பெங்களூரில் அரசு பஸ்சில் தீ உயிர் தப்பிய 75 பயணியர்
ஹெச்.ஏ.எல்.: பெங்களூரின் நடு ரோட்டில் பி.எம்.டி.சி., பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் சாமர்த்தியத்தால் 75 பயணியர் உயிர் தப்பினர். பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து காடுகோடிக்கு, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பி.எம்.டி.சி., பஸ் புறப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. 75 பயணியர் இருந்தனர். ஹெச்.ஏ.எல்., கேட் பகுதியில் 5:15 மணிக்கு, பஸ் சென்று கொண்டிருந்தபோது இன்ஜினில் இருந்து திடீரென புகை அதிக அளவில் வந்தது. பஸ்சை நிறுத்திய ஓட்டுநர், உடனடியாக கீழே இறங்கும்படி பயணியரை கேட்டுக் கொண்டார். பயணியரும் பதறி அடித்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து மளமளவென எரியத் துவங்கியது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. புகை வந்ததும் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு, பயணியரை கீழே இறக்கியதால் 75 பயணியரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ் தீப்பிடித்த இடம் மாரத்தஹள்ளிக்கு செல்லும் முக்கிய சாலை. இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதிகாலை நேரம் என்பதால், அங்கு வாகனங்கள் குறைவாக சென்றன. இதனால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஹெச்.ஏ.எல்., போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.