உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கானுயிர் ஆய்வாளர் ஜான்சிங் பெங்களூருவில் காலமானார்

கானுயிர் ஆய்வாளர் ஜான்சிங் பெங்களூருவில் காலமானார்

கோவை:இந்தியாவின் முன்னணி கானுயிர் ஆய்வாளர் ஏ.ஜே.டி. ஜான்சிங், பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 80.இவர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர். திருநெல்வேலி செயின்ட் சேவியர் கல்லுாரியில் பி.எஸ்சி., விலங்கியல், சென்னை கிறிஸ்தவக் கல்லுாரியில் எம்.எஸ்சி., முடித்தார்.சிவகாசி கல்லுாரியில் ஆசிரியராகப் பணியைத் துவக்கிய இவர், அதன்பின் அமெரிக்காவிலுள்ள கானுயிர் அமைப்பின் உதவியுடன், மதுரை காமராஜர் பல்கலையில், பி.எச்டி.,பட்டம் பெற்றார். பாம்பே இயற்கை வரலாற்று மையத்தில் (BNHS) இணைந்து, கள ஆய்வுகளை மேற்கொண்டார். செந்நாய்கள் குறித்து முதல் முதலாக ஆய்வுகள் செய்து, பல அரிய தகவல்களைப் பதிவு செய்தார்.ஆசிய யானைகள் குறித்த, இவரின் ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. புலிகள், ஆசிய சிங்கங்கள், மலை ஆடுகள், பறவைகள், மீன்கள் குறித்து ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள, மத்திய அரசின் இந்திய வன உயிரின கல்வி நிறுவனத்தில், கானுயிர் உயிரியலில் முதுகலைப்பட்டம் பெற்று, அங்கு பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.இவரிடம் படித்த ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். ஆசிய அளவில், வனங்களில் தான் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்து, இவர் எழுதியுள்ள புத்தகம் (Field Days: A Naturalist's Journey through South and Southeast Asia) இதை விளக்குகின்ற அரிய ஆவணமாகும்.யானை வழித்தடங்கள், வாழ்விடங்களை மேம்படுத்துவதற்கான அரிய ஆலோசனைகளை அரசிடம் கொடுத்து, அதன்படி பல பாதுகாப்புத் திட்டங்கள் மேற்கொள்ள வழி வகுத்துள்ளார். ஆழமான படிப்பறிவு, இடைவிடாத கள ஆய்வை அடையாளமாகக் கொண்டு பணியாற்றிய இவருக்கு, உலக அளவிலான பல்வேறு வன உயிரின அமைப்புகளும் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.அவற்றில், 'ஆசிய வன உயிரினக் காப்பகம்' இவருக்கு வழங்கிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது' மிகவும் முக்கியமானதாகும். உடல் நலம் குன்றியிருந்த இவர், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருடைய உடல், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தோராவூரில், இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.அவருடைய மறைவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்