செழித்து வளரும் தில்லைநாயகம் தாய்லாந்து கறுப்புக் கவுனி பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்போம்
உசிலம்பட்டி அருகே வலையபட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி குரும்பன் பயிரிட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்களான தில்லைநாயகம், தாய்லாந்து கறுப்புக் கவுனி செழிப்பாக வளர்ந்து உள்ளது.அரசு பஸ் டிரைவரான இவர், நம்மாழ்வாரின் இயற்கை வழி விவசாயிகள் சங்க தலைவராகவும் உள்ளார். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில், அவற்றை பரவலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்க்கரைப்பட்டி அலெக்சுடன் இணைந்து, நாட்டு ரகங்களான தில்லைநாயகம், தாய்லாந்து கறுப்பு கவுனி நெல் பயிரிட்டுள்ளார்.இது குறித்து குரும்பன் கூறியதாவது:சோதனை முறையில் தலா 20 சென்ட் இடத்தில் இரண்டு ரக நெல்லும் பயிரிட்டுள்ளோம். பாய் நாற்றாங்கால் முறையில் கால் கிலோ நெல்விதையைக் கொண்டு 2023 அக். 2ல் நாற்றாங்கால் அமைத்தோம். பதினோராவது நாளில் நாற்றுகளை எடுத்து வரிசை முறையில் நடவு செய்தோம்.இயந்திர உதவியுடன் மூன்று முறை களையெடுத்தோம். பயிர்களின் அடியில் நன்கு நெருக்கமாக துார் பிடித்து ஆறு அடிக்கும் மேல் உயரமாக வளர்ந்துள்ளது. ஜீவாமிர்தம் இரண்டு முறையும், பூச்சி விரட்டி ஒரு முறையும் தான் தெளித்துள்ளோம். பயிர் நன்றாக கதிர்பிடித்து வளர்ந்துள்ளது.தாய்லாந்து கறுப்புக் கவுனி ஒருசில நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். தில்லைநாயகம் இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு வரும். இந்தப்பகுதியில் மற்ற நெல் ரகங்கள் தொடர் மழைக்கு சாய்ந்த நிலையில் அதிக உயரமாக பயிர்கள் வளர்ந்தும் தாக்குப்பிடித்து நிற்கிறது.தில்லைநாயகம் அரிசி குழந்தைகள் உணவாகவும், தாய்லாந்து கறுப்புக் கவனி அரிசி கர்ப்ப பை கோளாறுகளை சரிசெய்யும் உணவாகவும் பயன்படுகிறது. அறுவடைக்குப்பின் மதிப்புக்கூட்டி விற்கவும், பாரம்பரிய நெல் ரகங்களை மற்ற விவசாயிகளிடத்திலும் பரவலாக்கவும் வேளாண்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளோம் என்றார். விபரங்களுக்கு இவரை 99948 36952 ல் தொடர்பு கொள்ளலாம்.