| ADDED : செப் 17, 2026 03:13 AM
கலபுரகி: பெண் அளித்த புகாரில் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால், ஆத்திரம் அடைந்த போலீஸ் கான்ஸ்டபிள், எஸ்.ஐ., காருக்கு தீ வைத்து எரித்தார். கலபுரகியின் சிஞ்சோலி போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் ராஜசேகர் வர்னால், 43. சிஞ்சோலிக்கு வரும் முன், மஹாகான் போலீஸ் நிலையத்தில் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இதனால் அந்த போலீஸ் நிலைய எஸ்.ஐ., பசவராஜ் சிட்டகோட், சக ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். இந்நிலையில், சொத்து தகராறு காரணமாக ரேஷ்மா என்ற பெண்ணை சில நாட்களுக்கு முன் ராஜசேகர் தாக்கினார். ரேஷ்மா புகாரில் ராஜசேகர் மீது மஹாகான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோபம் அடைந்த ராஜசேகர், எஸ்.ஐ., பசவராஜிடம் தகராறு செய்தார். நேற்று காலை போலீஸ் நிலையம் முன், நின்ற பசவராஜ் காரின் மீது பெட்ரோலை ஊற்றி, ராஜசேகர் தீ வைத்தார். இதில், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தலைமறைவாக உள்ள ராஜசேகரை, புகாரின் படி போலீசார் தேடுகின்றனர்.