உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தலா 10 ஏக்கர் எழுதி வைத்த தாயை வீட்டை விட்டு விரட்டிய 3 மகன்கள்

தலா 10 ஏக்கர் எழுதி வைத்த தாயை வீட்டை விட்டு விரட்டிய 3 மகன்கள்

பீதர்: சொத்துக்களை எழுதி வாங்கிய மகன்கள், தாயை வீதியில் தள்ளினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கோரிக்கை எழுந்துள்ளது. பீதர் நகரின், சிந்தோல் கிராமத்தில் வசிப்பவர் சுசீலம்மா, 86. இவருக்கு விஸ்வநாத், காசிநாத், பக்கப்பா ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். தன் கணவர் காலமான பின், மகன்களின் பராமரிப்பில் சுசீலம்மா வசித்தார். பரம்பரை சொத்தான 30 ஏக்கர் நிலம், இவரது பெயரில் இருந்தது. மகன்கள் தன்னை பார்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கையில், நிலத்தை தன் மூன்று மகன்களின் பெயரில், தலா 10 ஏக்கர் எழுதி வைத்தார். சொத்து கிடைத்த பின், மகன்களின் குணம் மாறியது. அதுவரை தாயை அன்போடு பார்த்துக் கொண்ட மகன்கள், அதன்பின் அலட்சியப்படுத்தினர். சில நாட்கள் மூத்த மகன் விஸ்வநாத், சில நாட்கள் இரண்டாவது மகன் காசிநாத் வீட்டிலும் மாறி, மாறி வசித்தார். நிலம் கைமாறிய பின், இரண்டு மகன்களும், தாயை வீட்டில் இருந்து வெளியே விரட்டினர். இதனால் சுசீலம்மா, அடைக்கலம் தேடி மூன்றாவது மகன் பக்கப்பா வீட்டுக்கு வந்தார். ஆனால் இவரது மனைவி, மாமியாரை வீட்டுக்குள் சேர்க்க தயாராக இல்லை. 'எந்த காரணத்தை கொண்டும், உங்கள் தாயை வீட்டுக்குள் அழைத்து வரக்கூடாது' என, கணவரிடம் தகராறு செய்தார். மனைவியின் பேச்சால் பயந்த பக்கப்பா, தாயை பீதரின் லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்துள்ளார். அவ்வப்போது வந்து பார்த்துச் செல்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக, சுசீலம்மா லாட்ஜில் வசிக்கிறார். மூன்று மகன்கள் இருந்தும், கடைசி காலத்தை லாட்ஜில் கழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதை நினைத்து, கண்ணீருடன் காலத்தை கடத்துகிறார். மூதாட்டியின் மகன்களை பொது மக்கள் கண்டித்துள்ளனர். 'நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு, தாயை வீதியில் தள்ளிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை கைப்பற்றி மீண்டும் தாயின் பெயருக்கு மாற்ற வேண்டும்' என, போலீசாரிடம் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி