இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த 4 பேர் கைது
ஹாவேரி: 'இன்சூரன்ஸ்' பணத்திற்காக திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, விபத்து போல நாடகமாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஹாவேரி மாவட்டம், ரட்டிஹள்ளியை சேர்ந்தவர் பசவராஜ், 38. இவருக்கு திருமணமாகவில்லை. பெற்றோர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரது பெயரில் 8 ஏக்கர் நிலம் இருந்தது. அதுமட்டுமின்றி விபத்து காப்பீடும் எடுத்திருந்தார். விபத்து காப்பீட்டுக்கு பாதுகாவலராக தன் மாமா ராகவேந்திராவை பசவராஜ் நியமித்திருந்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி தன் வீட்டுப்பகுதியில் உள்ள சாலையோரம் பசவராஜ் இறந்து கிடந்தார். இது குறித்து ரட்டிஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதலில் விபத்து என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின், இறந்த பசவராஜின் அண்ணன் சிவகுமார் போலீஸ் நிலையத்தில் தன் தம்பியை யாரோ கொலை செய்திருக்காலம் என சந்தேகம் தெரிவித்தார். தன் தம்பியை கொலை செய்து இன்சூரன்ஸ் பணம், சொத்துகளை அபரகரிக்க சிலர் முயன்றதாக புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., யசோதா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டது. விசாரணையில், பசவராஜ்ஜின் மாமா ராகவேந்திரா இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக, அவரை திட்டமிட்டு கொலை செய்தது தெரிந்தது. இந்த கொலையில் ராகவேந்திராவுக்கு உதவிய சித்தனகவுடா ஹலகேரி, பிரவீன், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.