உள்ளூர் செய்திகள்

மாற்றம் தரும் கொடி ஆடு வளர்ப்பு

குறைந்து வரும் மேய்ச்சல் நிலம், வனப்பகுதிகளில் ஆடுகள் மேய்வதற்கு அனுமதி மறுப்பு போன்ற சூழ்நிலையில் கொட்டகை அமைத்து ஆடு வளர்ப்பதே சரியான வழி.கனமழை, அதிக வெயில், குளிர்காற்று, பனி, கொடிய விலங்குகள் மற்றும் திருட்டில் இருந்து வெள்ளாடுகளை பாதுகாக்க கொட்டில் முறையே சிறந்தது. ஒரு ஆடு மூலம் ஓராண்டுக்கு கிடைக்கும் சாணம், சிறுநீர் இரண்டும் 5 ஏக்கருக்கு தேவையான இயற்கை உரமாக பயன்படும். ஆட்டினங்கள் என்னென்ன இந்தியாவில் 20 வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. தமிழகத்தில் கன்னிஆடு மற்றும் கொடி ஆடு இனங்கள் இருந்தாலும் கொடி ஆடுகளை பண்ணையாளர்கள் விரும்பி வளர்க்கின்றனர். கொட்டில் முறைக்கு ஏற்ற இவற்றின் தினசரி வளர்ச்சி வீதம் அதிகம் என்பதால் குறுகிய காலத்திலேயே அதிக உடல் எடை பெற்று விற்பனைக்கு தயாராகிவிடும்.துாத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூரில் இந்த ஆடுகள் உயரமாகவும், நீளமாகவும் இருக்கும். வெள்ளை நிறத்தில் கருப்பு அல்லது சிவப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். அடி வயிறு வெள்ளையாக முதுகு கருமையாக இருக்கும். பெட்டை 32 கிலோ, கிடா ஆடுகள் 38 கிலோ எடை வரை வளரும். பெட்டை, கிடாக்கள் தேர்வுஆட்டுப்பண்ணை அமைக்க சுறுசுறுப்பான அதிக எடையுடைய வளர்ச்சியடைந்த விதைப்பையுடைய கிடாக்களை வாங்க வேண்டும். ஒரு விதையுள்ள கிடாக்களை வாங்கக் கூடாது. 20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா தேவைப்படும். பெட்டை ஆடுகளில் இரண்டு பற்கள் கொண்டதாக மடி பெருத்தும் காம்புகள் நீண்டும் இருந்தால் நல்லது. சந்தையில் வாங்காமல் கிராமம் அல்லது பண்ணையில் இருந்து வாங்க வேண்டும். பசுந்தீவனம் அவசியம்வெள்ளாடுகள் கசப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு சுவையறியும் திறன் பெற்றவை. அகத்தி, சூபா புல், கிளைரிசிடியா, கொடுக்காப்புளி, முருங்கை, கல்யாண முருங்கை, அரசு, வாகை, வெண்வேல், கருவேல், குடைவேல், ஆல், அத்தி, பலா, புளி, இலந்தை, நாவல், நெல்லி மர இலைகளை தீவனமாக தரலாம். மக்காச்சோளம், சோளம், கம்பு தானியங்கள், குதிரைமசால், வேலிமசால், காராமணி, பயறு வகை, கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கினியாபுல், கொழுக்கட்டை புல், தீனாநாத், ஊசிப்புல் பசுந்தீவனங்களை கொடுக்கலாம். பசுந்தீவனங்கள் எளிதில் ஜீரணமாவதோடு வளர்ச்சியும் அதிகரிக்கும். அடர் தீவனத்தின் அளவை குறைக்கலாம். தோட்டத்திலேயே அசோலாவை உற்பத்தி செய்து கொடுத்தால் ஆடுகளுக்கு புரதச்சத்து கிடைக்கும். சினை ஆடுகள், கன்று ஈன்ற ஆடுகளுக்கு தினமும் 250 கிராம் அடர் தீவனம், பயறு வகை தீவனப்புற்களைத் தேவையான அளவு கொடுக்க வேண்டும். இதன் பாலில் சோடியம் குளோரைடு உப்பு அதிகமாகக் காணப்படுவதால் பால் கொடுக்கும் ஆடுகளுக்கு உப்பின் தேவை அதிகம். இதனை ஈடு செய்ய அடர்தீவனத்தில் உப்பை கலந்து கொடுக்க வேண்டும்.வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு விட்டால் அதன் சக்தி விரயமாகி உடல் எடை குறையும். எல்லா நாட்களிலும் பசுந்தீவனம் அளிக்கும் போது உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும். மேய்ச்சல் நிலம் இல்லாதவர்களும் கொட்டில் முறையில் ஆடு வளர்க்கலாம்.கால்நடைகளான பசு, எருமை, எருதுகளை ஒப்பிடும்போது குறைவான முதலீட்டில் ஆடுகளை வளர்க்கலாம் ஆடுகளின் தீவனத் தேவை மிகவும் குறைவானதே.- பூவராஜன், தலைவர் தனுவாஸ் - மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், புதுக்கோட்டை 81225 36826


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !