உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உடுப்பி கடலில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி சிர்சியில் ஆற்றில் மாயமான வாலிபர்

உடுப்பி கடலில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி சிர்சியில் ஆற்றில் மாயமான வாலிபர்

பெங்களூரு: உடுப்பிக்கு சுற்றுலா சென்ற பெங்களூரை சேர்ந்த மூன்று பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். சிர்சியில், அருவியில் குளிக்க சென்ற இளைஞர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பெங்களூரை சேர்ந்த 18 - 20 வயதுடைய கல்லுாரி மாணவர்கள் 10 பேர், உடுப்பிக்கு கடந்த 6ம் தேதி சுற்றுலா சென்றனர். நேற்று முன்தினம் மதியம், 1:40 மணிக்கு ஒன்பது மாணவர்கள் கோபடி செர்ரிகாடு கடற்கரைக்கு சென்று, கடலில் இறங்கி விளையாடினர். அப்போது நிரூப், 19, லோகேஷ், 19, கவுதம், 19, ஆசிஷ், 18, ஆகிய நால்வர் கடல் அலையில் சிக்கினர். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த உமேஷ் என்பவர், நிரூபை மீட்டார். மற்ற மூவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து குந்தாபுரா போலீசாருக்கும், மீட்பு குழுவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த மீட்புக் குழுவினர், மூன்று மாணவர்களின் சடலங்களை மீட்டனர்.  விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டை சேர்ந்தவர் சீனிவாஸ், 21. உத்தர கன்னடா மாவட்டம், சிர்சியில், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவரும், இவரது நண்பர்கள் ராகுல், தர்ஷன், பீமப்பா ஆகியோர் சிர்சியில் உள்ள பென்னிஹொலே நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். 'நீர்வீழ்ச்சி அருகில் செல்ல வேண்டாம்' என்ற எச்சரிக்கை பலகையை மீறி சென்றனர். கால்களை கழுவுவதற்காக நீர்வீழ்ச்சியில் காலை வைத்தபோது, நீரின் வேகத்தில் சீனிவாஸ் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயற்சித்த ராகுலும் அடித்துச் செல்லப்பட்டார். ஆனால், ராகுலின் கால், இரு பாறைகளுக்கு நடுவில் சிக்கியது. இதை பார்த்த தர்ஷன், பீமப்பா, ராகுலை மீட்டு, சிர்சி ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மீட்பு குழுவினர், சீனிவாஸ் உடலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி