உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிரேட்டர் பெங்களூரு மசோதா: ஆய்வு அறிக்கை தாக்கல்

கிரேட்டர் பெங்களூரு மசோதா: ஆய்வு அறிக்கை தாக்கல்

பெங்களூரு:கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதா தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.பெங்களூரு மாநகராட்சியின் மேயர், துணை மேயர், கவுன்சிலர்களாக இருந்தவர்களின் பதவிக் காலம், 2020ல் முடிந்தது. அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ., வார்டுகள் எண்ணிக்கையை 198ல் இருந்து 243 ஆக உயர்த்தியது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், வார்டுகள் எண்ணிக்கை 243ல் இருந்து 225 ஆக குறைக்கப்பட்டது. வார்டுகள் பிரச்னையால் 2020ம் ஆண்டில் இருந்து தற்போது வரை, மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

400 வார்டு

இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக, பெங்களூரு மாநகராட்சி 7 ஆக பிரிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக வார்டுகள் எண்ணிக்கையை 400 ஆகவும் உயர்த்தவும் அரசிடம் திட்டம் உள்ளது.இதுதொடர்பான கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதாவை, கடந்த ஆண்டு சட்டசபையில் துணை முதல்வர் சிவகுமார் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதனால் இந்த மசோதா சட்டசபை, மேல்சபை கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையில் சட்டசபை பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், மசோதாவை நன்கு ஆராய்ந்து, சில திருத்தங்களை மேற்கொண்டனர்.பெங்களூரு நகரின் 28 எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.பி.,க்கள், முன்னாள் மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்களின் கருத்துகளையும் குழுவினர் கேட்டுள்ளனர்.இதையடுத்து கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்ட மசோதா தொடர்பான சட்டசபை ஆய்வு அறிக்கையை நேற்று, சட்டசபையில் ரிஸ்வான் அர்ஷத் தாக்கல் செய்தார்.இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள்:பெங்களூரு மாநகராட்சியை 3 முதல் 7ஆக பிரித்து கிரேட்டர் பெங்களூரு உருவாக்கலாம். அதற்கு மேல் மாநகராட்சி உருவாக்கப்பட கூடாது. ஒவ்வொரு மாநகராட்சியும் குறைந்தது 10 லட்சம் மக்கள்தொகையை கொண்டிருக்க வேண்டும்.மக்கள்தொகை அடர்த்தி ஒரு கி.மீ.,க்கு 5,15,000க்கும் குறைவாக இருக்கக் கூடாது. உள்ளூர் நிர்வாகத்தில் இருந்து அதிகபட்ச ஆண்டு வருமானம் 300 கோடி ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.

சொத்து பறிமுதல்

பெங்களூரு ரூரல் பகுதிகளை உள்ளடக்கியதாகவும், கிரேட்டர் பெங்களூரு இருக்கலாம். மாநகராட்சி மேயர் 5 ஆண்டுகால பதவி கொண்டவராக இருப்பார். மக்கள்தொகை அடிப்படையில் வார்டை அரசு முடிவு செய்ய வேண்டும்.சட்டசபை தொகுதியின் எல்லைக்குள் வார்டுகள் வரையறுக்கப்பட வேண்டும். ஒரு வார்டு இரண்டு சட்டசபை தொகுதிக்குள் வரும்படி பிரிக்கக் கூடாது.ஆணையம் மாதத்திற்கு ஒரு முறையாவது கூட வேண்டும். மண்டல குழுக்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநகராட்சியிலும் வார்டுகள் எண்ணிக்கை குறைந்தது 100 ஆகவும், அதிகபட்சம் 200 ஆகவும் இருக்கலாம்.ஒரு வேட்பாளர் ஒரு வார்டில் மட்டுமே போட்டியிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர்களை மாற்றவும் முடியாது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கான செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும்.பொதுமக்கள் சொத்து வரி செலுத்தவில்லை என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சொத்துகளை பறிமுதல் செய்யவும், அடுத்த ஒரு ஆண்டிற்குள் விற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற பல்வேறு அதிரடி பரிந்துரைகள், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல்வரே தலைவர்

'கிரேட்டர் பெங்களூரு' தலைவராக முதல்வர் இருப்பார். துணை தலைவராக பெங்களூரு நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் இருப்பார். பெங்களூரில் உள்ள தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சராக இருப்பவர், கிரேட்டர் பெங்களூரு உறுப்பினராக இருப்பார்.கிரேட்டர் பெங்களூரின் தலைமை கமிஷனர், செயலராகவும் இருப்பார்.மெட்ரோ, பெஸ்காம், குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், பி.டி.ஏ., கமிஷனர்கள், வருவாய் மாவட்ட துணை கமிஷனர்கள், போலீஸ் அதிகாரிகள், நகர்ப்புற திட்டமிடல் தலைமை அதிகாரி, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் இயக்குநர், திடக்கழிவு மேலாண்மை கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளும், கிரேட்டர் பெங்களூரு உறுப்பினர்களாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ