உள்ளூர் செய்திகள்

இறவை, மானாவாரியில் மகசூல் அள்ளும் மிளகாய்

இறவைப் பயிராகவும், மானாவாரியிலும் சம்பா, குண்டு வகை மிளகாய்கள் பயிரிடப்படுகிறது. மிளகாயின் காரத்தன்மை கேப்சின் அளவைப் பொறுத்து அமையும். பொதுவாக மிளகாயில் கேப்சின் அளவு 0.2 முதல் 0.6 சதவீதம் உள்ளது. குண்டு மிளகாயில் அதிக கேப்சின் இருப்பதால் சம்பா வகையை விட அதிக காரத்துடன் உள்ளது.மிளகாய் 20 முதல் 30 டிகிரி வெப்பநிலை உள்ள பகுதிகளில் நல்ல வடிகால் வசதி கொண்ட 6.5 முதல் 7.5 வரை அமில காரத்தன்மையுள்ள நிலத்தில் வளரும். கரிசல் மண்ணில் மானாவாரி சாகுபடி செய்யலாம். கே 1, கே 2, கோ 1, கோ 3, பி.கே.எம் 1, கோ.சி.எச் 1 ஆகியவை வீரிய ஒட்டு சம்பா ரகங்கள். கோ 2, பி.எம்.கே. 1, பி.எல்.ஆர். 1, ஜி 5 ஆகியவை குண்டு வகை ரகங்கள்.கே 1 ரகம் கோவில்பட்டியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 1964ல் உருவாக்கப்பட்டது. இது உள்ளூர் சாத்தூர் சம்பாவிலிருந்து தேர்ந்தெடுக்கபட்ட ரகம். சிவப்பு நிறத்தில் உயரமாகவும் நன்கு பரவியும் இருப்பதால் செப்., அக்டோபரில் தமிழகம் முழுவதும் பயிர் செய்யலாம்.200 முதல் 210 நாட்களில் எக்டேருக்கு 1700 கிலோ உலர் மிளகாய் கிடைக்கும். கே 2 ரகம் இதே ஆராய்ச்சி நிலையத்தில் 1975 ல் கே 1, சாத்துார் சம்பாவின் இனக்கலப்பில் உருவானது. இதுவும் எக்டேருக்கு 1600 - 1900 கிலோ காய்கள் கிடைக்கும். இது ஜூன், ஜூலை மற்றும் செப்., அக்டோபர் பருவத்திற்கு ஏற்றது. விதைநேர்த்தி மற்றும் நாற்றாங்கால்ஒரு எக்டேருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும். அதற்கான நாற்றங்கால் 100 சதுர மீட்டரில் அமைக்க வேண்டும்.ஒரு கிலோ மிளகாய் விதைகளுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்து விதை நேர்த்தி செய்து மேட்டுப்பாத்திகளில், வரிசையாக 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.நாற்றங்காலில் 'கார்போபியூரான்' குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் இட வேண்டும். அழுகல் நோயை கட்டுப்படுத்த 15 நாட்களுக்கு ஒரு முறை காப்பர் ஆக்சி குளோரைடு கரைசலை ஊற்ற வேண்டும். நடவு வயல் தயாரிப்புநிலத்தை உழுது 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து 40 முதல் 45 நாட்கள் வயதான நாற்றுகளை 30 செ.மீ இடைவெளியில் நட வேண்டும். மண் வகையை பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சலாம். எக்டேருக்கு 25 டன் தொழுஉரம் இடவேண்டும். அடியுரமாக எக்டேருக்கு 30 : 60 : 30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவேண்டும். மேலுரமாக 30 கிலோ தழைசத்து எடுத்து நடவு செய்ய 30, 60, 90 வது நாட்களில் இட வேண்டும். பின்செய் நேர்த்தி எப்படிநிலத்தை மேலாகவும் பின்பு ஆழமாகவும் கொத்தி களைகளை கட்டுப்படுத்தி செடிக்கு மண் அணைக்க வேண்டும். பூக்களும், பிஞ்சுகளும் உதிர்வதை தடுக்க பூக்கும் தருணத்தில் 14.5 லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி 'பிளானோபிக்ஸ்' வளர்ச்சி ஊக்கியை கலந்து தெளிக்க வேண்டும். அறுவடையும் மகசூலும்செடியின் 105 நாட்களில் பச்சை மிளகாயும் 120 நாட்களில் பழங்களும் அறுவடைக்கு தயாராகும். 3 முதல் 4 மாதங்களில் 10 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். சூரிய வெப்பத்தில் தொடர்ந்து நன்கு காயவைத்து சேமிக்கலாம். பயிர் பாதுகாப்பு அவசியம்இலைப்பேன் தொந்தரவுக்கு 200 மில்லி 'இமிடாகுளோர்பிரிட்', அசுவினி பூச்சிக்கு 500 மில்லி 'டைமிதோயேட்' அல்லது 500 மில்லி 'அசிபேட்' மருந்து தெளிக்க வேண்டும். மஞ்சள் சிலந்தி தாக்குதலுக்கு 1000 மில்லி 'ஈதியான்' அல்லது 250 மில்லி 'பென்பைராஸிமேட்' அல்லது 500 மில்லி 'புரோபார்கைட்' கலந்து தெளிக்க வேண்டும். காய்த்துளைப்பான் தாக்குதலுக்கு விளக்கு பொறிவைக்கலாம். ஆமணக்கை ஊடு பயிர் செய்யலாம். என்.பி.வி தெளிக்கலாம், எக்டேருக்கு 200 மில்லி 'குளோர்பைரிபாஸ்' மருந்தை தெளிக்கலாம். நோய் நிர்வாகம்சாம்பல் நோய்க்கு எக்டேருக்கு 500 கிராம் 'கார்பன்டாசிம்' அல்லது 'கராதேன்' 500 கிராம் பயன்படுத்த வேண்டும். நுனிகருகல், பழ அழுகல் நோய்க்கு ஒரு கிலோ 'பைட்டோலான்' அல்லது ஒரு கிலோ 'மாங்கோசெப்' தேவை. குழித்தட்டு நாற்றாங்கால்குழித்தட்டுகளில் மக்கிய தென்னை நார்க்கழிவை நிரப்பி விதைகளை குழிக்கு ஒன்றாக ஊன்ற வேண்டும். தண்ணீர் தெளிக்க தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் ஈரமே விதைகள் முளைக்க போதுமானது. விதைத்த பின் பத்து குழித்தட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி பாலிதீன் தாள் கொண்டு மூட வேண்டும்.இவற்றை நான்கு நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஐந்தாம் நாள் காலையில் பாலிதீன் தாளை அகற்றினால் முளைக்க ஆரம்பித்திருக்கும்.பூவாளி கொண்டு தண்ணீர் தெளித்து, குழித்தட்டுகளை நிழல்வலையில் வைத்து பராமரிக்க வேண்டும். இந்த முறையில் நாற்றுகள் ஒரே சீராகவும் வீரியமாகவும் வளர்கின்றன. எளிதாக இடமாற்ற முடியும். விதைகள் வீணாவது குறைகிறது. அறுவடைக்குப் பின் நேர்த்திநன்கு பழுத்தும் சிறிது காய்ந்தும் இருக்கும் போது மிளகாய்ப் பழங்களை அறுவடை செய்யவேண்டும். இந்தப் பழங்கள் குவியலாக இரண்டு முதல் மூன்று நாட்கள் அறை அல்லது நிழலான இடத்தில் சேர்த்து வைக்க வேண்டும். இதனால் அறுவடை செய்த பழங்கள் முழுமையாக நல்ல நிறத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் நிறமே இல்லாமல் பழங்களின் சில பகுதிகள் இருப்பதையும் குறைக்கிறது. பாலித்தீன் விரிப்புகள் அல்லது சிமென்ட் தரைகளில் பரப்பி சூரிய ஒளியில் 5 முதல் 6 நாட்களுக்கு காயவைப்பதன் மூலம் அறுவடையின் போது பழங்களில் இருந்த ஈரத்தன்மை 65 முதல் 80 சதவீதம் குறைகிறது. பகல் நேரத்தில் காயும் போது அவற்றை சிறிது நேரத்திற்கு ஒருமுறை புரட்டி விட வேண்டும். சாதாரண கிடங்குகளில் 2 முதல் 3 மாதங்கள் வரையிலும் குளிர்ப்பதன வசதி உள்ள கிடங்குகளில் 8 முதல் 10 மாதங்கள் வரையிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் சேமிக்கலாம். - பாக்கியத்து சாலிகா தலைவர் சோலமலை, பேராசிரியர் குரு, இணைப்பேராசிரியர் சஞ்சீவ்குமார், மனோகர் மணிகண்டன் உதவி பேராசிரியர்கள், மிளகாய்க்கான வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !