உள்ளூர் செய்திகள்

ஒற்றை கன்றில் இருந்து ஓராயிரம் வாழை நாற்றுகள் கை கொடுக்கும் கேளா விருத்தி முறை

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ள கேளா விருத்தி முறை தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த காலகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வாழைக்கன்றுகளில் இருந்து ஆயிரக்கணக்கான நாற்றுக்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டலாம்.திசு வாழை முறையில் புதிய வாழை ரகங்களாக அதிக எண்ணிக்கையில் குறைந்த கால அளவில் உற்பத்தி செய்ய இயலாது. இத்தகைய சூழலில் புதிய ரக வாழையினை குறைந்த கால அளவில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் எளிமையான முறை கேளா விருத்தி தொழில்நுட்பம். விவசாயிகளால் எளிதாக கடைபிடிக்கக் கூடிய தொழில்நுட்பம் இது. கன்றுகள் தேர்வு செய்தல்பூச்சி நோய் தாக்காத ஆரோக்கியமான வாழையிலிருந்து மூன்று மாத வயதான பக்கக்கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். இதன் வேர்க்கிழங்கு பகுதியுடன் பூமியிலிருந்து வெட்டி எடுத்து 60 - 70 டிகிரி வெப்பமுள்ள சுடுநீரில் 2 நிமிடம் மூழ்க வைக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு குளிர வைத்து கிழங்கின் நுனிப்பகுதி நடுவில் தோண்டி எடுத்து நுனி வளர்ச்சியை கட்டுப்படுத்தி கிழங்கின் மேற்பகுதியை நான்கு பக்கமும் கீறிவிட வேண்டும். பேஸில்லஸ் அல்லது ட்ரைக்கோடெர்மா கரைசலில் 20 நிமிடங்களுக்கு பூஞ்சாணநேர்த்தி செய்ய வேண்டும். நடவு பாத்தி தயார் 20க்கு 10 அடி நீளம் அகலம் கொண்ட பாலிதீன் குடில் அமைத்து 18 அடி நீளம் 4 அடி அகலம் ஓரடி ஆழமுடைய இரு பாத்திகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் நுாறு கிழங்கை நட்டு மண்ணால் மூடவேண்டும். நடவு செய்த ஏழாவது நாளில் இலைகள் உருவாகும். அவற்றை வெட்டிய பின் மேற்பகுதி தண்டை நான்காக கீறிவிட வேண்டும்.அடுத்த பத்தாவது நாள் முதல் இரண்டாம் நிலை வளர்ச்சியில் வாழை நாற்றுகள் உற்பத்தியாகும். இரண்டு முதல் மூன்று இலைகளைக் கொண்ட அல்லது 15 முதல் 45 சென்டிமீட்டர் நீளமுடைய நாற்றுகளை வேருடன்பிரித்து எடுக்கலாம். இவற்றை அதிக ஈரத்தன்மை கொண்ட மற்றும் பாதி அளவு நிழல் கொண்ட இடங்களில் 14 முதல் 21 நாட்கள் வரை வைத்து கடினப்படுத்தி வயலில் நடவு செய்யலாம்.இம்முறையில் ஒரு வாழைத்தண்டில் இருந்து மூன்று மாத காலத்தில் ஆறு முதல் 15 வாழை நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்ய முடியும்.ஆண்டின் எல்லா பருவங்களிலும் 1000 முதல் 2000 வாழை நாற்றுகளை ஒரு சுழற்சியில் உற்பத்தி செய்ய முடியும். ஆண்டுக்கு மூன்று சுழற்சிகளை செய்யலாம். ஒரு நாற்றை ரூ. 15 முதல் ரூ.20க்கு விற்கலாம்.- ஜெகதாம்பாள் திட்ட ஒருங்கிணைப்பாளர்,மாலதி, இணைப் பேராசிரியை,வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்.97877 13448.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !