உயிருடன் விளையாடுவதா? தினேஷ் குண்டுராவ் காட்டம்!
பெங்களூரு: கலப்படமான மருந்துகளை தடை செய்யும்படி வலியுறுத்தி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவுக்கு கடிதம் எழுதினோம். இதுவரை பதில் வரவில்லை' என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.இது குறித்து, முகநுாலில் நேற்று அவர் கூறியுள்ளதாவது:வேறு மாநிலங்களில் தயாராகும் தரமற்ற கலப்பட மருந்துகள், கர்நாடகாவிற்கு வினியோகிக்கப்பட்டன. இந்த மருந்துகள் பயன்படுத்த தகுதியற்றவை என, ஆய்வக பரிசோதனையில் உறுதியானது. இத்தகைய மருந்துகளை தடை செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவுக்கு, கடிதம் எழுதினோம்.மருந்துகளின் தரம் குறித்து, மத்திய, மாநில அரசுகள் இடையே தகவல்களை பகிர்ந்து கொள்ள வசதி செய்ய வேண்டும் என, வேண்டுகோள் விடுத்திருந்தோம். கடிதம் எழுதி இத்தனை நாட்களாகியும், எங்கள் கடிதத்துக்கு எந்த பதிலும் வரவில்லை.மக்களின் ஆரோக்கிய விஷயத்தில், மத்திய அரசு அலட்சியம் காட்டுவதை, நாங்கள் கண்டிக்கிறோம். பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில், அக்கறை காட்ட வேண்டும். மத்திய அமைச்சர் நட்டா, எங்கள் கடிதத்துக்கு பதில் அளிக்காமல், மக்களின் உயிருடன் விளையாடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.