சிறுமியை பலாத்காரம் செய்த காதலன் உட்பட 4 பேர் கைது
ஹாவேரி: ஹாவேரியில் சிறுமியை பலாத்காரம் செய்த காதலன், அவரது நண்பர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.ஹாவேரி மாவட்டம், ஷிகாவியின் பனகாபூரை சேர்ந்த 15 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த கோனிருத்தா ஷிகட்டி, 24, என்பவரும் காதலித்து வந்தனர். சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து, அவரை கோனிருத்தா பலாத்காரம் செய்துள்ளார். இதில், சிறுமி கருவுற்றார். இதை அறிந்த கோனிருத்தா, கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தார். இவ்விஷயத்தை தன் நண்பர்கள் மஞ்சுநாத் ஷிகட்டி, 23, அன்னப்பா ஆனந்தப்பா கப்பூர், 23, தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சிறுமியை, மஞ்சுநாத் ஷிகட்டி, அன்னப்பா ஆகிய இருவரும் சந்தித்தனர். 'உங்களின் காதல், கருக்கலைப்பு விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவித்து விடுவோம்' என மிரட்டி, இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.இதையறிந்த இக்கிராமத்தை சேர்ந்த மூத்தவர்கள் லட்சுமணா கபனுாரா, மாருதி ஷிகட்டி ஆகியோர் சிறுமியின் பெற்றோரிடம் சமரசம் பேச முற்ப்பட்டனர்.கோபமடைந்த சிறுமியின் தாய், பனகாபூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், கோனிருத்தா ஷிகட்டி, மஞ்சுநாத் ஷிகட்டி, பஞ்சாயத்து கூட்டிய லட்சுமணா கபனுாரா, மாருதி ஷிகட்டி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அன்னப்பாவை தேடி வருகின்றனர்.சிறுமியின் தாய் கூறுகையில், ''என் மகளுக்கு திருமண வயது எட்டியவுடன், அவர் காதலித்த நபருக்கே திருமணம் செய்து வைப்பேன். ஆனால், காதலனின் நண்பர்கள் செய்த கொடுமைக்கு, அவர்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்,'' என்றார்.