கோழிக்கறி சாப்பிட்ட 33 மாணவியர் மருத்துவமனையில் அட்மிட்
யாத்கிர்: யாத்கிரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மகளிர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 33க்கும் மேற்பட்ட மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாத்கிர் மாவட்டம் குர்மித்கல் நகரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மகளிர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு 150 மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மாணவியரு க்கு கோழிக்கறி, சப்பாத்தி, சாதம் பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவியர் வாந்தி, வயிற்றுபோக்கு, வயிற்று வலியால் அவதிப்பட்டனர். உடனடியாக 33 மாணவியர், குர்மித்கல் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்று மாணவியர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த அரசு, தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களும், பயிற்சி மாணவர்களும் சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர். மாணவியரின் உடல் நிலையை பார்க்கும்போது, உணவு விஷமாகியிருக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஹர்ஷல் போயர் உட்பட அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. உணவு பாதுகாப்பு துறையினர், சமையல் அறை, சேமிப்பு, துாய்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். குர்மித்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.