தர்ஷன் மனைவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய 2 பேர் கைது
பெங்களூரு: நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய, ஆட்டோ டிரைவர், ஐ.டி., ஊழியரை போலீசார் கைது செய்து உள்ளனர். கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் தர்ஷன், சுதீப் ரசிகர்கள் இடையில், பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. கடந்த மாதம் தார்வாடில் நடந்த நிகழ்ச்சியில் சுதீப் பேசுகையில், தர்ஷன் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். சுதீப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தர்ஷன் மனைவி விஜயலட்சுமி பேசினார். இதனால் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் சுதீப் ரசிகர்கள் ஆபாசமாக, 'கமென்ட்' தெரிவித்தனர். சிலர், விஜயலட்சுமியின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு ஆபாசமாகவும் குறுந்தகவல் அனுப்பினர். இதுகுறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசில், விஜயலட்சுமி புகார் செய்தார். தன் புகார் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், விஜயலட்சுமிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய, சிக்கபானவாராவின் ஆட்டோ டிரைவர் சந்திரசேகர், 45, தாவணகெரேயை சேர்ந்த ஐ.டி., ஊழியர் நிதின், 32 ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.