காளானை மதிப்பு கூட்டுவது எப்படி
தமிழகத்தில் நெல் சார்பு தொழில்களுக்கு வாய்ப்பு இருந்தாலும் வீட்டிற்கு அருகிலேயே தினசரி வரவு பார்க்க குறைந்த முதலீட்டில் நிறைவான பண வரவு பெற உதவும் ஒரே தொழில் காளான் வளர்ப்பு தான்.காளான் வளர்க்க நிறைய இடம் தேவை இல்லை. மனம் இருந்தால் போதும், மேலும் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். சைவ, அசைவ பிரியர்களின் ஒரே பொதுவான உணவு காளான் தான். நுாறு கிராம் காளானில் 80 - 89 சதவீத ஈரப்பதம், 5.9 - 6.2 சதவீத கார்போஹைட்ரேட், 2.8 - 8.7 சதவீத புரதம், 0.50 - 0.60 சதவீத கொழுப்பு, அமினோ அமிலம், தாது உப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளது. மாவு, சர்க்கரை சத்து அதிகம் இல்லாததால் உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள் இருப்பதால் குழந்தைகளுக்கான சிறந்த உணவு.மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம்காளானில் அதிகளவு ஈரப்பதம் இருப்பதால் எளிதில் கெட்டுவிடும். எனவே பதப்படுத்துதல் அவசியம். பதப்படுத்துவதற்கு தேவையானவற்றை தயார் செய்த பின் காளான்களை பறிக்க வேண்டும். அதிக நேரம் காற்றில் வைத்திருந்தால் அதன் சத்துப்பொருட்கள் குறைந்து விடும். பறித்த காளான்களை கழுவி வேர் பாகத்தை வெட்ட வேண்டும். மென்மையாக இருப்பதால் குறைந்த நேரத்தில் (10 நிமிடம்) வெந்து விடும். அதிக நேரம் வேகவிட்டால் புரதம், சத்துப்பொருட்களில் மாற்றம் ஏற்படும்.டின்னில் அடைத்த காளான்காளானுடன் 20 சதவீத உப்புக்கரைசல் சேர்த்து டின்களில் காற்று புகாவண்ணம் அடைத்து அதிக வெப்பநிலையில் (116 செ.கி வரை) குறிப்பிட்ட நேரம் வைத்திருந்தால் பல மாதங்கள் வரை கெடாமலும் சுவை குறையாமலும் பாதுகாக்கலாம். இந்த பதப்படுத்தலுக்கு மொட்டு காளான் ஏற்றது. உலர வைக்கப்பட்ட காளான்உலரவைப்பதற்கு சிப்பி காளான் ஏற்றது. நன்கு விளைந்த காளான்களை பறித்து சோலார் டிரையர் அல்லது சூரியஒளியில் உலரவைத்தால் 8 முதல் 10 மாதங்கள் வரை கெடாமல் பாதுகாக்கலாம். உலர வைக்கப்பட்ட காளானிலிருந்து காளான் மாவு தயாரிக்கலாம். இதை சலித்து பாலித்தீன் பைகளில் அடைத்து விற்கலாம். அல்லது காளான் மாவைக் கொண்டு காளான் சேமியா, நுாடுல்ஸ், சூப் மிக்ஸ், ஐஸ்கிரீம், குழந்தை உணவுகள், பருப்பு பொடி, அப்பளம், ரசப்பொடி, சாப்பாட்டுப்பொடி தயாரிக்கலாம். இந்த மாவை அதிகபட்சம் ஓராண்டு வரை பாதுகாக்கலாம். ஒரு கிலோ காளானிலிருந்து 80 முதல் 100 கிராம் வரை மாவு கிடைக்கும்.காளான் மாவுடன் ராகி மாவு, பொட்டுக்கடலை, மாவு, மிளகு, உப்பு, பால்பவுடர் சேர்த்து காற்று புகாத பாலித்தீன் பைகளில் அடைத்து விற்கலாம். இந்த உடனடி சூப்பிற்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.உப்பில் ஊறவைத்தல்காளானை அதனுடைய இயற்கையான குணம் மாறாமல் அமிலம் கலந்த உப்புக்கரைசலுடன் பாதுகாப்பான் சேர்த்து 3 முதல் 4 மாதங்கள் வரை பாதுகாக்கலாம். உப்பு கரைசலில் பதப்படுத்திய காளான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உப்பில் ஊறிய காளானை ஊறுகாய் என்கிறோம். வங்கிகளின் கடன் வசதி, தோட்டக்கலைத்துறை மூலம் மானிய உதவிகளும் பெறலாம். அறுவடைக்கு பின் மதிப்பு கூட்டுதல் என்ற நவீனத்துவத்துக்கு விவசாயிகள் மாறினால் பல மடங்கு லாபம் பெறலாம்.- இளங்கோவன் கூடுதல் இயக்குநர் ஓய்வு வேளாண்மை துறைகாஞ்சிபுரம். 98420 07125