கூலி பார்க்க சென்ற 2 வாலிபர்கள் பலி
ஹாசன் : கூலி திரைப்படம் பார்க்க, அதி வேகமாக காரில் செல்லும் போது, விபத்து ஏற்பட்டதில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகாவின், கொனநுார் கிராமத்தில் வசித்தவர் தர்ஷன், 25. இவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்தார். இவரது நண்பர் ரங்கநாத பிரசாத், 22. இவர்கள் ரஜினி நடித்த, கூலி திரைப்படத்தை பார்க்க விரும்பினர். இதற்காக மைசூரில் திரையரங்கு ஒன்றில், ஆன்லைன் வழியாக டிக்கெட் முன் பதிவு செய்திருந்தனர். நேற்று காலை 8:00 மணி காட்சிக்கு, திரையரங்குக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே கிராமத்தில் இருந்து, தர்ஷன், தன் சகோதரர் மற்றும் நண்பருடன், நேற்று அதிகாலையில் காரில் புறப்பட்டார். நேரமாகிவிடும் என்பதால், 110 கி.மீ., வேகத்தில் சென்றனர். ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகாவின், பசவாபட்டணா அருகில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை டிவைடரில் மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. தர்ஷன், ரங்கநாத பிரசாத் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தர்ஷனின் சகோதரர் அதிர் ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து அங்கு வந்த கோனநுார் போலீசார், காரில் இருந்த உடல்களை மீட்டனர். அதிவேகமே விபத்துக்கு காரணம் என, முதற்கட்ட விசார ணையில் தெரிந்தது.