறைந்தபட்ச விலை ரூ.130ம் கிடைக்கும். 356 மூடை (சுத்தப்படுத்தியது) காய் விற்பனையில் மொத்த வருமானம் ரூ.65,000 கிடைத்துள்ளது. விவசாயிகளை முத்துசாமி வெள்ளைக் கத்தரி சாகுபடியில் அதிக லாபம் எடுத்ததுபோல் எடுக்க மூன்று தாரக மந்திரங்களை அனுசரிக்க வேண்டும் என்பார்.1. கடுமையான உழைப்பு, 2. விஞ்ஞான தொழில்நுட்பங்களை அனுசரித்தல், 3. செயலாற்றல் திறனைக் காட்டுதல்.இதோடு இயற்கை வழி சாகுபடி முறைகளையும் அனுசரித்து லாபம் காட்டியுள்ளார். இவர் பயிருக்கு சாகுபடியில் ஹியூமிசில் என்னும் டானிக்கினை மூன்று முறை தெளித்தும் மகசூல் எடுத்துள்ளார்.-எஸ்.எஸ்.நாகராஜன்