போலீஸ் ஏட்டை தாக்கிய 23 பேருக்கு ஓராண்டு சிறை
துமகூரு : கொரோனா ஊடரங்கின்போது, போலீஸ் ஏட்டை தாக்கிய 23 பேருக்கு, தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. துமகூரில் உள்ள சிக்க கன்னுலா சதுக்கத்தில் அதீர் அஹமது, கொரோனா காலத்தில் கடை நடத்திக் கொண்டிருந்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், அந்த கால கட்டத்தில் மதியம் 2:00 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைத்திருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது. இதை மீறி, 2021 ஜூலை 3ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் அதீர் அஹமது கடை நடத்திக் கொண்டிருந்தார். இதை பார்த்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சி.எஸ்., புரா போலீஸ் நிலையத்தின் ஏட்டு, கடையை மூடும்படி அறிவுறுத்தினார். ஆனால், அஹமது கடையை மூடாமல் அவருடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றியதில், அஹமது தன் அக்கம் பக்கத்தினருடன் இணைந்து ஏட்டை தாக்கினார். இதில், ஏட்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சி.எஸ்., புரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடாப் விசாரித்தார். துமகூரில் உள்ள ஜே.எம்.எப்.சி., எனும் முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வழக்கில் தொடர்புடைய அதீர் அஹமது உட்பட 23 பேருக்கும், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது. இந்த அபராத தொகை, காயமடைந்த ஏட்டுக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டது.