மொய்லியா... கட்சி மேலிடமா...? முதல்வர் சித்தராமையா காட்டம்!
பெங்களூரு: ''சிவகுமார் முதல்வராவார் என, வீரப்ப மொய்லி கூறுவது முக்கியம் அல்ல. கட்சி மேலிடம் கூறுவதே முக்கியம்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரின் விதான்சவுதாவில், நேற்று அவர் அளித்த பேட்டி:யார், யாரோ முதல்வர் ஆவார் என, வீரப்ப மொய்லி கூறுவது முக்கியம் அல்ல. கட்சி மேலிடம் என்ன கூறுகிறதோ, அதுவே முக்கியம். அனைத்தையும் மேலிடமே முடிவு செய்யும். அதை நாங்கள் ஏற்போம். மற்றவர்கள் கூறுவதை பற்றி, நான் பதில் அளிக்க முடியாது. மேலிடத்தின் உத்தரவுபடி, நடந்து கொள்வேன்.நாங்கள் நிதி நிலைமையை கவனித்து, ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கி தொகை வழங்குவோம். இவர்களுக்கு பில் தொகை பாக்கி இருப்பதற்கு யார் காரணம்? பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல், டெண்டர் அழைத்து பணிகளை துவக்கினர். அதற்கு நாங்கள் பொறுப்பா?மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் என, யாரை வேண்டுமானாலும் சந்தித்து ஒப்பந்ததாரர்கள் புகார் அளிக்கட்டும். அதிகாரிகள் கமிஷன் கேட்டால், ஒப்பந்ததாரர்கள் கொடுக்க வேண்டாம். ஏன் கமிஷன் கொடுக்க வேண்டும்?லஞ்சம் வாங்குவது குற்றம். அதே போன்று லஞ்சம் கொடுப்பதும், குற்றம்தானே? பில் தொகை வழங்க இதுவரை யாரிடமும் பணம் கேட்டது இல்லை.ஒப்பந்ததாரர்களுக்கு ஏப்ரலில், பாக்கி தொகை வழங்குவதாக கூறியுள்ளேன். 30,000 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அவ்வளவு வழங்க முடியாது. எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வழங்குவோம்.இவ்வாறு கூறினார்.