அரசு துறைகள் ரூ.8,000 கோடி கட்டண பாக்கி மின் வினியோக நிறுவனங்கள் திணறல்
பெங்களூரு: மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பை துண்டிப்பதாக பொதுமக்களை மிரட்டி, மின் விநியோகங்கள் மின் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் அரசு துறைகள் பாக்கி வைத்துள்ள 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரூபாயை வசூலிக்க முடியாமல் அவை திணறுகின்றன.கர்நாடக அரசு செயல்படுத்திய 'கிரஹ ஜோதி' திட்டம், மின் விநியோக நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், பொது மக்களின் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அந்தந்த மின் விநியோக நிறுவனங்களுக்கு, மின் கட்டண தொகையை அரசு செலுத்துகிறது. ஆனால் அரசு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால் மின் விநியோக நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. பாக்கி தொகையை வழங்காவிட்டால், மக்களிடம் இருந்தே மின் கட்டணத்தை வசூலிப்பதாக, மின் விநியோக நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.இதற்கிடையே அரசு துறைகளே, பெருமளவில் மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. பல்வேறு துறைகளிடம் இருந்து, மின் விநியோக நிறுவனங்களுக்கு, 8,000 கோடி ரூபாய் மின் கட்டணம் வர வேண்டியுள்ளது. இதை வசூலிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.பல முறை கடிதம் எழுதி, மின் கட்டணத்தை செலுத்தும்படி மன்றாடியும், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மின் கட்டணம் செலுத்தாமல் இழுத்தடிக்கின்றன. இதனால் மின் விநியோக நிறுவனங்களின் பொருளாதார சுமை மேலும் அதிகரிக்கிறது.அரசு தலையிட்டு, மின் கட்டணத்தை பெற்றுத் தரும்படி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.