மழைக்கால கரும்பு சாகுபடியில் வெள்ளை புழு கட்டுப்படுத்த வழி
கரும்பு சாகுபடியில், வெள்ளைப் புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம் தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:கரும்பு சாகுபடியில், வெள்ளைப் புழுக்கள் தாக்கம் அதிகமாக காணப்படும். துவக்கத்தில், வயல் வரப்பு ஓரத்தில் இருக்கும் கம்புகளை தாக்கும். அதன் பின், தோகை மஞ்சள் நிறத்தில் மாறும்.கரும்பு வேர்ப்பகுதியில், வெள்ளைப் புழுக்கள் பிடித்திருக்கும். வெள்ளைப் புழுக்கள் தாக்கிய கரும்பின் தண்டு முழுதும் சேதமாகி இருக்கும். கரும்பினை பிடித்தால், கைக்கு எளிதாக வந்து விடும்.குறிப்பாக, இந்நோய் மழைக்காலத்தில் அதிகமாகக் காணப்படும். இதனால், கரும்பின் எடை குறைந்து, மகசூல் இழப்பு ஏற்படும். இதை தவிர்க்க, கரும்பு தோட்டத்திற்கு பின், சூரியகாந்தி பயிரிடலாம். மேலும், வேர்க்கடலை, ஆமணக்கு, சூரியகாந்தி ஆகிய பயிர்களை வரப்பு பயிர்களாக பயிரிடலாம்.விளக்குப்பொறி, இனகவர்ச்சி பொறிகள் வைத்து, அந்து புழுக்களை கவர்ந்து அழிக்கலாம். மேலும், 2.5 மில்லி பியூவேரியா பாசியானா மற்றும் 10 மில்லி மெட்டாரைசியம் அனிசோப்லியா ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.நோய்த்தாக்கம் அதிகமாக இருக்கும்போது, மூன்று சதவீதம் கார்போ பியூரான், ஒரு ஏக்கருக்கு 13 கிலோ போடலாம். பிப்ரோன், இமிடாக்ளோப்ரிட் ஆகிய ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,திரூர். 97910 15355.