ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்; ரூ.4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும்: அண்ணாமலை
பெங்களூரு:''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்க முடியும்,'' என, மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
முதல் லோக்சபா தேர்தல் 1951 - 1952ல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டன. 1952, 1957, 1962, 1967ல் சட்டசபைக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.கடந்த 1971ல் லோக்சபா ஒரு ஆண்டு முன்னதாகவே கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சி செய்த கேரளாவில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பை மீறி மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது.அவசர நிலையின்போது, காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.கடந்த காலத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சியும் இதை தான் செய்தது. லோக்சபா தேர்தல், இப்போது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக உள்ளது.தேர்தல் நடத்தை விதிகளால் 45 நாட்கள், மேம்பாடு செயல்முறையை தடுக்கிறது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு ஆறு மாதம் நடக்கிறது. ஒரு மாநிலம் தேர்தலுக்காக நிர்வாக செயல்பாடுகளில் குறைந்தது, ஏழு மாதங்களை இழக்கின்றன.* 3 கட்சி எதிர்ப்பு
பல தரப்பினருக்கு ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கவும், அதிக ஓட்டு சதவீதம், கூடுதல் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நிலையான ஜனநாயக அமைப்பு நம்பிக்கைக்காகவும், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்பட்டது.நிதி ஆயோக் மற்றும் சட்ட ஆணையமும் இந்த திட்டத்தை ஆதரிக்கின்றன. 2019ல் ஒரே நாடு, ஒரே தேர்தலை 16 அரசியல் கட்சிகள் ஆதரித்தன. ஆனால், மூன்று கட்சிகள் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தன.ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதனால் பணத்தை சேமித்து, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்க முடியும்.ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பொது நலனுக்கான நடவடிக்கையே தவிர, திணிப்பு இல்லை. எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தால் 2034ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வருக்கு கருப்புக் கொடி!
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி மதுபான ஊழலுக்கு வழிவகுத்தார். 1000 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை நீக்க, அமலாக்கத்துறை முயற்சிக்க வேண்டும். 'காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவோம்' என, சொல்லும், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் எப்படி தமிழகத்துக்கு வரக்கூடாது. மீறி, தொகுதி மறுவரையறை தொடர்பான, அனைத்து மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க, அவர் தமிழகம் வந்தால், தமிழக பா.ஜ., சார்பில், கருப்பு கொடி காட்டப்படும். அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,