பழிவாங்கும் விதமாக கருத்து பதிவிட்ட 11 பேர் கைது
மைசூரு: ரவுடி கொலைக்கு பழிவாங்கும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.மைசூரு டவுன் கியாத்தமானஹள்ளியை சேர்ந்தவர் கார்த்திக், 33. ரவுடி. இவரை, அவரது டிரைவர் பிரவீன், தன் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தார். இதில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், கார்த்திக்கின் கூட்டாளிகள் சிலர், 'கொலைக்கு பழி தீர்க்கக் காத்திருக்கிறோம்' என, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதற்கு பதிலடியாக, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அவினாஷின் நண்பர்கள் சிலர், 'பகையை தீர்க்கக் காத்திருக்கிறோம்' என பதிவிட்டனர்.இதனால், 'மீண்டும் கொலை நடக்கலாம்' என, போலீசாருக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் வன்முறையை துாண்டும் விதமாக கருத்து பதிவிடுபவர்களை கடந்த சில நாட்களாக போலீசார் கண்காணித்து வந்தனர்.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர். இதுகுறித்து மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறியதாவது:கடந்த திங்கட்கிழமை ஐந்து பேரும், நேற்று முன்தினம் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். அவர்களில், சிலர் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம். இவர்களிடமிருந்து இரண்டு ஆட்டோக்கள், இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இது போன்று சமூக வலைதளங்களில் யாராவது பதிவிடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.