ரூ.56 கோடி போதை பறிமுதல் 3 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி சஸ்பெண்ட்
பெங்களூரு: பெங்களூரில் 55.88 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மூன்று இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிரா போதை பொருள் தடுப்பு குழு, கடந்த 26, 27ல்களில், பெங்களூரின் பாகலுார் ஸ்பந்தனா லே - அவுட், கொத்தனுாரின் என்.ஜி.கொல்லஹள்ளி, ஆவலஹள்ளியின் யரப்பனஹள்ளியில் இயங்கி வந்த, மூன்று போதை பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை கண்டுபிடித்தனர். 55.88 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ 100 கிராம் எடையுள்ள மெத்ஆம் பெட்டமைன், 17 கிலோ ரசாயனத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் ஆவலஹள்ளி ராமகிருஷ்ணா ரெட்டி, கொத்தனுார் சேத்தன், பாகலுார் சபரீஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உத்தரவிட்டார். பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.